உள்ளடக்கத்துக்குச் செல்

உலகப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இந்தப் பக்கத்தில் உலகப் பழமொழிகள் தலைப்புவாரியாக தொகுக்கபட்டுளன.

அண்டை வீட்டார்

[தொகு]
  • அண்டை அயலார் அனுமதித்தால்தான், நீ அமைதியோடு வாழலாம். -இந்தியா
  • அண்டை அயலான் தயவில்லாமல் எவனும் வாழ முடியாது. - டென்மார்க்
  • அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம். - ஜெர்மனி
  • அண்டை வீட்டுக்காரரை நேசி, ஆனால் குறுக்குச் சுவரை இடித்து விடாதே. -இந்தியா
  • அண்டை வீட்டை விலைக்கு வாங்குவதைப் பார்க்கினும், அண்டை வீட்டானையே விலைக்கு வாங்கு. -உருசியா
  • அம்மா சொல்வது போல் உண்மை இராது, அயலார் சொல்வதே உண்மை. -இந்தியா
  • உன் அண்டை வீட்டுக்காரன் நல்லவனா யிருந்தால், உன் வீடு கூடுதலாக நூறு பவுன் பெறும். -செக்
  • உன் தலைக்குச் சேராத தொப்பியை அடுத்த வீட்டுக்காரர் தலையில் கட்டாதே. -இந்தியா
  • துருக்கியரைப் பற்றியும், போப்பாண்டவரைப் பற்றியும் பேச்சு வருகிறது; ஆனால் எனக்குத் தொந்தரவு கொடுப்பவன் என் அண்டை வீட்டுக்காரன். - இங்கிலாந்து
  • நரிகளை விட அதிகமாக நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களே நம்மைக் கவனிப்பார்கள். - கிரீஸ்
  • நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது. - இங்கிலாந்து
  • நல்லவர்களின் நடுவில் வசித்தல் வெகு தூரத்தில் புகழப்படுவதைவிட மேலாகும். - நார்வே
  • பக்கத்து வீட்டுக்காரரே நாம் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி. - இங்கிலாந்து
  • பக்கத்து வீட்டுக்காரன் உன் பந்துவைவிட நெருங்கினவன். -அல்பேனியா
  • மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும், ஆனால் அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது. -உருசியா
  • மூன்று பேர்களின் பக்கத்தில் குடியிருக்க வேண்டாம்: பெரிய நதிகள், பெரிய பிரபுக்கள், பெரிய சாலைகள். - டென்மார்க்

அநாதைகள்

[தொகு]
  • அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே. -அரேபியா
  • தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை. -யூதர்
  • பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல். - இங்கிலாந்து
  • தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும். -எஸ்டோனியா
  • அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையராயிருங்கள். -உருசியா

ஆடவர்

[தொகு]
  • ஆணும் பெண்ணும் மண்வெட்டியும் வாளியும்போல. - குர்திஸ்தானம்
  • ஆடவர் நெல், பெண்டிர் குத்திய அரிசி. -சயாம் (நெல் தானாக முளைக்கும், அரிசி முளைக்காது.)
  • ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர். - ஸ்பெயின்
  • ஆண்பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை; பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை. -சீனா
  • சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும். -ஸ்பெயின்
  • தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை. -ஜெர்மனி
  • தினசரி க்ஷவரம் செய்துகொள்வதைவிட வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவதே எளிது. -உருசியா (ரஷ்ய சிப்பாய்கள் இவ்வாறு தங்கள் மனைவியரிடம் சொல்வது வழக்கம்.)
  • பத்து நாள் பெண்ணாயிருப்பதைவிட ஒரு நாள் ஆணாயிருப்பது மேல். - குர்திஸ்தானம்
  • பத்து மனிதரில் ஒன்பது பேர் பெண்கள். - துருக்கி (பெரும்பாலோர் ஆண்மையில்லாதவர்கள்.)
  • பிரமசாரி தண்ணீரில்லாத வாத்துப் போன்றவன். -உருசியா
  • பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம். -போலந்து
  • பெண் அடிமையாயிருந்தால், ஆண் சுதந்திரமாக யிருக்க முடியுமா? -ஷெல்லி
  • பெண் ஒரு கோட்டை -ஆண் அவள் கைதி. - குர்திஸ்தானம்
  • பொன்னுக்குச் சோதனை நெருப்பு; பெண்ணுக்குச் சோதனை பொன்; மனிதனுக்குச் சோதனை பெண். - அமெரிக்கா
  • மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு; ஆனால் நீ தனித்திரு. - இதாலி
  • மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம். - இங்கிலாந்து
  • மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை. -ஜெர்மனி
  • மனிதன் ஆறு - பெண் ஏரி. - குர்திஸ்தானம்

ஆரோக்கியம்

[தொகு]
  • நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம். -ஜப்பான்
  • ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமணம்தான். - துருக்கி
  • முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி-இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை. - ஜெர்மனி
  • மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும். - ஜெர்மனி
  • இரவில் ஓர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை. - இங்கிலாந்து
  • சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார். -இத்தாலி
  • செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும். -இத்தாலி
  • உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான். - துருக்கி
  • ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது. -ஸ்பெயின்
  • இரவுச்சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம். -லத்தீன்
  • நன்றாயிருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கியிருக்கும். - ஜெர்மனி
  • உடல் நலமாயிருக்கும் பொழுதே நோயைப்பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள். - ஜெர்மனி
  • ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்குச் சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு. -ஃபின்லந்து
  • ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால், எல்லாமும் குறைவு என்று பொருள். -ஃபின்லந்து
  • உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள். - இங்கிலாந்து
  • தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான். - இங்கிலாந்து
  • நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம். - இங்கிலாந்து
  • முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். - இங்கிலாந்து
  • வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும். - இங்கிலாந்து
  • நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும் மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும். - இங்கிலாந்து
  • மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட. - இங்கிலாந்து
  • குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை. - இங்கிலாந்து
  • ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம்; நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம். -பேக்கன்

இல்வாழ்க்கை

[தொகு]
  • அவசியமான பொருள்கள் நிறைந்த ஒரு வீடு, நன்றாக உழுத ஒரு சிறு நிலம், நல்ல சிந்தனையுள்ள சிறு - மனைவி மூன்றுமே இன்ப வாழ்வளிக்கும். -இங்கிலாந்து
  • அழகான மனைவியும் அருமையான பழைய மதுவும் இருந்தால், நண்பர்கள் பலர் வருவார்கள். -பல்கேரியா
  • இதயம் எங்கு தங்கியுளதோ அதுவே வீடு. -இங்கிலாந்து
  • இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது; வெளியே யிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளே யிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர். -அரேபியா
  • உன் சொந்த வீட்டில் சுவர்கள் கூட உனக்கு உதவியாயிருக்கும். -உருசியா
  • உன் வீடு-உனது ராஜ்யம். -பல்கேரியா
  • என் வீட்டுக்கு நானே ராஜா. -எசுபானியா
  • என்னை என் குடும்பத்திலிருந்து காப்பாற்றுங்கள்; என் எதிரிகளை நானே பார்த்துக் கொள்கிறேன். - செர்பியா
  • ஏழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டு விடுவாய்; யசமானி அம்மாளின் குறை ஒரே திரையில் மறைந்து விடும். -இந்தியா
  • ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம். -பாரசீகம்
  • கடவுள் நமக்கு உறவினரைக் கொடுத்திருக்கிறார்; ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். -இங்கிலாந்து
  • கட்டிலிலே கணவனும் மனைவியும், வெளியிலே அவர்கள் விருந்தினர்கள். -சீனா
  • கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும். -உருசியா
  • கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி. -சீனா
  • கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண் வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம். - இங்கிலாந்து
  • சேவல் தன் குப்பை மேட்டிலிருந்தே கூவும். -ஃபிரான்ஸ்
  • தரையை வைத்து வீடு கட்டப் பெறுவதில்லை, ஒரு பெண்ணை வைத்தே கட்டப் பெறுகின்றது. - செர்பியா
  • தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல்லை -லத்தீன்
  • தன் வீட்டில் அமைதி யில்லாதவன் பூலோக நரகில் இருக்கிறான். - துருக்கி
  • தன் வீட்டுக்கு வெளியிலே இன்பத்தை நாடுவோன் தனது நிழலையே துரத்திக் கொண்டு திரிகிறான். -உருசியா
  • திருமணப் பெண்ணுக்கு இசையும் அழகும்; விவாகமான பின் பசியும் தாகமும். - எஸ்டோனியா
  • தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒண்டியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை. - எஸ்டோனியா
  • நம் சொந்த வீடே மற்ற வீடுகளைவிட மேலானது. -லத்தீன்
  • நான் என் தொப்பியை மாட்டும் இடமே என் வீடு. -இங்கிலாந்து
  • நீ வெளியில் எங்கே சுற்றினாலும், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு. -பல்கேரியா
  • பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று. -இந்தியா
  • பெண் இல்லாத வீடு வாளியில்லாத கிணறு. -பல்கேரியா
  • பெண் இல்லை யென்றால், வீடில்லை. -பல்கேரியா
  • பெண் பிள்ளை இரண்டு வார்த்தைகள் சொன்னால், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை விட்டுவிடு. -சுவீடன்
  • வெளியே கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டினும், வீட்டிலே யிருக்கும் உலர்ந்த ரொட்டி மேல். -இங்கிலாந்து
  • வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை. -ஃபிரான்ஸ்
  • வீட்டில் கடிகாரமே யசமானரா யிருக்கவேண்டும். -சுவீடன்
  • வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லா ஆசைகளின் முடிவான நோக்கம். -இங்கிலாந்து
  • வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள. -இந்தியா
  • வீட்டுக்குத் தேவையானவை நான்கு: தானியம், சேவல், பூனை, மனைவி. - இத்தாலி
  • வீட்டுத் தலைவன்மீது தான் வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பைகளும் கொட்டப்படும். - ஆப்பிரிகா
  • பெண்தான் இல்லம். -சுவீடன்
  • வீட்டை விட்டு வெகு தூரத்திலிருப்பவன் அபாயத்திற்கு அருகிலிருக்கிறான். -ஆலந்து

