மணியம்மை

விக்கிமேற்கோள் இலிருந்து
  • இராவண லீலா என்பது வடவரின் இராமலீலாவின் எதிரொலி, தவிர்க்க முடியாத விளைவு என்பதையும் அதன் பின்னால் கோடிக்கணக்கான தமிழர்களின் மானமும், மரியாதையும், கவுரமும், உணர்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பதையும் மிக நல்ல வண்ணம் தந்தையின் தனிச்சிறப்பு வாய்ந்த தனயன் என்ற முறையில் தமக்கே உரித்தான தனித்திறமையோடு சுட்டிக்காட்டி இருக்கிறார் அறிஞர் அண்ணா.
  • பாரதியாரின் கவிதைகளில் நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கலைப்பற்று, கடவுள்பற்று பற்றிய பாடல்களில் ஆரியப்பற்றே காணப்படுகிறது.
  • தமிழர்களுக்கு மானம் இருந்தால், தமிழ்நாடும், தமிழ்மொழியும் இழிநிலையையும் ஆரியர் ஆதிக்கம் உயர்நிலையையும் அடையுமா?
  • இந்து மதத்தில் மட்டும்தான் மனிதனை மனிதன் பிரித்துக் காட்டி கீழ்-மேல், உயர்வு-தாழ்வு என்ற இழிநிலை உள்ளது.
  • இந்து மதத்தில் அன்பு, சமத்துவம், சமரசம் இருப்பதாக சொல்வதோடு சரி, அவற்றைக் கடைபிடிப்பது இல்லை.
  • பஞ்ச பூதங்களையும், கிரகங்களையும், அறியாமையினால் தேவர்கள் என்று எத்தனையோ காலத்துக்கு முன் ஒரு பைத்தியக்காரன் எழுதி வைத்ததையெல்லாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் நம்பிக்கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தால் அவரைப்போல் சர்வ முட்டாள் யாரும் இல்லை.
  • நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது உழைத்து, மக்களுக்குப் பகுத்தறிவைப் போதித்து, பெரியாரின் கொள்கை பரப்பி தொண்டு செய்வதே, நம் வாழ்நாள் லட்சியமாகும்.
  • நம்முடைய பொருளாதார இழிவும், நமக்கு நம் நாட்டு உரிமையற்ற தன்மையும் ஒழிந்து நாமெல்லோரும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது.
  • பெண்களே! அடுப்பூதும் அணங்குகளாக அடைப்பட்டுக் கிடக்கும் பெண்டிராகவே காலங்கழிக்கக் கூடாது.
  • தந்தை பெரியார் தமிழர்களின் பொதுச்சொத்து, கூட்டங்களுக்குப் பேசக் கூப்பிட்டால் வந்து விடுவார், சாப்பாடு கொடுத்தால் சாப்பிட்டு விடுவார், இந்த இரண்டிலும் அவர் குழந்தையே.
  • நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதி முறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும்.
  • வீட்டிற்குள் சிறைப் பறவையாய் இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டு வந்தவர்தான் தந்தை பெரியார்.
  • மந்திரி வேலையைவிட மணியடிக்கிற வேலைக்கு புத்தி அதிகம் வேண்டியதில்லை.
  • அர்ச்சகர் ஆவதற்கு அறிவு தேவையில்லை; பிறவிதான் தகுதி. பார்ப்பனாத்தி வயிற்றில் பிறந்தவன் எவனாயிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது பார்ப்பன ஆதிக்கம்.
  • திராவிடர் கழக கொள்கைகளிலே இருக்கின்ற நியாயங்கள், உண்மைகள் இவைகளால் கவர்ந்து இழுக்கப்பட்ட பலன் கருதாத, பின் விளைவினைக் கண்டு பயப்படாத வீரர்களாகிய தொண்டர்களின் அயராத உழைப்பினாலே உருவானதாகும்.
  • ஜாதி ஒழிய வேண்டுமென்றால், ஜாதியைக் காக்கும் அரசியல், சட்டப்பகுதி திருத்தப்பட வேண்டியது அவசியம்.
  • நமது நாட்டைப் பொறுத்தவரை தொழிலாளர்கள் என்பவர்கள் நாலாஞ் ஜாதி சூத்திர மக்களாகிய தமிழ் மக்கள்தான்.
