சுவாமி விவேகானந்தர்

விக்கிமேற்கோள் இலிருந்து
விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்

சுவாமி விவேகானந்தர் (சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

சுவாமி விவேகானந்தரின் கைரேகைகள்
  • பலமே வாழ்வு; பலவீனமே மரணம்
  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
  • எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.
  • நன்று பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்.
  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?
  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
  • எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
  • தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
  • பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
  • மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.
  • 'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
  • ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
  • ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும். அவரது வாழ்வையும் உபதேசங்களையும் எங்கும் பரப்ப வேண்டும்; இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு மயிர்க்காலினூடேயும் அவற்றை ஊடுருவச் செய்ய வேண்டும்.
  • எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.
  • நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.
  • நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
  • இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
  • மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
  • ‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
  • நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
  • பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்
  • எல்லா நாகரிகங்களுக்குள் அடிப்படை சுயநல தியாகமே.
  • உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
  • வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும்.
  • ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
  • தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான்-சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.[1]
  • என்னைப் புகழாதே. இந்த உலகில் புகழுக்கும் இகழுக்கும் மதிப்புக் கிடையாது. ஊஞ்சலை ஆட்டுவது போல ஒரு மனிதனை, புகழின் புறமாகவும், இகழின் புறமாகவும், இங்கும் அங்கும் ஆட்டுகின்றார்கள்.[2]

தமிழர் பற்றி விவேகானந்தர்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. The Madras Presidency is the habitat of that Tamil race whose civilisation was the most ancient, and a branch of whom, called the Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in very ancient times; whose astrology, religious lore, morals, rites, etc., furnished the foundation for the Assyrian and Babylonian civilisations; and whose mythology was the source of the Christian Bible. Another branch of these Tamils spread from the Malabar coast and gave rise to the wonderful Egyptian civilisation, and the Aryans also are indebted to this race in many respects.
  4. Vivekananda. MEMOIRS OF EUROPEAN TRAVEL. http://www.ramakrishnavivekananda.info. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சுவாமி_விவேகானந்தர்&oldid=36780" இலிருந்து மீள்விக்கப்பட்டது