இளமை

[தொகு]
  • உலகம் இளையோருக்காக உள்ளது. -ஸ்லாவேகியா
  • அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான். - இங்கிலாந்து
  • கழுதையும் இளமையிலே அழகுதான். - இந்தியா
  • பத்து வயதில் விசித்திரக் குழந்தை, பதினைந்தில் கெட்டிக்கார இளைஞன், இருபதில் சாதாரண மனிதன். -ஜப்பான்
  • இளைஞன் வேலைக்கு வருகிறான், கிழவன் உணவுக்கு. வருகிறான். - துருக்கிஸ்தானம்
  • புதிதாய்ப் பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சமாட்டா. -சீனா
  • இளங்கன்று பயமறியாது. - தமிழ்நாடு
  • வாலிபம் என்பது பைத்தியம். -கீழ் நாடுகள்
  • கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பது. -ஆப்கானிஸ்தானம்
  • இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள்: அவர்களுக்கு எல்லாம் தெரியும்! -ஃபிரான்ஸ்
  • இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள். -ஜெர்மனி
  • இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமையில் நீ முட்களின்மீது படுத்திருப்பாய். - இங்கிலாந்து
  • வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும். -அயர்லந்து
  • வாலிபத்தைப் பாராட்டிப் பேசினால், அது மேன்மையடையும்.-அயர்லந்து
  • மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம். -லத்தீன்
  • இளமையில் முகம் அழகு, முதுமையில் ஆன்மா அழகு. -சுவீடன்
  • இளைஞர்கள் கூட்டமாய்ச் செல்வார்கள், நடுவயதினர் ஜோடியாகச் செல்வர், வயோதிகர் தனியாகச் செல்வர்.-சுவீடன்
  • ஒருவர் இளமையா யிருத்தல் ஒரு சமயம்தான். -ஃபிரான்ஸ்
  • வாலிபம் இடைவிடாத ஒரு வெறி, அது அறிவின்காய்ச்சல். -ஃபிரான்ஸ்
  • மது இல்லாமலே வெறி கொள்வது வாலிபம். -கதே
  • வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும். -கிரீஸ்
  • அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னால்சிறந்த குதிரைகளாக ஆகின்றன. -கிரீஸ்
  • தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக்கிறார்கள். -கிரீஸ்
  • வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை. - அரிஸ்டாட்டல்
  • குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன. - இத்தாலி
  • வாலிபம் பறந்து செல்கின்றது. -லத்தீன்
  • காலை நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள். -லத்தீன்
  • பெருமையுள்ள செயல்கள் அனைத்தும் அநேகமாக இளைஞர்களாலேயே செய்யப் பெற்றிருக்கின்றன. -டிஸ்ரேலி
  • இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும். - இங்கிலாந்து
  • வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும். - இங்கிலாந்து
  • இளமையைத்தான் அடக்கிக கொண்டு வரவேண்டும், முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும். - இங்கிலாந்து
  • இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது. - இங்கிலாந்து
  • வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும். - இங்கிலாந்து
  • வாலிபம் நம்பிக்கைக் குரிய பருவம். - இங்கிலாந்து
  • வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள். - இங்கிலாந்து

இனம்

[தொகு]
  • வௌவால் தன் விருந்தாளியிடம், 'நான் தொங்குகிறேன், நீயும் தொங்கு!' என்று சொல்லும். - இந்தியா
  • பாம்பைவிடப் பிராமணனை நம்பு, வேசியைவிடப் பாம்பை நம்பு, பட்டாணியைவிட வேசியை நம்பு. -இந்தியா
    [பட்டாணி- கடன் கொடுத்து வாங்கும் ஆப்கானியர் வகுப்பைச் சேர்ந்தவன்.]
  • ஆந்தைக்குத்தான் தெரியும் ஆந்தையின் அருமை. - இந்தியா
  • ஊசி வாளைப் பார்த்தால், 'அண்ணா' என்று அழைக்கும். - உருசியா

உடற் குறைகள்

[தொகு]
  • முடவன் ஒவ்வோர் அடியிலும் தடுக்கி விழுவான். - இந்தியா
  • குருடனை விருந்துக்கு அழைத்தால், இரண்டு விருந்தினர்கள் வருவார்கள். - இந்தியா
  • ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக்கொள். -சீனா
  • குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும். -சீனா
  • குருடன் பார்க்க முடியவில்லை என்பதால், வானத்தின் நீல நிறம் குறைந்து விடுவதில்லை. -டென்மார்க்
  • குருடனும் சில சமயங்களில் தானியத்தைக் கண்டுபிடிக்கிறான். -ஃபிரான்ஸ்
  • குருடன் கொடி பிடித்துச் சென்றால், அவன் பின்னால் செல்பவர்களுக்கு ஆபத்துத்தான். -ஃபிரான்ஸ்
  • சூரியனையே பார்க்க முடியாதவன் குருடன்தான். - இ்த்தாலி
  • மனம் வேறிடத்தில் இருந்தால், (எல்லோருக்குமே) கண்கள் குருடுதான். -லத்தீன்
  • குருடர்களின் நடுவில் நீங்களும் கண்களை மூடிக்கொள்ளுங்கள். - துருக்கி
  • தீமையைப் பார்ப்பதைவிட, குருடாயிருப்பது மேல். -இங்கிலாந்து
  • கல்லும் வயிரமும் குருடனுக்கு ஒன்றுதான். -இங்கிலாந்து
  • கூனனுக்குத் தன் கூனல் தெரியாது, பக்கத்திலிருப்பவன் கூனலையே பார்ப்பான். -இங்கிலாந்து
  • திகைத்து நிற்பவனை விட நொண்டி விரைவாக வந்து விடுவான். -இங்கிலாந்து
  • கூனன் தன் கூனலையும் சுமக்க வேண்டியிருக்கிறது. -யூதர்
  • நொண்டி வரும்வரை நாமும் காத்திருக்க வேண்டும். - ஃபிரான்ஸ்

ஒற்றுமை

[தொகு]
  • ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம். - இந்தியா
  • நானும் என் சகோதரனும் எங்கள் அத்தானுக்குப் பகையானாலும், அந்நியன் வந்தால், நானும் அத்தானும் அவனுக்குப் பகையா யிருப்போம். - அரேபியா
  • வாதியும் எதிரியும் ஒரு படகிலே சென்றால், சாட்சிகள் நீந்தித்தான் செல்ல வேண்டும். -கீழை நாடுகள்
  • அறுந்த கயிற்றை முடிக்கலாம், ஆனால் முடிச்சு இருக்கும். -பாரசீகம்
  • ஒரு நகரத்திற்கு எதிராக மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்தால், அதை அழித்து விடுவார்கள். -அரேபியா
  • மூன்று பிரிகளைக் கொண்ட சரட்டை விரைவில் அறுக்க முடியாது. -ப. ஏற்பாடு
  • தனியே நிற்கும் ஆடு ஓநாயிடம் சிக்கக்கூடும். - இங்கிலாந்து
  • ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம். - இங்கிலாந்து
  • பலமில்லாதவையும் ஒன்று சேர்ந்தால், பலமுண்டாகிவிடும். - இங்கிலாந்து
  • ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒவ்வொருவரும். -டூமாஸ்
  • ஒற்றுமைப்பட்டால் வலிமை அதிகம். - லத்தீன்
  • அடக்கமாக அடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒற்றுமையே சிறந்த வலிமை. - லத்தீன்
  • கயிறு கட்டாத கதிர்க்கட்டு வெறும் வைக்கோல்தான். -உருசியா
  • எவன் என்னோடு இருக்கவில்லையோ அவன் எனக்கு எதிரானவன். -பு. ஏற்பாடு
  • கட்டாகவுள்ள கழிகளை ஒடிக்க முடியாது. -ஆப்பிரிகா

