கா. ந. அண்ணாதுரை

விக்கிமேற்கோள் இலிருந்து
ஒன்றே குலம், ஒருவனே தேவன்.

அறிஞர் அண்ணா என அறியப்படும் சி. என். அண்ணாத்துரை தமிழக அரசியல்வாதியும் அறிஞரும் ஆவார்.

  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
  • ஒன்றே குலம், ஒருவனே தேவன்.
  • நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்.
  • கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்.
  • ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
  • எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்
  • வன்முறை இருபுறம் கூர்மையான ஆயுதம்
  • பழமை புதுமை என்ற இரு சத்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரிலே உபயோகமாகும் போர்க் கருவிகள்.
  • ஒரே குடும்பத்தின் மணிகளிலே ஒன்று மாணிக்கமாக்கப்பட்டு மற்றொன்று, மண்ணாங்கட்டியாக்கப்படுகிறது. சொத்து சுதந்திரம் ஆணுக்கு, சமயற்கட்டிலே வேகவும், சயனக்கிரகத்தில் சாயவும் பெண்.
  • ஒரு சனநாயக சமுதாயத்தில், கருத்துக்களைச் சொல்வதற்கு தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
  • பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும், மனத்திலுள்ள மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும்.
  • பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட புறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
  • நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்தில் புது முறுக்கு ஏற்படும்.
  • விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு, தீங்கு.
  • பழைய காலத்தைப் போல நாம் நடக்க முடியாது. நடக்கத் தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராக்கிக்கொள்ளவேண்டும்.
  • தீர்ப்பு என்றாலே அது நியாயமானது என்று பலர் நினைக்கிறார்கள். தீர்ப்பு நியாயமானது முடிவானது என்றால் மீண்டும் நாம் அதற்கு மேலுள்ள நீதி மன்றங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்?
  • நாள், கோள், நட்சத்திரம், சகுனம், சாத்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடை கற்கள்
  • மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும்.
  • சலிப்பு வருகிற நேரத்தில் வள்ளுவரின் உருவத்தை ஒரு முறை பார்த்தால், வந்த சலிப்பு பறந்துபோகும். சந்தேகம் வரும்போது திருக்குறளில் காணப்படும் கருத்துக்களை எண்ணிப்பார்த்தால் வந்த ஐயப்பாடுகள் நீங்கிவிடும்.
  • எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன் தரமாட்டா.
  • சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்தப் பிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை! - (வேலைக்காரி - நாடகம்)
  • பொதுவாழ்விலே எரிமலை- அலைகடல்- பூகம்பம்- தீ எல்லாம் உண்டு! அவைகளிலே வெந்தும் சாம்பலாகாத சித்தம் இருக்க வேண்டுமே! அதற்கான சக்தியைப் பெற வழிதேடு! ஓடாதே! எதிர்த்துச் செல்!
* அமெரிக்காவிலே ஹரிசன் முதலியார் என காணமுடியுமா? லண்டனிலே கிரிப்ஸ் செட்டியார் உண்டா? விஞ்ஞானத் தோடு போட்டியிட்டு நாள்தோறும் பலவித அற்புதங்களைக் கண்டுபிடித்து வரும் மேல்நாட்டவர்க்கு ஜாதி வித்தியாசமும்- ஜாதிபட்டங்களும் அவசிய மானதென்று தெரிந்தால் அவர்கள் நம்மைவிட அதிக ஜாதிகளை உண்டாக்கியிருக்கமாட்டார்களா?
* பயபக்தியுடன் நீங்கள் கும்பிட்டு வணங்கும் விநாயகர் யார்? மூவறான முதல்வர் என்று சைவர்கள்மார்தட்டிக் கூறிக்கொள்ளும் முக்கண்ணனாரின் மைந்தன்! கடவுன் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர் என்று பொருள்! ஆனால், இங்கோ கடவுளுக்குக் குடும்பம், பிள்ளைக் குட்டி, பரத்தை முதலிய எந்தப் பாசமும் இல்லாமலில்லை.
