பெரியார்
Appearance
- “ நான் சொல்வதையும் நம்பாதீர்கள். உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ அதை நம்புங்கள். நான் சொன்னதைக் கேட்ட பிறகு, உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டால், அதை ஏற்று கொள்ளுங்கள். இல்லையானால் கைவிட்டு விடுங்கள். தள்ளி விடுங்கள்”
- “பொதுவுடைமை எவ்வளவு முக்கியமோ அதுபோல, பொது உரிமை என்பது இந்த நாட்டைப் பொறுத்த வரையிலே மிக முக்கியம்”
- “திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, இந்த மக்களை, மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே பணி; அந்தத் தொண்டை நான் ஏன் என்மேல் போட்டுக் கொள்கிறேன்? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று நீங்கள் கேட்கலாம். வேறு எவரும் செய்ய முன்வராததாலேயே நான் செய்கிறேன். எனக்கு அந்த ஒரு தகுதியே போதும்”
- “சந்தைக்குப் போகிறீர்கள் அல்லவா? முடிச்சவிழ்க்கின்றவன் மூன்று பேர்தானே இருப்பான். அதற்காக, உங்களுடைய பையைப் பத்திரம், பத்திரம் என்று ஏன் இறுக்கிப் பிடித்துக் கொண்டு போகிறீர்கள்?”
- “நீங்கள் அதிகமாக பெண்களுக்கு உரிமைகள் கொடுக்க வேண்டாம். ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ, அந்த உரிமைகள் பெண்களுக்கும் இருந்தால் போதும்”
- “வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போவதற்குள்ளாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை தீரவேண்டும். அப்படித் தீரவில்லை என்று சொன்னால், இந்த நாட்டிலே ‘பிராமினோகிரசி’ தான் வரும். பார்ப்பன நாயகம் தான் வரும்”
- “காஷ்மீரிலே இருக்கின்ற பார்ப்பனனுக்குத் தேள் கொட்டினால், கன்னியாக்குமரியிலே இருக்கின்ற பார்ப்பானுக்கு நெறிகட்டும்”
- “ஜீவகாருண்யம் என்று சொன்னால், மாட்டுக்கு தார்க்குச்சி போட்டுக் குத்தக்கூடாது என்பதற்காக அவன்மீது நடவடிக்கை எடுக்கிறான். ஆனால், மனிதனைக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி நடத்துக்கிறானே அதைப்பற்றி இந்த நாட்டிலே எவன் கவலைப்படுகிறான்?”
- “நீங்கள் உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டு பெண்களுடைய சமத்துவத்தைப் பற்றி நினைக்காதீர்கள்”
- “கடவுளைப் பற்றி ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டது இல்லை. எந்தக் காலத்திலும் நம்பிக்கையும் வந்ததில்லை; பயமும் வந்ததில்லை. நான் செய்ய வேண்டும் என்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பார் என்றோ, கடவுள் தண்டிப்பாரே என்றோ கருதி எந்தக் காரியத்தையும் செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். எனது வாழ்நாளில், என்றைக்காவது சாதியையோ, மததைத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னமும் யோசிக்கிறேன். அப்பொழுதிலிருந்து, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். கண்டுபிடிக்க முடியவில்லை”
- “முட்டாள் தனத்திலிருந்து இந்த மக்களை விடுவிக்க வேண்டுமே என்ற பொறுப்பு உணர்ச்சியோடு நான் சொல்லுகின்றேன். உங்களை திருத்தி என்னுடைய வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத் தான் நான் வந்திருக்கிறேனே தவிர உங்கள் பின்னாலே நான் வந்தேன் என்று சொன்னால் எனக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அறிவும் போய்விடும்”
- “எந்த சமுதாயத்துக்காக நாம் பாடுபடுகிறோமோ அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நமது மக்கள் நம்மை ஏறெடுத்துப் பார்க்கக்கூட இன்னும் தயாராக இல்லையே”
- “எனக்கு வயதாகிவிட்டது என்று அமைச்சர் கூறியிருக்கிறார். எனக்குத்தான் வயதாகி விட்டதே தவிர, எனது இயக்கத்திற்குமா வயதாகிவிட்டது?