  • மேல் ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களில் தொழிலாளர்கள் எவரும் இல்லை. ஆனால், நம் நாட்டு விசித்திரங்களில் ஒன்று - தொழிலாளர் தலைவர்களாகப் பார்ப்பனர்களே இருந்து வருவது.
  • திராவிடர் கழகம் பலாத்காரத்திலோ, இரகசிய முறைகளிலோ, பொதுச் சொத்தை - பொது ஒழுக்கத்தை நாசம் செய்யும் கிளர்ச்சி முறைகளிலோ சிறிதும் நம்பிக்கையற்ற மாபெரும் மக்கள் இயக்கம்.
  • போலி தேச பக்தி, ஒருமைப்பாடு ஜம்பம் நம் இளைஞர்களை வயிற்றுச்சோற்றுக்குத் திண்டாடுபவர்களாக்கி பிறகு வன்முறையாளர்களாகவும், காலிகளாகவும் ஆக்கிவிடக்கூடது.
  • பிரச்சாரத்திற்க்காகப் போகிற இடத்தெலெல்லாம் மாணவர்கள் அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும். போகிற இடங்களிலெல்லேம் சவுகரியங்களை எதிர்பார்க்காமல், ஏற்படக்கூடிய அசவுகரியங்களை லட்சியம் பண்ணாமல் பணியாற்ற வேண்டும்.
  • நாம் அணியும் கருஞ்சட்டை - நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூட நம்பிகையை ஒழிப்பவர்கள் என்பதை அடையாளப்படுத்துவதோடு, பெரியாரின் தொண்டர்கள் என்று பாராட்டுவதாக இருக்கட்டும்.
  • பெண்கள் மூடநம்பிக்கை மீதுள்ள பற்றுதலை முதலில் விட்டொழிக்க வேண்டும். தாங்கள் பெற்று வளர்க்கும் பிள்ளைகளையும் மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்.
  • திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு சமுதாய அறிவு இயக்கமாகும்.
  • ஜாதியற்ற சமுதாயம், மூட நம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர நமக்கு வேறு லட்சியம் இல்லை என்பது நமக்கு துணிவும், தெளிவும் தரும் கொள்கைக் கவசங்கள்.
  • இந்த நாட்டுக்குரிய பூர்விக மக்களை பிழைப்பைத் தேடி வந்த ஒரு கூட்டம் தங்களின் இழிபிறவி வைப்பாட்டி மக்கள் என்று நிலை நிறுத்திய கொடுமை உலகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாத ஒரு பெரும் கொடுமையாகும்.
  • எதனையும் இலவசமாகச் சும்மா பெறுவதைவிட விலை கொடுத்துப் பெறுவது மதிப்பும் மரியாதையும் வாய்ந்தது.
  • எப்படியும் நம்மை ஒழித்துக் கட்டிவிட எதிரிகள் நம்மீது ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தோழர்களே, நீங்கள் தற்காத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்களாக!
  • உலக அரங்கில் திராவிடர் கழகம் ஓர் அதிசயமான இயக்கம். ஆனால் அதே நேரத்தில் அது மிகவும் அவசியமான இயக்கமுமாகும்.
  • தந்தை பெரியாரின் தொண்டர்கள் நடத்தும் எந்தக் கிளர்ச்சியும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும்; பொதுச் சொத்துக்கு நாசமோ; பொது மக்களுக்கு இடையூறோ, பொது ஒழுக்கத்திற்குச் சிறிதும் கேடோ இன்றி நடக்கும் என்பது நாடறிந்த உண்மை.
  • அரசியல் கட்சிகளுக்கு ஆயுள் அற்பமானது. இந்தச் சமுதாய இயக்கமோ மனிதப் புல் பூண்டு உள்ள வரை அதன் நிழலோடு நிழலாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியது.
  • சர்க்கரைப் பேச்சு பேசி, சாதுர்யமாக மக்கள் கையில் உள்ள வாக்குச்சீட்டைப் பறிப்பதுதான் ஜனநாயக அரசியல்வாதிகளின் பொதுத்தொண்டு.
  • பெரியார் எதை எடுத்தாலும் சிந்தித்தேதான் முடிவு எடுத்துச் செயல்படுவார்களே தவிர, எதையும் அவர்கள் கனவாக நினைப்பதே இல்லை.