கணவன்

[தொகு]
  • கணவனின் அன்பே மனைவியின் வாழ்க்கை. -ஜெர்மனி
  • தோட்டத்தின் நன்மை வேலி; வீட்டின் நன்மை குடியிருப்பு, பெண்ணின் நன்மை கணவன். -மலாய்
  • மனையாளின் குற்றங்களுக்கு மணவாளனே பொறுப்பு; குரங்கு வளர்ப்பவன் அதன் சேட்டைகளுக்குப் பொறுப்பாளி. -இங்கிலாந்து
  • ஒடுக்கமான வீட்டில் விகாரமான மனைவியை உடையவனுக்குக் கவலையே யில்லை. -இங்கிலாந்து
  • அதிருஷ்டமுள்ளவன் மனைவியை இழக்கிறான், அதிருஷ்டமில்லாதவன் குதிரையை இழக்கிறான். - ஜியார்ஜியா
  • மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும் உடந்தைதான். -லத்தீன்
  • கணவன் என்பவன் தன் மனைவியின் தந்தை. -உருசியா
  • ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது. - ருமேனியா
  • ஏழு வருடங்கள் கழியுமுன்னால் உன்மனைவியைப் புகழாதே. -உருசியா
  • அதிருஷ்டத்தில் உயர்ந்தது நல்ல கணவன் வாய்ப்பது, அடுத்தது நல்ல வேலைக்காரன் வாய்ப்பது. - செர்பியா
  • மனிதனுக்குச் சந்தோஷம் இரு தடவைகள் வரும்: ஒன்று மனைவியை அடையும் பொழுது, மற்றது அவளைப் புதைக்கும் பொழுது. - செர்பியா
  • அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன். - ஸ்பெயின்
  • உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச் சொன்னால், 'கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!' என்று பிரார்த்தனை செய்து கொள். -ஸ்பெயின்
  • மனிதன் தலை, பெண் தொப்பி. -சுவீடன்
  • பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு மூன்று நாள் ஓய்வு கொடுத்து, தானும் மூன்று நாள் பட்டினியிருப்பான். - சுவிட்சர்லந்து
  • உலகம் மெச்சும் நல்லவனை அவன் மனைவி மட்டும் மோசமானவனாகக் கருதுவாள். -யூதர்
  • மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால், கணவனுக்கு அமைதி கிடைக்கும். -ஆப்பிரிக்கா
  • கணவர்களே, உங்கள் மனைவியரை நேசியுங்கள், அவர்களுக்கு எதிராகக் கொடுமையாக இருக்கவேண்டாம். -பு. ஏற்பாடு
  • நல்ல கணவனானால், மனைவியும் நல்லவளாயிருப்பாள். - இங்கிலாந்து
  • நல்ல மனைவியால் கணவனும் நல்லவனாவான். - இங்கிலாந்து
  • செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி-இந்தத் தம்பதிகள் இன்பமா யிருப்பார்கள். - இங்கிலாந்து
  • கணவர்கள் வானுலகம் சென்ற பிறகே மனைவியின் ஏச்சு நிற்கும். - இங்கிலாந்து
  • கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம். - இங்கிலாந்து
  • கணவர்கள் அடங்கிப் போவதால்தான், மனைவியர் வெறி அதிகமாகின்றது. - இங்கிலாந்து
  • புருடன் இறந்ததும், அண்டைவீட்டுக்காரர்கள் அவனுக்கு எத்தனை குழந்தைகள் என்பதை அறிகிறார்கள். - இங்கிலாந்து
  • ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல். - ஸ்பெயின்
  • கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள். -ஸ்பெயின்
  • கணவன் விதிக்கும் தளைகளால் தழும்பு உண்டாகாது. -உருசியா
  • அன்பில்லாத கணவன் பொறாமையுள்ள கணவனைவிட மேலானவன். -இத்தாலி
  • தன் குடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்து கொள்பவன் கணவன். -லத்தீன்

கல்லறை

[தொகு]
  • புதைப்பதற்கு எந்த நிலமும் நல்லதுதான். -ஜப்பான்
  • வாழ்க்கையில் முதன்மையான விஷயம் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படுதல். -சீனா
  • இடுகாடுதான் குடிக்கூலி குறைவான விடுதி. - நீகிரோ
  • பூமிதான் தக்க புகலிடம். - இங்கிலாந்து
  • கல்லறையுள் அரசன் யார்? ஆண்டி யார்? - இங்கிலாந்து
  • தங்க முலாம் பூசிய கல்லறைகளினுள்ளும் புழுக்களே உள்ளன. -ஷேக்ஸ்பியர்
  • நம்முடைய வாழ்வு சமாதியை நோக்கிச் செல்லும் யாத்திரையாகத்தான் இருக்கிறது. - இங்கிலாந்து
  • பொதுவாக எல்லோரும் சந்திக்குமிடம் சமாதி தான். - இங்கிலாந்து
  • வயது கூடக்கூட, நாம் கல்லறையை நெருங்கிக் கொண்டே யிருக்கிறோம். - இங்கிலாந்து
  • கல்லறையிலேதான் ஓய்வுண்டு. -யூதர்
  • நாம் வாங்குகிற ஒவ்வொரு மூச்சும் நம் சமாதியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியாகும். - அரேபியா

கற்பு

[தொகு]
  • சோதனைக்கு உள்ளாகாத பெண் தன் கற்பைப் பற்றிப் பெருமை பேச முடியாது. -மான்டெயின்
  • கற்பை இழக்கத் துணிந்தவள் எதையும் இழக்கத் துணிவாள். -டாஸிடஸ்
  • ஒரு முறை இழந்த கற்பை ஒட்ட வைக்க முடியாது. - இங்கிலாந்து
  • மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். - ஸ்பெயின்

காதல்

[தொகு]
  • நான்கு கண்கள் சந்தித்ததும், இதயத்தில் காதல் தோன்றிற்று. -இந்தியா
  • காமம், நெருப்பு, இருமல் இம்மூன்றும் மறைக்க முடியாதவை. -இந்தியா
  • இளம் காதலர்கள் விரும்புகிறார்கள், விவாகமான மனிதர்கள் வருந்துகிறார்கள். -இந்தியா
  • காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கின்றது. -இந்தியா
  • ஒரு மனிதன் பெண்ணின் பின்னால் ஓடினால் திருமணம்; ஒரு பெண் மனிதன் பின்னால் ஓடினால் அவளுக்கு அழிவு. -இந்தியா
  • காதல், கஸ்தூரி, இருமல் மூன்றையும் அடக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. -இந்தியா
  • காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும். -ஜப்பான்
  • காதலுக்கும் தொழு நோய்க்கும் தப்புவோர் சிலரே. -சீனா
  • அதிருஷ்டமுள்ளவன் ஒரு நண்பனைச் சந்திக்கிறான், அதிருஷ்டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிறான். -சீனா
  • காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து - வைக்க முடியாது. -அரேபியா
  • காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும்.-அரேபியா
  • உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு. -அரேபியா
  • தூக்கம் வந்து விட்டால், தலையணை தேவையில்லை; காதல் வந்து விட்டால், அழகு தேவையில்லை. -ஆப்கானிஸ்தானம்
  • காதலும் பேராசையும் போட்டியைச் சகிக்கமாட்டா. - ஃபிரான்ஸ்
  • காதலுடனும் நெருப்புடனும் மனிதன் பழகிப் போகிறான். - ஃபிரான்ஸ்
  • பெண்கள், காடைகள், வேட்டை நாய்கள், ஆயுதங்கள் இவைகளில் ஓர் இன்பத்திற்காக ஆயிரம் வேதனைகள் - ஃபிரான்ஸ்
  • காதலைத் தடுத்தல் அதைத் தூண்டிவிடுவது போன்றது. - ஃபிரான்ஸ்
  • காதல் வந்து விட்டால், கழுதைகளும் நடனமாடும். - ஃபிரான்ஸ்
  • அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேச வேண்டும். -ஸ்காட்லந்து
  • காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை. -செர்பியா
  • பெண்ணின் காதல் சயித்தானின் வலை. -செர்பியா
  • திருமண இரவுதான் காதலின் கடைசி இரவு. -சைலீஷியா
  • காதல் இனிமையான சிறைவாசம். -ஸ்லாவேகியா
  • கெட்டிக்காரப் பெண், தான் காதலிப்பவனை விட்டு, தன்னைக் காதலிப்பவனை மணப்பாள். -ஸ்லாவேகியா
  • செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல. - ஸ்பெயின்
  • காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று. - ஸ்பெயின்
  • ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும். - ஸ்பெயின்
  • காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும். - ஸ்பெயின்
  • ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது. -ஸ்பெயின்
  • காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும். -ஸ்பெயின்
  • 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது. -ஸ்பெயின்
  • தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை. -ஸ்பெயின்
  • நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு. -ஸ்பெயின்
  • சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது. -ஸ்பெயின்
  • காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர். -ஸ்பெயின்
  • காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும். -ஜெர்மனி
  • காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி. -ஜெர்மனி
  • காதல்தான் காதலை வெல்ல முடியும். -ஜெர்மனி
  • காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும். -ஜெர்மனி
  • காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை. -ஜெர்மனி
  • காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும். -ஜெர்மனி
  • காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை. -ஜெர்மனி
  • காதலுக்குக் காலம் கிடையாது. -ஜெர்மனி
  • காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும். -ஜெர்மனி
  • காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா. -ஜெர்மனி
  • அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும். -ஜெர்மனி
  • காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. -ஜெர்மனி
  • பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது. -ஜெர்மனி
  • காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான். -ஜெர்மனி
  • காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர். -ஜெர்மனி
  • சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும். -ஜெர்மனி
  • எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான். - இங்கிலாந்து
  • முத்தங்கள் திறவுகோல்கள். - இங்கிலாந்து
  • ஒருபெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான். - இங்கிலாந்து
  • காதலுக்கு மருந்தில்லை, மருத்துவனுமில்லை. -அயர்லந்து
  • காதல் ஒன்றுதான் பங்காளிகளை அனுமதிக்காது. -பல்கேரியா
  • ஒருவன் சகோதரனைத் தேடிக் கடல் வரை போவான்;. காதலியைத் தேடிக் கடலுக்குள்ளேயும் போவான். -பல்கேரியா
  • உருளைக் கிழங்கையும், காதலனையுமே ஒரு பெண் தானாகத் தேர்ந்தெடுக்கிறாள். - ஹாலந்து
  • காதற் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர், கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள். - ஹாலந்து
    [காதலரின் தூதர்களுக்கு இருபக்கங்களிலும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.]
  • வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது, கன்னியை நாடும் காதலன் பாதையையும் காண முடியாது. -எஸ்டோனியா
  • காதலில் துரு ஏறாது. -எஸ்டோனியா
  • காதல் என்பது மலர், கலியாணத்தில் அது கனியாகும். - ஃபின்லந்து
  • காதல் நந்தவனம், கலியாணம் முட்புதர். - ஃபின்லந்து
  • காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றிவிடும். - கிரீஸ்
  • காதல் மடமை இரண்டுக்கும் பெயரில் தான் வேற்றுமை. -ஹங்கேரி
  • கனவிலும் காதலிலும் இயலாத காரியமே இல்லை. -ஹங்கேரி
  • அடிக்கடி முத்தமிட்டால் குழந்தையை எதிர்பார்க்க வேண்டியதுதான். -ஐஸ்லந்து
  • கலியாணத்திற்குப் பின்னால் காதல் வளரும். -ஐஸ்லந்து
  • காதல் கொண்டவர்களின் கோபம் சிலந்தி வலை போன்றது. - இதாலி
  • ஒரே பெண்ணையோ, ஒரே 'பஸ்'ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம், பின்னால் வேறு கிடைக்கும். - இதாலி
  • காதலிக்கும் காலத்தில் ஜூபிடரும் கழுதையாவார். -லத்தீன்
    [ஜூபிடர்-தேவர்களின் அதிபதியான கடவுள். கிரீஸில் இவரை 'சீயஸ்' என்பர்.]
  • பழைய காதல் ஒரு சிறைச்சாலை. -லத்தீன்
  • காதலின் தூதுவர்கள் கண்கள். -லத்தீன்
  • காதலிலே தோன்றும் கோபம் போலியானது. -லத்தீன்
  • காதலர் கோபம் காதலுக்குப் புத்துயிர். -கிரீஸ்
  • இருவரைக் காதலிக்கும் ஒரு பெண் இருவரையும் ஏமாற்றுவாள். - போர்ச்சுக்கல்
  • செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி. -ரஷ்யா
  • காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது. -ரஷ்யா
  • ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காமலிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான். -ரஷ்யா
  • ஒருத்தி இனிமையா யிருக்கிறாள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிட்டது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம். -ரஷ்யா
  • பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சை விட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது போல, என்னை வைத்துக் கொள்ளவும். -ஆப்பிரிகா
  • அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிந்து விடும். -இங்கிலாந்து
  • அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல். -இங்கிலாந்து
  • காதல்தான் காதலுக்குப் பரிசு. -இங்கிலாந்து
  • காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. -இங்கிலாந்து
  • காதலின் இனிமைகளில் கண்ணீர் கலந்திருக்கும். -இங்கிலாந்து
  • காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள். -இங்கிலாந்து
  • காதல் ஒருவகைப் போர் முறையாகும். -லத்தீன்
  • காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை. -ஸ்பெயின்
  • காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை. -சுவீடன்
  • காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்று விடும். -சுவீடன்
  • காதலால் வீரரானோர் பலர்; ஆனால் மூடரானோர் அவர்களை விட அதிகம். -சுவீடன்
  • நெருப்பு அருகிலிருந்து சுடும், அழகு தூரத்திலிருந்து சுடும். -சுவிட்சர்லந்து
  • காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடினால் ஒட்டகத்தைத் திருடு. - எகிப்து
  • காதல் கட்டுப்பாடற்ற கழுதை. -ஆப்பிரிகா
  • ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடியாது. -போலந்து
  • காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது. -போலந்து
  • முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு, அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு. -போலந்து