  • தூற்றலைக் கண்டு தழும்பேறிவிட்ட கழகம் தி.மு.கழகம் நம் கொள்கைகள், நியாயமானவை! நாம காட்டுகின்ற பூகோளம் புள்ளி விபரங்களும், சரித்திரச் சான்றுகளும் நாமே தீட்டிக் கொண்டதல்ல! கல்வெட்டுக்களிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
  • குருடர் பலர், யானையைக் கண்டனர், தடவிப்பார்ப்பதன் மூலமே! ஒரு குருடனுக்கு யானை உரலாக இருந்தது- அவன் காலைத் தொட்டுப் பார்த்தான். இன்னொருவனுக்கு யானை துடைப்பம் போல் இருந்தது-அவன் வாலைத் தொட்டான்! இப்படிக் கதை உண்டல்லவா? அதுபோல நமது திட்டத்தின் முழு உருவையும் பொருளையும் தெரிந்து கொள்ளாதவர்கள், தத்தமது பார்வைக்குட்பட்ட பகுதி மட்டுமே நமது திட்டம் என்று கருதிக் கொண்டு பேசுவர். ஏசுவர்!
  • மதமெனும் முள்ளில் கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது, உணவெனக் கருதிச் சுவைத்திடச்சென்று அவ்வழி- ஆரியத்தூண்டிலிற் சிக்கி, வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர். தமிழர்.
  • மலையுச்சியிலிருந்து விரைந்து வரும் பேராறுகள் போல, கட்டுரைகள் ஜோலாவின் பேனா முனையிலிருந்து கிளம்பின!
  • கைகூப்பி, காலில் விழுந்தாகிலும், காலித்தனம் செய்வோரை, இந்தச் சிறுசெயலில் ஈடுபடாதீர்கள்; செம்மையாக வளர்ந்து வரும் தி.மு. கழகத்துக்கு இழுக்குத் தேடாதீர்கள்- என்று வேண்டிக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
  • கழகத்துக்கு- எத்தனை புதிய உறுப்பினர்களைச் சேர்த்தோம்- புதிய கிளைகள் அமைத்தோம்-என்ற கணக்குத்தான், நீங்கள் பெற்றளித்துப் பெருமையும் பெருமகிழ்ச்சியும் பெறவேண்டியதாகுமேயன்றி, வீசிய கற்கள், செருப்புகள் என்று மாற்றார் காட்டும் கணக்கு, நமக்குத் தலை இறக்கத்தைத்தான் தரத்தக்கதாகம் என்பதை உணர வேண்டும்.
  • கோபத்தால் கொந்தளிப்பது, கசப்புணர்ச்சியால் கல் வீசுவது என்பவைகளில் எவர் ஈடுபடினும், அவர்கள் தம்மையும் அறியாமல் தாம் வளர்த்த கழகத்துக்குத் தாமே இழிவையும், பழியையும் தேடித் தருகிறார்கள் என்பது தான் பொருள்!
  • கலகம் விளைவித்தல், கல்வீசுதல், கூட்டத்தில் குழப்பம், காலணி வீசுதல் போன்ற காட்டுமிராண்டித்தனம்- நாம் துவக்க முதற்கொண்டுள்ள தூய்மையான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவைகளைக் கேலிக்கூத்து ஆக்கிவிடும் சிறுமைச் செயலாகும்!
  • அமைய வேண்டியது தனி அரசு! பெறவேண்டியது முழு உரிமை! ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதியத்தியம்! விலக வேண்டியது, டில்லி பேரரசின் பிடியில் இருந்து!
  • தமிழ்நாடா! திராவிட நாடா! என்று கேட்பவர்க்குச் சொல்வேன், ஓரணாவில் காலணா தமிழ்நாடு என்று!
  • சோப்பு விளம்பரக் கடையிலே சொகுசான சுந்தரியின் படத்தை எடுப்பாகத் தொங்கவிட்டிருப்பது எதற்காக? அந்த ஆரணங்கின் அழகுக்கு மதிப்ளிபத்தா? அல்ல அல்ல? அந்தப் பாவை, தமது சரக்கு மிக நல்லதென்று கூறுவது காரணம்!
  • குழவியின் மழலையும், யாழின் இனிமையும், பொருளின் மயக்கமும், வாழ்வின் சுவையும், தூயவர்களின் பணியினை மாய்த்திட இயலவில்லை. காற்றினிலே கலந்தோர் இசையைக் கேட்டுக் களிப்புற்று மெய்மறந்து கிளம்பும் திசை நோக்கிச் சொல்வார் போல, இன்பத்திராவிடம் காண நடக்கின்றார், வீரரெல்லாம்! அவர் தமக்கு துந்துபியாய், சங்கொலியாய் இருந்த பேர்கள், இன்று வேறு ஒலி எழுப்பி நின்றால் கைகொட்டிச் சிரிப்பதன்றி கடமையையும் மறப்பரோ, கழகத்தோழர்?

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


உசாத்துணை

அறிஞர் அண்ணா

"https://ta.wikiquote.org/w/index.php?title=கா._ந._அண்ணாதுரை&oldid=15042" இலிருந்து மீள்விக்கப்பட்டது