  • கசப்பான மருந்து தந்து, தேவைப்பட்டால் கத்தியை எடுத்து அறுவை சிகிச்சையும் செய்து நோயாளியை எப்படியும் பிழைக்க வைக்கும் எதிர் நீச்சல் தொண்டே எங்கள் இயக்கத் தொண்டு.
  • வீட்டார் எதிர்ப்பு, தெருவார் எதிப்பு, ஊரார் எதிர்ப்பு என்றளவில் எங்களுக்கு இருக்கும் எதிர்ப்பின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
  • கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும் அறிவு ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறது.
  • நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக சாஸ்திரங்கள் என்ற பெயரில் கூறப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சாஸ்திரங்களைப் பெண்கள் ஒருபோதும் மதிக்கவே கூடாது; ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும்.
  • ஓர் அரசியல் கட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தம் கொள்கையின் அடிப்படையில்தான். ஒரு கட்சியை ஆதரித்துத்தான் தீர வேண்டும் என்கிற அவசியமோ, ஆத்திரமோ, எதிர்த்தே தீர வேண்டும் என்ற வெறியோ, பகைமையோ எங்களுக்கு என்றைக்கும் இருந்தது கிடையாது.
  • வீட்டில் இருப்பவர்களை முதன் முதலில் நாம் திருத்தி விட்டால் சுலபமாக நாட்டிலும் நம் காரியத்திலும் வெற்றி பெற்றுவிட முடியும்.
  • சுத்த வீரன் எப்பொழுதும் வீரனாக மடிவானே தவிர கோழையாக மடியமாட்டான்.
  • அமைச்சர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் அரசாங்க ஊழியர்கள் அப்படி அல்லவே ஆட்சியை நடத்திச்செல்லும் இயந்திரம் அரசு ஊழியர்கள்தானே! அத்தகைய இயந்திரத்தைப் பழுதுபடுத்த அந்த இயக்குநரே முயன்றால் அதன் விளைவு பயணிகள் மீது கோபப்பட்டு வேண்டுமென்றே பேருந்தை மரத்தின் மீது மோதுவது போன்றது. அதனால் வரும் ஆபத்து, பயணிகளுக்கு மட்டுமல்லவே; ஓட்டுநருக்கும்தானே!
  • தந்தை பெரியாரின் இயக்கம் தன்னலமற்றது; யாரும் தகர்த்தெறிய முடியாதபடி அசைக்க முடியாதது.
  • பார்ப்பனர்கள் எப்போதும் மரத்திற்குப் பின் மறைந்து நின்று செயல்படும் இராமனைப்போல், எதற்கும் பின்னால்தான் இருப்பார்கள். நமது சுக்ரீவர்களும், அனுமார்களும், விபீஷணர்களும் தான் குதியாட்டமும் கும்மாளமும் போடுவார்கள். இது அன்றைய இராமயணக் காலம் தொட்டு இன்றைய இராவண லீலா காலம் வரை பளிங்கு போல் தெரியும் சரித்திர உண்மையாகும்.
  • தலைமகனுக்கும், தந்தைக்கும் (அண்ணா, பெரியார்) பிறந்த நாள் விழா கொண்டாடுவதே தமிழர்களின் திருவிழாக்களாக இருக்கட்டும்!.
  • ஒருவருக்குச் சிலை எடுக்கிறோம் என்றால், அந்தச் சிலைக்குரிய மனிதரின் தொண்டுகளை உலகிற்குச் சுட்டிக்காட்ட எழுப்பும் வரலாற்று நிகழ்வு.
  • கந்தபுராணமும், இராமயணமும் ஒரே தத்துவத்தைக் கொண்டு ஆரியர்களை உயர்த்தியும், திராவிடர்களை இழிவுபடுத்தியும் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட கட்டுக்கதை.
  • அருமைத் தந்தையின் நினைவு நாளையொட்டி நமது இயக்கத் தோழர்கள் பகுத்தறிவாளர்கள், இவர்களைக் கூட்ட, மாபெரும் இன எழுச்சிப் பெருவிழா -இராவணலீலா நடத்தி அதில் நாம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்தே தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மணியம்மை&oldid=10606" இலிருந்து மீள்விக்கப்பட்டது