குடும்பம்

[தொகு]
  • சிறு குடும்பத்திற்கு வேண்டியவை விரைவிலேயே கிடைக்கும். - இங்கிலாந்து
  • உன் பாட்டனாருக்கும் ஓர் அத்திப்பழம் கொடுத்து ஆதரித்து வா. - இங்கிலாந்து
  • உறவினரைக் கடவுளே கொடுத்து விடுகிறார், நண்பர்கன மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம். - இங்கிலாந்து
  • உறவினர் குறைந்திருத்தல் ஓர் அதிருஷ்டம்தான். - கிரேக்கம்
  • தன் குடும்பத்தை விட்டு ஓடுபவன் நெடுந்தூரம் சென்று கொண்டே யிருக்கவேண்டும். -லத்தீன்

குலம்

[தொகு]
  • ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனோ ஓர் அரசனின் வழி வந்தவன், ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழிவந்தவன். - இங்கிலாந்து
  • குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன்; கிழங்கைப் போலவே, அவன் பெருமையும் மண்ணுக்குள் மறைந்திருக்கும். - இங்கிலாந்து
  • தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்! - துருக்கி
  • ஆயன் மகன் ஆயன். - உருசியா

குழந்தைகள்

[தொகு]
  • தகப்பனாவதில் சிரமம் ஒன்றுமில்லை. - துருக்கி
  • மூன்று பெண்களுக்கு அப்பால் பிறந்த பையன் பிச்சை யெடுப்பான்; மூன்று பையன்களுக்கு அப்பால் பிறந்த பெண் இராஜ்யத்தை ஆள்வாள். - இந்தியா
  • உன் மகன் நல்லவனானால், நீ ஏன் சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனானால், (அவனுக்காக) நீ ஏன் சேமித்து வைக்க வேண்டும்? - இந்தியா
  • இருண்ட வீட்டின் ஒளி-மகன். குழந்தையின் ஓட்டம் தாய்வரைக்கும். - இந்தியா
  • பதினாறு வயது வரை மகன், அதற்கு மேல் தோழன். - இந்தியா
  • குழந்தைகள் இல்லாத வீடு சுடுகாடு. - இந்தியா
  • பிரியமுள்ள தந்தையரும் தாயாருமே உண்டு, பிரியமுள்ள பிள்ளைகளும் பெண்களும் இல்லை. -சீனா
  • பெண் பிறக்கும் பொழுது வெளியே பார்த்துக்கொண்டு வருகிறாள், பையன் பிறக்கும் பொழுது உள்ளே பார்த்துக் கொண்டு வருகிறான். -சீனா
  • வானத்திற்கு மணி சூரியன், வீட்டுக்கு மணி குழந்தை. -சீனா
  • குழந்தையில்லாத செல்வன் சீமானல்லன்; செல்வமில்லாது குழந்தைகளை மட்டும் பெற்றவன் ஏழையுமல்லன். -சீனா
  • உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எப்பொழுதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள். -சீனா
  • விளையும் பயிர் முளையில் தெரியும். - தமிழ்நாடு
  • ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைத் தட்டி வளர்க்க. - தமிழ்நாடு
  • ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி. - தமிழ்நாடு
    [ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.]
  • உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனை அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களை வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும். -சீனா
  • ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை. -சீனா
    (குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.)
  • கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும். -சீனா
  • பெண் பிறந்தால், வீட்டுக் கதவு நிலை நாற்பது நாள் அழும். -அரேபியா
  • என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது, அவனுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது. -அரேபியா
  • மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும். -ஆர்மீனியா
  • உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை. -பர்மா
    [நம்பியிருத்தல் வீண்.]
  • தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை. - கால்மிக்
  • குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை. -குர்திஸ்தானம்
  • வீடு என்றால், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும். -குர்திஸ்தானம்
  • இளமையிலே குழந்தைகள் நம் கைகளுக்கு வலியளிக்கும், முதுமையிலே மனத்திற்கு வேதனையளிக்கும். -ஐரோப்பிய நாடோடிகள்
  • வைசூரி விளையாடிய பிறகு தான், பெற்றோர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும். - ஆப்கானிஸ்தானம்
  • நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை அப்படியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி. - ஆப்கானிஸ்தானம்
  • தந்தை அழ நேருவதைவிட, குழந்தை அழுதால் அழட்டும். -ஜெர்மனி
  • குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான், குழந்தைகளில்லாமல் மரிப்பவன் மகிழ்ச்சியை அறியான். -ஜெர்மனி
  • தாய் தன் குழந்தையைத் தழுவினால், அநாதைக் குழந்தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிறார். - போலந்து
  • குடியானவனுடைய குழந்தைகள் அவன் செல்வங்கள் ; கனவானுடைய குழந்தைகள் அவன் கடன்கள்; பிரபுவின் குழந்தைகள் திருடர்கள். - போலந்து
    [முற்காலத்தில் பிரபுக்கள் குடியானவர்களைத் துன்புறுத்தி, நில புலன்களைத் தாங்களே கைப்பற்றி வந்ததால், இப்பழமொழி அவர்களுக்கு எதிராக எழுந்த துவேஷத்தைக் காட்டுகின்றது.]
  • அதிகக் குழந்தைகள் இருந்தால், வீட்டுக் கூரை பிய்ந்து போய்விடாது. -பெல்ஜியம்
  • ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்றாகிவிட்டால் , நீ வீட்டோடு இருக்க வேண்டியது தான். - இங்கிலாந்து
  • வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தை யில்லாதவன் அதிருஷ்டமில்லாதவன். -அயர்லந்து
  • குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண். -அயர்லந்து
  • சண்டையிட இருவர், சமாதானத்திற்கு ஒருவர். -ஸ்காட்லந்து
    [குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் போதும்.]
  • கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டா. -ஸ்காட்லந்து
  • குழந்தை தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சுகிறவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை அறியாது. - வேல்ஸ்
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில். - தமிழ் நாடு
  • உன் குழந்தைகள் தீயோராயிருந்தால், நீ அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோராயிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை. -பல்கேரியா
  • குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை. -டென்மார்க்
  • அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை. - எஸ்டோனியா
  • பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும். - எஸ்டோனியா
  • வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது. - எஸ்டோனியா
  • குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை. - எஸ்டோனியா
  • குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும். - எஸ்டோனியா
  • பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும். - எஸ்டோனியா
  • மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்பளவு உயரம் இருக்க வேண்டும். - எஸ்டோனியா
  • பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம், அவர்கள் விற்பனைக்குரிய பொருள்கள். -எஸ்டோயா
  • குழந்தையும் உதவிதான் செய்கிறது, ஒரு மீனைக் கழுவுவதற்குள், இரண்டு மீன்களைத் தின்னுகின்றது. -பின்ந்து
  • மூடன் தன் குதிரையைப் புகழ்வான், பயித்தியக்காரன் தன் மருமகளைப் புகழ்வான், அறியாதவன் தன் மகளைப் புகழ்வான். -பின்ந்து
  • ஒற்றைக் குழந்தை கடவுளின் தண்டனை. -ஹங்கேரி
  • ஆந்தையும் தன் மகனை இராஜாளி என்றே கருதுகின்து. -ஹங்கேரி
  • தூங்கும் பொழுது சிரிக்கும் குழந்தை தேவர்களுடன் விளையாடுகின்றது. -இத்தாலி
  • குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு புரியாது. -இத்தாலி
  • அதிருஷ்டமுள்ளவர்கள் மணமாகி மூன்றாம் மாதம் குழந்தையை அடைகிறார்கள். -லத்தின்
  • அதிருஷ்டமுள்ளவனுக்கு முதற் குழந்தை பெண்ணாயிருக்கும். -போர்ச்சுக்கல்
  • மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளைவிட அருமையானவை. -ரஷ்யா
  • நீ தகப்பனாகாமலே வாழ்ந்தால், நீ மனிதனாக இல்லாமலே மரிப்பாய். -ரஷ்யா
  • பெண்பிள்ளை கலியாணப் பருவமடையும் பொழுதுதான் பிறந்தவளாகிறாள். -ரஷ்யா
  • குழந்தைகளை இதயத்தால் நேசிக்கவும்; ஆனால் கைகளால் பயிற்சி அளிக்கவும். -ரஷ்யா
  • விவாகமான பெண் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரைப் போலத்தான். -ரஷ்யா
  • குழந்தையின் கையும் பன்றித் தொட்டியும் நிறைந்தேயிருக்க வேண்டும். -சுவிட்சர்லந்து
  • உலகிலே ஒரு குழந்தையை விட்டுச் செல்பவன் நித்தியமாக வாழ்கிறான். -ஆப்பிரிகா
  • முதற் குழந்தை தந்தைக்குத் தோழன். -ஆப்பிரிகா
  • குழந்தைகள் தெய்வத்தோடு பேசுகின்றன. -ஆப்பிரிகா
  • கேள்விகள் கேட்கும் குழந்தை மூடக் குழந்தையன்று. -ஆப்பிரிகா
  • பெரிய நகருக்குச் சென்றிராத குழந்தை தன் தாய்தான் தலை சிறந்த சமையற்காரி என்று சொல்லும். -ஆப்பிரிகா
  • முதலாவது செல்வம் குழந்தைகள், இரண்டாவதுதான் பணம். -ஆப்பிரிகா
  • குழந்தை, ஒட்டகக்கழுத்து மாதிரி, எங்கு வேண்டு மானாலும் நுழையும். -ஆப்பிரிகா
  • குழந்தைகளில்லாத எலி ஆற்றோரம் வீடு கட்டிக்கொள்ளும். -ஆப்பிரிகா
  • மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும். -ஆப்பிரிகா
  • குழந்தைகளே ஏழைகளின் செல்வங்கள். - இங்கிலாந்து
  • குழந்தைகளுக்குச் செவிகள் அகலமானவை, நாவுகள் நீளமானவை. - இங்கிலாந்து
  • புறாக்கள் கடலைகளைக் கொத்துவது போல், குழந்தைகள் வார்த்தைகளைக் கொத்தி யெடுத்துக் கொள்ளும்.
  • குழந்தைகள் இளமையில் தாயிடம் பால் குடிக்கின்றன, முதுமையில் தந்தையிடம் (அறிவுப்) பால் குடிக்கின்றன. -இங்கிலாந்து
  • குழந்தை யில்லாதவனுக்கு அன்பு என்ன என்று தெரியாது. -இங்கிலாந்து
  • குழந்தையைக் கொண்டாடினால், தாயின் அன்பைப் பெறலாம். -இங்கிலாந்து
  • இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட, ஒரு கலப்பையால் உழுவது மேல். -இங்கிலாந்து
  • குழந்தைக்கு முதற்பாடம் பணிவு. -இங்கிலாந்து
  • தீப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும். -இங்கிலாந்து
  • நாவை அடக்கப் பழக்கிய குழந்தை விரைவிலே பேசக் - கற்றுக் கொள்ளும். -இங்கிலாந்து
  • குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் கற்றவை. -இங்கிலாந்து
  • தந்தை அழுவதைவிட, குழந்தை அழுவது மேல். -இங்கிலாந்து
  • குழந்தைகளும் கோழிக் குஞ்சுகளும் எப்பொழுதும் தின்று கொண்டே யிருக்கவேண்டும். -இங்கிலாந்து
  • பகுத்தறிவு உறங்கும் காலம் குழந்தைப் பருவம். -ரூஸோ
  • செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் இருக்கும். - டென்மார்க்
  • குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர். - டென்மார்க்
  • அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்பொழுதும் மோசமான குழந்தைகள். - ஜெர்மனி
  • பெற்றோர்கள் நூற்பதைக் குழந்தைகள் கழியில் சுற்ற வேண்டும். - ஜெர்மனி
  • குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால், அவர்களை எப்படியும் திருப்பலாம். -ஜெர்மனி
  • குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை. -ரஷ்யா
  • குழந்தையை அடித்து வளர்க்காதவன், பின்னால் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும். -துருக்கி