- “கடவுள் வந்து விட்டார் என்று சொன்னால், ‘இருக்கிறார்’ என்று சொல்லி விட்டுப் போவோம். நமக்கு என்ன நட்டம் அதிலே”
- “இதற்கு முன்பெல்லாம் பொதுக் கூட்டங்களில் நான் பேசும்போது, என் மீது சாணி விழும், மலம் விழும், கற்களை, செருப்புகளை என்மீது வீசுவார்கள், ஆனால், இன்றைக்கு நீங்கள் மாலை போடுகிறீர்கள், காசு கொடுக்கிறீர்கள். இப்பொழுது எனக்கே என் மீது கொஞ்சம் சந்தேகம் ஏற்படுகின்றது. நாம் கொள்கையிலிருந்து நழுவி விட்டோமோ என்று நினைத்துப் பார்த்தேன். இல்லை; இல்லை; மக்களுடைய அறிவு வளர்ந்திருக்கிறது. பக்குவப் பட்டிருக்கிறார்கள் என்பது இப்பொழுது தோன்றுகிறது”
- “தற்குறியில் இரண்டு வகையான தற்குறிகள் இருக்கிறார்கள். ஒன்று படித்த தற்குறி; மற்றொன்று படிக்காத தற்குறி. படிக்காத தற்குறி தனக்குத் தெரியாததைத் ‘தெரியாது’ என்று சொல்லுவான். இந்தப் படித்த தற்குறி இருக்கிறானே தனக்குத் தெரியாது என்பதே இவனுக்குத் தெரியாது”
- “எனக்குக் கருத்துக்கள் தான் முக்கியம். அதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்பது மட்டும் அல்ல. எங்கே போனாலும், கருத்துக்களுக்குத்தான் மரியாதை கொடுக்கக் கூடியவனே தவிர, வெறும் எழுத்தாளர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடியவன் அல்ல; எழுத்தாளர்கள் எல்லாரும் கருத்தாளர்களாக இருந்தால்தான் இந்தச் சமுதாயம் பயன் அடையும்”
- “முட்டாள்தனம் என்ன உனக்கே சொந்தம் என்று நினைத்தாயா? அது உலகத்துக்கே சொந்தம்”
- “வலது கால் மட்டும் என்ன நல்ல கால், இடது கால் நொண்டிக்காலா? இவன் காலிலேயே பிரித்து விட்டானே. அப்புறம், ஆளிலே ஏன் பிரிக்க மாட்டான். இராணுவத்திலே கூட இடது காலைத் தான் முதலில் வைக்கச் சொல்லுகிறார்கள். அவன் நாட்டையே காக்கிறான்”
- “பெண்களுக்குச் சமவாய்ப்பை உண்டாக்கி விட்டோமேயானால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவிகிதம் என்ற நிலையை உருவாக்கி விட்டால், எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன என்ற நினைப்பை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்”
- “தகுதி என்ன தகுதி, வெங்காயம் நாலு தடவை திருப்பிச் செஞ்சா எந்தத் தொழிலும் பழக்கமாயிட்டுப் போகுது. ஒரு முட்டாள் பத்து வருஷம் ஒரே தொழிலைச் செய்தால், அந்தத் தொழிலில் திறமைசாலி ஆயிடறான்”
- “மூன்று வேளை சாப்பிடுகிறேன். எனக்குத் துணிமணிக்கு இவ்வளவு செலவாகிறது. இதற்கு எல்லாம் நான் ஏதாவது செய்ய வேண்டாமா? அதற்குப் பயன்பட வேண்டாமா? தொண்டு ஆற்ற வேண்டாமா? சும்மா சாப்பிட்டுக் கொண்டிருந்தேனேயானால் மனித குலத்துக்கு தண்டம் அல்லவா? சமுதாயத்திற்கு அதைவிட வேறு தண்டனை வேண்டுமா?”
- “மழை பெய்வது பொது நலம். குடை பிடிப்பது சுயநலம்”
- “தமிழ் மக்களுக்கு பகுத்தறிவு உணர்வு தோன்றிவிடுமானால் தமிழ் இசை தானாகவே வந்துவிடும்”
- “இன்னின்ன முறையில்தான் இந்த மணமுறையை நடத்தவேண்டும் என நான் வரையறுக்கவில்லை. ஏனென்றால், இன்றைக்கு எது தேவை என்ற கருதுகிறோமோ அது. நாளைக்குத் தேவை இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு பகுத்தறிவினுடைய வளர்ச்சி, மனித குலத்தினுடைய வளர்ச்சி, எதிர்காலத்தில் திறனுடைய சிறப்பு ஆகக்கூடும். ஆகவே, இந்தச் சூழ்நிலைக்கு இன்னமுறை என்று அமைய வேண்டும்”
- “பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா என்பதைப் பார்க்கும்போது, எனக்குப் பக்தி இல்லாததினாலே யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. பக்தி இல்லாததினாலே ஆத்திகர்கள் சொல்கிறபடி, நான்தானே நரகத்திற்கும் போவேன். ஆனால், நான் ஒழுக்கம் இல்லாதவனாக இருந்தால், என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன், எந்த நேரமும் என்னைப் பார்த்துக்கொண்டு நான்கு கதவையும் சாத்தி வைத்துக் கொண்டு பாதுகாப்போடு தானே இருக்க வேண்டும்”
- “ஈ.வெ. இராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்யதை’ இருக்கிறதா இல்லையோ, இந்தநாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததனால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்”
- சிலப்பதிகாரம் விபசாரத்தில் தொடங்கிக் கற்பில் வளர்ந்து முட்டள்தனத்தில் முடிந்தது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...