கைம்பெண்

[தொகு]
  • விதவை துடுப்பில்லாத மரக்கலம். -சீனா
  • நிலம் மழையில்லாமல் அழும், விதவை கணவனில்லாமல் அழுவாள் -இந்தியா
  • கைம்பெண் வளர்த்த பிள்ளை மூக்குச் சரடு இல்லாத காளை. -இந்தியா
  • பணக்காரியான விதவையின் கண்ணீர் விரைவில் உலர்ந்து விடும். -டென்மார்க்
  • விதவையை மணப்பவன் விரைவிலே முடிக்க வேண்டும். - இங்கிலாந்து
  • விதவை துக்கம் காக்கும் பொழுதே, விவாகம் செய்து கொள். - இங்கிலாந்து
  • விதவைகள் எப்போதும் பணக்காரிகள். - இங்கிலாந்து
  • பெருமையோடு ஒருத்தி ஒரு முறைதான் மனைவியா யிருக்க முடியும், ஒரு முறை தான் கைம்பெண்ணா யிருக்க முடியும். - ஃபிரான்ஸ்
  • செல்வமுள்ள கைம்பெண் ஒரு கண்ணால் அழுவாள், ஒரு கண்ணால் சிரிப்பாள். - போர்ச்சுகல்
  • அழகுள்ள விதவையை (விரைவில்) விவாகம் செய்து வைக்க வேண்டும், அல்லது புதைக்க வேண்டும், அல்லது கன்னிகா மடத்தில் அடைத்து வைக்க வேண்டும். -ஸ்பெயின்
  • விதவையின் வீட்டில் கொழுத்த சுண்டெலி இராது. - துருக்கி
  • வயதான கன்னியைவிட இளமையான விதவை மேல். -யூதர்
  • கைம்பெண் கூரையில்லாத கட்டடம். -எஸ்டோனியா
    (மனைவியில்லாதவனுக்கும் இது பொருந்தும்.)

சகோதரர்

[தொகு]
  • சகோதரனைப் போன்ற நண்பனில்லை, சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை. - இந்தியா
  • கைகளும் கால்களும் போன்றவர்கள் சகோதரர்கள். -சீனா
  • உடன் பிறந்தார்கள் ஒத்து வேலை செய்தால், மலைகளெல்லாம் பொன்னாகும். -சீனா
  • சகோதரர்களாயிருங்கள், ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். -அரேபியா
  • சொந்த சகோதரர்கள் கவனமாகக் கணக்கு வைத்திருப்பார்கள். -சீனா
  • இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம். -இங்கிலாந்து
  • சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன். -பிரான்ஸ்
  • அவர்கள் சகோதரர்களானாலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை. - துருக்கி
  • தாயும் பிள்ளையும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறு. -தமிழ்நாடு
  • மூன்று சகோதரர்கள் மூன்று கோட்டைகள். - போர்ச்சுகல்

சுற்றம்

[தொகு]
  • அன்புள்ள அந்நியனும் நமக்கு உறவு தான். - இந்தியா
  • உறவுள்ள இடத்தில் பகையும் இருக்கும். - இந்தியா
  • உதிர்ந்த இறகைப் பசை வைத்துத்தான் ஒட்டவேண்டும்! -ஆப்பிரிகா
  • நம் உறவினர்கள் செழிப்பாயிருப்பார்களாக, நாம் அவர்களிடம் செல்லாமல் இருப்போமாக! -போலந்து
  • அத்தையோடு நீ உண்ணலாம், ஆனால் தினமும் போய் உட்காரக் கூடாது. - இங்கிலாந்து
  • அதிக உறவினர், அதிகத் துன்பம். - பிரான்ஸ்
  • நமக்குக் காசு நிறைய இருந்தால், அத்தை பிள்ளைகளும், அம்மான் பிள்ளைகளும் கிடைப்பார்கள். - இத்தாலி
  • நீ உன் மனைவியை நேசித்தால், அவளுடைய உறவினரையும் நேசிக்க வேண்டும். -யூதர்
  • உறவினர் செல்வமடையும் பொழுதுதான் நாம் அவர்களை மதிக்கிறோம். -யூதர்
  • உதிரம் நீரைவிடச் சூடுள்ளது. -எஸ்டோனியா
  • மிக நெருங்கிய பந்துக்களின் துவேஷமே அதிகமா யிருக்கும். - லத்தீன்
  • உறவினரைப் போய்ப் பார்த்து வரலாம், அவர்களுடனே வசித்திருக்க முடியாது. - அமெரிக்கா
  • சிறு புண்களையும் ஏழை உறவினரையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக் கூடாது. -சுவீடன்
  • உன் உறவினரே உன்னைக் கொட்டும் தேள்கள். -எகிப்து

தாய் தந்தை

[தொகு]
  • அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது. -ஜெர்மனி
  • கோழி மிதித்தால், குஞ்சுக்குச் சேதமில்லை. - தமிழ்நாடு
  • தாய்வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை. - தமிழ்நாடு
  • பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும். -இந்தியா
  • செல்வமுள்ள போது தந்தை, வறுமையிலே தாய். -இந்தியா
  • தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்? -இந்தியா
  • புத்திசாலியான மகன் தந்தைக்கு மகிழ்ச்சி யளிப்பான். -ப. ஏற்பாடு
  • தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை அவனுடைய மௌனத்திற்கே அஞ்சுகிறான்.- சீனா
  • மகனைப் புகழும் தந்தை தன்னையே புகழ்ந்து கொள்கிறான். -ப. ஏற்பாடு
  • ஒரு தந்தை பத்துக் குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம், பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேணுவது அரிது. -ப. ஏற்பாடு
  • ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேலாவார். - இங்கிலாந்து
  • தந்தை தோட்டத்திற்குப் போனால், மகன் உழுவதற்குப் போவான். - இங்கிலாந்து
  • குழந்தைகளின் குற்றங்களை வெறுக்கும் தந்தையே அவர்களை நேசிப்பவன். -ஃபிரான்ஸ்
  • தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது.-ரஷ்யாகுதிரைகளும் மனிதர்களும் தாய்வழியைக் கொள்வார்கள் - இந்தியா
  • அன்னை அவன் வயிற்றைப் பார்ப்பாள், மனைவி முதுகைப் பார்ப்பாள். - இந்தியா
  • பசுவின் பின்னால் எப்பொழுதும் ஒரு கன்று இருந்து வரும் சில சமயங்களில் அது சொந்தக் கன்றா யிருக்கும் சில சமயங்களில் வேறு பசுவின் கன்றா யிருக்கும். -கீழை நாடுகள்
  • தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம். -ஆப்பிரிகா
  • குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர் தாய். - தாக்கரே
  • தாய் எப்படி வளர்க்கிறாளோ, அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள். - இங்கிலாந்து
  • தாயாரின் செல்லப் பிள்ளைகள் வெண்ணை வெட்டும் வீரர்களாகவே வருவார்கள். - இங்கிலாந்து
  • குழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிட மாட்டாள். - இங்கிலாந்து
  • தாயில்லாத வீடு வீடாகுமா? - இங்கிலாந்து
  • நடனத்தின் இசை நடுவிலும், தாய்க்குத் தன் குழந்தை களின் அழுகுரலே கேட்கும்.- ஜெர்மனிதாய்ப் பாலுடன் பருகியது சாகும் வரை உடலில் இருக்கும். -ஸ்பெயின்
  • தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை. - யூதர்
  • உங்களுடைய தந்தையையும் தாயையும் கௌரவியுங்கள். -ப. ஏற்பாடு
  • என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேட்டுக் கொள், உன் தாயின் சட்டத்தையும் புறக்கணிக்க வேண்டாம். -ப. ஏற்பாடு
  • எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை. -ஸ்பெயின்
  • புத்திசாலியான மகனால் தந்தை மகிழ்ச்சியடைகிறான். ஆனால் மூட மகனால் தாயின் உள்ளம் வருந்துகின்றது. -ப. ஏற்பாடு
  • தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிறான். -சீனா
  • தந்தையைக் குறை சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிறான். -சீனா
  • நல்ல கருவிலும் தீய பிள்ளைகள் உண்டாகி யிருக்கிறார்கள். -ஷேக்ஸ்பியர்
  • ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்கா விட்டால், சயித்தான் அவனுக்கு அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிறான். -ஸ்பெயின்
  • கலியாணம் செய்து கொள்ளும் மகன் தாயை விட்டுத் தாரத்தைப் பிடித்துக் கொள்கிறான். -யூதர்
  • தாய் உன்னைப் பல மாதங்கள் சுமந்து கொண்டிருந்தாள், மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள், பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந் தாள்... அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி வைத்துக்கொள்ளாதே. -எகிப்து
  • தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்; தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும். -ஸ்காட்லந்து
  • தந்தைதான் வீட்டுக்கு விருந்தாளி. -பல்கேரியா
  • தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை. -எஸ்டோனியா
  • தாய்ப்பாலோடு பருகியதெல்லாம் ஆன்மா பிரிந்து செல்லும் போதுதான் அதனுடன் வெளியே செல்லும். -ரஷ்யா
  • குழந்தையின் விரலில் வலியிருந்தால், தாயின் இதயத்தில் வலியுண்டாகும். -ரஷ்யா
  • கடவுள் உயரே யிருக்கிறார், பூமியில் தந்தை யிருக்கிறார். -ரஷ்யா
  • (ஒரு தந்தை ) ஒரு மகனை விட்டு ஒரு மகனிடம் போய் யாசிப்பதைவிட, வீடு வீடாக யாசித்தல் மேல். -ரஷ்யா
  • நல்ல மாற்றாந்தாய்க்குச் சுவர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது. -யூதர்
    [அப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாள்.]
  • மூட்டை கோழிக்கு அடைகாக்கச் சொல்லிக் கொடுக் கிறது! -ஆப்பிரிகா
  • அன்புக்கு உற்பத்திஸ்தானம் அன்னை. -ஆப்பிரிகா
  • அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது.--அவள் ஈடற்றவள். -ஆப்பிரிகா
  • குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவள் இருக்கிற இடத்தை விட்டு அசைய முடியாது. -அமெரிக்கா

திருமணம்

[தொகு]
  • ஒன்று இளமையிலேயே திருமணம் செய்து கொள் , அல்லது துறவியாகி விடு. -பல்கேரியா
  • குழந்தைக்குச் சோறு கொடுத்தால், தாய்ப்பாலை மறக்கும்; பெண்ணுக்கு கணவன் வந்தால், தாயை மறப்பன். - இந்தியா
  • வீட்டைக் கட்டிப் பார், கலியாணத்தைச் செய்து பார். - தமிழ்நாடு
  • பணக்காரர்கள் சீதனம் கொடுத்துப் பெண்களுக்கு மணம் செய்கிறார்கள்; மத்திய வகுப்பினர் பெண்களைக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். -சீனா
  • பதினைந்து ரூபாயில் ஒருவன் மனைவியைப் பெறலாம், ஆனால் ஒரு கோவேறு கழுதை வாங்க ஐம்பது ரூபாய் வேண்டும். -சீனா
  • விவாகமாகாத பெண்ணுக்கு ஒரு சிறகில் ஊனம். - அரேபியா
  • ஒரு பெண், பிறந்த வீட்டில் குடியிருப்பதைவிட, மரக்ட்டையையாவது மணந்து கொள்ளல் நலம். -அரேபியா
  • நிலம் வாங்குவதற்கு என்றால், வேகமாக ஓடு; விவாகம் செய்து கொள்வதற்கு என்றால், மெதுவாக நட -யூதர்
  • இளமையில் மணம் செய்து கொள், நீ இளமையாயிருக்கும் போதே பெரிய குழந்தைகளை அடைய முடியும். -குர்திஸ்தானம்
  • உடனிருந்து உண்பதும், குடிப்பதும், உறங்குவதுமே விவாகம் என்று நான் கருதுகிறேன். - ஃபிரான்ஸ்
  • ஆகக் கழிவான செருப்புக்கும் ஜோடி சேர்ந்துவிடும். - ஃபிரான்ஸ்
  • ஓநாயை அடக்கிவைக்க அதற்கு விவாகம் செய்து வை. - ஃபிரான்ஸ்
    [முரடனாயுள்ள மைந்தன், மனைவி வந்தால், அடங்கி விடுவான்.)
  • இளமைத் திருமணம் நீண்டகால அன்பு, - ஜெர்மனி
  • அழகுக்காக கலியாணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாயம், பகல் நேரங்களில் துக்கமாயும் இருப்பான். - ஜெர்மனி
  • ஓராண்டு இன்பம் வேண்டுவோர் திருமணம் செய்து கொள்வது நலம்; இரண்டாண்டுகள் இன்பம் வேண்டுமானால், திருமணம் செய்யவேண்டாம். - ஜெர்மனி
  • திருமணம் என்பது காதல் நோய்க்கு வைத்தியசாலை. - ஜெர்மனி
  • போருக்குப் போகும் போது ஒரு முறை தொழவும், கடலுக்குப் போகும் போது இருமுறை தொழவும், திருமணம் செய்யும் போது மும்முறை தொழவும். - ஜெர்மனி
  • ஒவ்வோர் ஆதாமுக்கும் ஓர் ஏவாள் இருப்பாள். - போலந்து
  • ஒரு மதுக்கிண்ணமும் பெண்ணும் அருகிலிருந்தால், ஒருவனுக்குப் பொழுது போவது தெரியாது. - போலந்து
  • மூன்று சகோதரர்களில் இருவர் மூளையுள்ளவர், ஒருவன் விவாகமானவன். - போலந்து
  • ஒருவன் மணந்து கொள்வது நல்லதுதான், ஆனால் மணமில்லாதிருப்பது அதைவிட நல்லது. - போலந்து
  • திருமணம் செய்வதற்கு முன்பு மூன்று வருடம் இஷ்டம் போல் வாழ்க்கை நடத்திக்கொள். - போலந்து
  • பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னால் அழுவாள் , ஆடவன் பின்னால் அழுவான். - போலந்து
  • கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக்கொண்டால், மேலும் குளிருக்கு அடக்கம்தான். -அயர்லந்து
    [உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது]
  • முதல் ஆண்டு முத்தமிடும் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முட்டிப் பாயும் ஆண்டு. -அயர்லந்து
  • நீ உன் மனைவியை மணந்து கொள்ளும் போதே உன் குழந்தைகளையும் மணந்து கொண்டு விட்டாய். -அயர்லந்து
    (விவாகமானால், குழந்தைகளின் பாரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.)
  • மனிதன் காதலிக்கும் பொழுது வசந்தம், கலியாண சமயத்தில் பனிக்காலம். -ஸ்காட்லந்து
  • பணத்திற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும். -ஸ்காட்லந்து
  • பானையாக உருண்டு சென்று மூடியை கண்டுபிடிக்கும். -பல்கேரியா
    (திருமணத்திற்கு ஜோடி சேரும்.)
  • கல்யாணம் ஒரு நாள், இரு நாள்தான், அதன் பலனோ நெடுநாள் இருக்கும். - செக்
  • ஒரு முறை விவாகம் கடமை; இருமுறை தவறு; மும்முறை பைத்தியம். -ஹாலந்து
  • நாலு மரக்கால் நிலக்கரி கொடுத்தால், ஒரு நாயகன் கிடைப்பான்; ஆனால் ஒரு 'டன்' கோதுமை கொடுத்தால் தான் ஒரு பெண் கிடைப்பாள். -எஸ்டோனியா
  • சமையல் மோசமானால், ஒரு நாள் நஷ்டம்; அறுவடை. மோசமானால், ஒரு வருட நஷ்டம்; விவாகம் மோசமானால் ஆயுள் முழுவதும் நஷ்டம். -எஸ்டோனியா
  • அதிகாலையில் எழுந்தவனும், இளமையில் மணந்தவனும் வருந்தியதில்லை. -எஸ்டோனியா
  • கணவன் தலை, மனைவி இதயம்- இப்படியுள்ள திருமணம். இன்பமானது. -எஸ்டோனியா
  • மனிதர் தானாக வரவேற்றுக் கொள்ளும் தீமை திருமணம். - கிரீஸ்
  • ஒவ்வொரு ஜாடிக்கும் ஒரு மூடி கிடைக்கும். - இத்தாலி
    (திருமணம்.)
  • 'அம்மா! விவாகம் என்பது என்ன?'
    ‘மாவரைத்தல், நூல் நூற்றல், குழந்தைகள் பெறுதல், அழுதல்‘. -மான்டினீக்ரோ
  • காதல் சிறகுகளைக் கொண்டு பறக்கும், திருமணம் இரண்டு கழிகளின் உதவியால் நடந்து வரும். -உருசியா
  • கலியாணத்தால் குளிர்ந்து போகாத காதல் நெருப்பு இல்லை. -உருசியா
  • திருமணம் என்றுதான் உண்டு, ஆனால் ‘பிரிமணம்' என்று கிடையாது. -உருசியா
  • ஆண்டவனே, என்னை இரண்டாவது கலியாணத்திலிருந்தும், மூன்றுவிட்ட தாயாதிகளிடமிருந்தும் காப்பாயாக. -உருசியா
  • ஒரு சகோதரிக்குக் கலியாணமானால், அடுத்தவளுக்கும் ஆகும். ஒரு தொட்டி விற்றால், அடுத்ததும் விலை யாகும். - செர்பியா
  • உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம். - ஸ்பெயின்
  • திருமணம் என்ற கோணியில் தொண்ணூற் றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும். - ஸ்பெயின்
  • காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும். - ஸ்பெயின்
  • திருமணம் செய்து கொண்டு அடங்கிக்கிட. - ஸ்பெயின்
  • திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது. - ஸ்பெயின்
  • வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்பவனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும். - சுவீடன்
  • கிழவன் ஒரு குமரியை மணந்து கொண்டால், அவன் இளைஞனாகி விடுவான், குமரி கிழவியாவாள். -யூதர்
  • உனக்கு உறவினர் இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள். -எகிப்து
  • கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால், அவனுக்குத் திருமணம் பற்றிய நினைவை உண்டாக்குவார். - ஜெர்மனி
  • முதலாவது மனைவி இறைவனிடமிருந்து வருகிறாள்; இரண்டாவது மனைவி மனிதரிடமிருந்து வாருகிறள் : மூன்றாவது மனைவி சயித்தானிடமிருந்து வருகிறாள், -ஹங்கேரி
  • ஓர் ஏழை பணக்காரியை மணந்து கொண்டால், அவள் மனைவியல்லள் -யஜமானி. - கிரேக்கம்
  • நான் விவாகம் செய்து கொள்ளவில்லை, என் தந்தையும் விவாகமில்லாது இருந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். - கிரேக்கம்
  • சமுதாயத்தின் முதற் கட்டுப்பாடு திருமணம். -லத்தீன்
  • திருமணத்தைப் புனிதமாக்குவது காதல் ஒன்றுதான், -டால்ஸ்டாய்
  • 'என்ன’ இவ்வளவு ஆத்திரம்?'
    'நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்!'
    'என்ன, முகம் வெளுத்திருக்கிறது?'
    'நான் திருமணம் செய்து கொண்டு விட்டேன்!' -உருசியா

நோய்

[தொகு]
  • கோழிக்கு ஊசிப்புண் போதும். - இந்தியா
  • எப்பொழுதும் நோயுள்ளவனுக்குப் பெயர் ஆரோக்கியசாமி. - இந்தியா
  • முதல் சாமத்தில் எல்லோரும் விழித்திருப்பர், இரண்டாவதில் போகி விழித்திருப்பான். மூன்றாவதில் திருடன் விழித்திருப்பான், நான் காவதில் நோயாளி விழித்திருப்பான். - இந்தியா
  • நோய் வந்து விட்டால் எந்த வைத்தியரையாவது அழை. -சீனா
  • வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத்தியர் வருவதற்குக் கதவைத் திறத்தலாகும். -சீனா
  • வயிற்றுப் பக்கம் நோயில்லையானால் நோயாளி இறக்க மாட்டான். -சீனா
  • கால் வலியை மறக்கலாம், தலைவலியை மறக்க முடியாது. -ஆர்மீனியா
  • நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணாக்கமாட்டான். -ஜெர்மனி
  • நோயே ஒரு வைத்தியன். -ஜெர்மனி
  • நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும். -ஜெர்மனி
  • நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும். -ஜெர்மனி
  • உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்து விடும். -போஸ்னியா
  • நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான். - இங்கிலாந்து
  • 'ஆஸ்துமா' வந்தவர் நெடுநாள் வாழ்வர். -அயர்லந்து
  • முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி. -அயர்லந்து
  • ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன். -அயர்லந்து
  • நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து. -அயர்லந்து
  • வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும். - வேல்ஸ்
    [மரணம்]
  • மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும். -பல்கேரியா
  • ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம். -ஹங்கேரி
  • ஈக்கும் இருமலுண்டு. - இத்தாலி
  • நோய் வந்தவுடனேயே அதைக் கவனிக்க வேண்டும். -லத்தீன்
  • நோயின் கசப்பிலிருந்துதான் மனிதன் ஆரோக்கியத்தின் இனிமையை அறிகிறான். -கடலோனியா
  • நோயாளியின் நண்பன் அவனுடைய கட்டில் தான் - ஆப்பிரிகா
  • நோயை மறைத்தல் அபாயம். -லத்தீன்
  • நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம் -ஸ்பெயின்
  • வரும்போதுநோய் குதிரைமேல் வரும், நீங்கும்போது நடந்து செல்லும். - இங்கிலாந்து
  • காலந்தோறும் நோயும் மாறுகின்றது. - இங்கிலாந்து
  • தடுமனுக்கு உணவு, காய்ச்சலுக்கு பட்டினி. - இங்கிலாந்து
  • புண்ணும் கட்டியும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும். -ஜப்பான்
  • பிணி ஒவ்வொரு மனிதனுக்கும் யஜமானன். -டென்மார்க்
  • பிணியே வராதவன் முதல் வகுப்பிலேயே இறந்து போவான் - இங்கிலாந்து
  • நோயாளியின் அறை பிரார்த்தனைக் கூடம். - இங்கிலாந்து
  • நோயாளி எதுவும் பேசலாம். - இதாலி
  • நோயுற்ற காலங்களில் ஆன்மா தன் வலிமையைச் சேர்த்து கொள்கின்றது. -லத்தீன்
  • நோய் நாம் யார் என்பதைக் காட்டுகின்றது. -லத்தீன்
  • நோயாளிக்கு தேனும் கசக்கும். -உருசியா

பழமை

[தொகு]
  • பழைய இஞ்சியில் காரம் அதிகம். -சீனா
  • நம் முன்னோர்கள் தேவர்களா யிருந்தால், நாம் மனிதர்களா யிருக்கிறோம்; அவர்கள் மனிதர்களா யிருந்தால், நாம் கழுதைகளா யிருக்கிறோம். -யூதர்
  • உயர்ந்த கட்டடங்களுக்கு ஆழமான அடிப்படை இருக்கும். - இங்கிலாந்து
  • ஒருவன் தன் தாய்நாட்டிற்கு நல்லமுறையில் தொண்டாற்றினால், அவனுடைய முன்னோர்களைப் பற்றிக் கவலையில்லை. -வால்டேர்
  • பழைய துணி-புதிய கிழிசல். -எஸ்டோனியா

பெண்கள்

[தொகு]
  • பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழிலுடையவள். -யூதர்
  • இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள், அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அழுவார்கள். -ஃபிரான்ஸ்
  • பெண் என்றால் பேயும் இரங்கும். - தமிழ்நாடு
  • ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மகன். -உருசியா
  • பெண்ணே, உன்னிடம் மூன்று நல்ல குணங்களும், நாலு லட்சம் தீய குணங்களும் இருக்கின்றன. நல்லகுணங்கள்: இசை பாடுதல், (இறந்த கணவனுடன்) சதியாக எரிதல், பிள்ளைகள் பெறுதல். -இந்தியா
  • மனிதனுக்குப் போர் எப்படியோ , அப்படிப் பெண்ணுக்குப் பிரசவம். -இந்தியா
  • பெண்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சயித்தான் கூடப் பிரார்த்தனை செய்கிறான். -இந்தியா
  • அத்திப்பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம், ஒரு பெண்ணின் மனத்திலுள்ளதைப் பார்க்கவே முடியாது. -இந்தியா
  • பெண்ணின் பேச்சிலே தேன் இருக்கிறது, உள்ளத்திலே நஞ்சைத் தவிர வேறில்லை. -இந்தியா
  • ஆடவர்களே இல்லாவிட்டால், பெண்கள் அனைவரும் கற்புடையவர்களே. -இந்தியா
  • ஏணியில்லாமலே தூக்கில் ஏற வேண்டுமானால், ஒரு பெண்ணின் உதவியால் முடியும். - இலங்கை
  • கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது. - ஜப்பான்
  • நாவுதான் பெண்ணுக்கு வாள், அது துருப்பிடிப்பதேயில்லை. - ஜப்பான்
  • பெண் மனிதனின் குழப்பம். -லத்தீன்
  • பெண்புத்தி பின்புத்தி. - தமிழ் நாடு
  • வயதுவந்த பெண் (தீர்வை கட்டாமல்) கடத்தி வந்த உப்பைப் போன்றவள். -சீனா (விரைவிலே வெளியேற்ற வேண்டும்.)
  • பெண்ணின் உரோமத்தால் பெரிய யானையையும் கட்டிப் பிடிக்கலாம். -சீனா
  • இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும். -சீனா
  • ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள். -அரேபியா
  • பெண்பிள்ளை பயணம் போகிறாள் என்றால், ஓர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பது தான் காரணம். -அரேபியா
  • ஒரு நல்ல பெண் ஏழு பிள்ளைகளுக்கு மேல். - ஆர்மீனியா
  • உனக்கு ஓர் இரகசியம் தெரியவேண்டுமா? ஒரு குழந்தை, பயித்தியக்காரன், குடிகாரன், அல்லது ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார். - ஆர்மீனியா
  • ஆணைவிடப் பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு அதிகம். -பர்மா
  • பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்கவேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணீர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிறான். -யூதர்
  • கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம். -யூதர்
  • பெண்ணுக்குக் கூந்தல் தான் நீளம், மூளை கட்டை. - கால்மிக்
  • பெண் முற்றிலும் ஆணின் உடைமையாகாள். -குர்திஸ்தானம்
  • மன்னன், மாது, குதிரை-மூன்றையும் நம்பவேண்டாம். -பாரசீகம்
  • பெண்ணால் துயரமே வரும், ஆயினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது. -பாரசீகம்
  • இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும் - அது ஒரு சந்தையாகிவிடும். -பாரசீகம்
  • பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும்: அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம். -பாரசீகம்
  • குடியானவனுக்கு வேண்டியது நிலம், பிரபுவுக்குக் கௌரவங்கள், சிப்பாய்க்கு யுத்தம், வியாபாரிக்குப் பணம், விவசாயிக்கு அமைதி, தொழிலாளிக்கு வேலை, சித்திரக்காரனுக்கு அழகு, பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை. -பாரசீகம்
  • பாடும் பெண்ணுக்கு அகமுடையான் தேவை. -அல்பேனியா
  • அழகான பெண்ணும், நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும். -இங்கிலாந்து
  • விகாரமான ஸ்திரீ வயிற்றுவலி, அழகுள்ளவள் தலைவலி. -இங்கிலாந்து
  • பத்து வயதில் பெண் தேவகன்னியா யிருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போலிருப்பாள், நாற்பதில் சயித்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள். -இங்கிலாந்து
  • பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். -இங்கிலாந்து
  • பெண்களுக்கும், குருமார்களுக்கும், கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது. -இங்கிலாந்து
  • பெண்பிள்ளை சயித்தானை வென்று விடுவாள். -அயர்லந்து
  • உயிருள்ளவரை பெண்களுக்கு வர்ணங்களில் ஆசையிருக்கும். -அயர்லந்து
  • சணலை நெருப்பிலிருந்து காப்பது கஷ்டம். - ஸ்காட்லந்து
  • வாயாடியின் வாய் சயித்தானின் அஞ்சல் பை. -வேல்ஸ்
  • பெண்கள் சயித்தானின் சாட்டைகள். -வேல்ஸ்
  • பெண் உள்ளம் தாமரை இலைமேல் உருளும் நீர்த்துளிபோல் நிலையற்றது. -சயாம்
  • உறுதியான செருப்பு வேண்டுமானால், ஒரு பெண்ணின் நாவை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும் அது ஒரு போதும் தேயாது. -ஃபிரான்ஸ்
  • மூன்று விலங்குகளே தம்மைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தைக் கழிப்பவை- அவை பூனைகள், ஈக்கள், பெண்கள். -ஃபிரான்ஸ்
  • மனிதனின் பணப் பைக்காகவே பெண் படைக்கப் பெற்றிருக்கிறாள். -ஃபிரான்ஸ்
  • ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும். -ஜெர்மனி
  • கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் சிறைவாசம். -ஜெர்மனி
  • கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு. -ஜெர்மனி
  • ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. -ஜெர்மனி
  • ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும், ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள். -ஜெர்மனி
  • துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள். -ஜெர்மனி
  • நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம். - போலந்து
  • கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லு; நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு. - போலந்து
  • கன்னிப் பெண்ணிடம் உன் விருப்பம் போல் நடக்கலாம். விதவையிடம் அவள் விருப்பம் போலவே நீ நடக்க வேண்டும். - போலந்து
  • பெண்ணின் யோசனையால் பயனில்லை யென்றாலும், அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான். - வேல்ஸ்
  • நீண்ட தலைக்காரிக்கு ஆழமில்லாத உள்ளம். - பல்கேரியா
  • செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள். - பல்கேரியா [மேலை நாடுகளில் கம்பள நூல் நூற்றல் கன்னியர் செய்யவேண்டிய தொழில்.]
  • பெண்கள் சீட்டியடித்தால், சயித்தானுக்குச் சிரிப்பு அடங்காது. -ஜெர்ஸீ
  • அத்தையிடம் ஒரு விஷயம் சொன்னாற் போதும், அகிலமெல்லாம் பரவிவிடும். -ஸெக்
  • பன்னிரண்டு வயது வரை உன் மகளுக்குத் தலை வாரிவிடு;. பதினாறு வயதுவரை பாதுகாத்து வை; பின்னர் எவ்ன் மணந்து கொள்ள வந்தாலும், அவளைக் கொடுத்து, நன்றியும் சொல்லு. -ஸெக்
  • நாய்க்கு மேலாக நாம் குரைக்க முடியாது, காகத்திற்கு மேலாகக் கரைய முடியாது, ஒரு பெண்ணுக்கு மேலாகச் சண்டைபோட முடியாது. -ஸெக்
  • ஒரு பெண் சீட்டியடித்தால், ஏழு ஆலயங்கள் அதிரும். -ஸெக்
  • பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை, ஆனால் அவள் அதை அணிவது அபூர்வம். -டென்மார்க்
  • வயிரம் போன்ற மகள் மனைவியாகும் போது கண்ணாடியாக மாறுகிறாள். - ஹாலந்து
  • பெண்களைப் பெற்றவன் எப்பொழுதுமே மேய்க்க வேண்டிய ஆயன். - ஹாலந்து
  • புதர்களெல்லாம் பெண் இனம். - எஸ்டோனியா [பெருகக் கூடியவை.]
  • ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள். - எஸ்டோனியா
  • ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு. - எஸ்டோனியா
  • மனிதன் வேலை காரணமாக வெளியே போகிறான், பெண் தன்னைப் பிறர் பார்ப்பதற்காகப் போகிறாள். -ஃபின்லந்து
  • பெண்ணை அவள் இறந்த பிறகும் நம்பவேண்டாம். - கிரீஸ்
  • கடல், தீ, பெண்கள்: மூன்றும் தீமைகள். - கிரீஸ்
  • பெண்ணின் ஆயுதங்கள் கண்ணீர்த் துளிகள். -ஜியார்ஜியா
  • அதிக வயதாகியும் கன்னியா யிருப்பவள் அஞ்சலில் சேராத கடிதம் போன்றவள். -ஹங்கேரி
  • கோபம் வந்த பெண் கரையில்லாத கடல். -லத்தீன்
  • கன்னியின் இதயம் இருண்ட கானகம். -உருசியா
  • இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை. -உருசியா
  • சிரிக்கிற பெண்ணையும் அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம். -உருசியா
  • எந்தப் பெண்களைப் பற்றி அதிகமாய்ப் பேச்சில்லையோ அவர்கள் மிகவும் நல்லவர்கள். -சைலீஷியா
  • அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும். -ஸ்பெயின்
  • மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள். -ஸ்பெயின்
  • கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல். -ஸ்பெயின்
  • கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை. -ஸ்பெயின்
  • தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள். -ஸ்பெயின்
  • கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம். -ஸ்பெயின்
  • கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள். -ஸ்பெயின்
  • பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள். -ஸ்பெயின்
  • கெட்ட பெண்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்படி ஆண்டவனை வேண்டு; நல்ல பெண்களிடமிருந்து நீயே உன்னைக் காத்துக்கொள். -யூதர்
  • நாயைப் போன்றவள் பெண்; எலும்பைக் காட்டினால் நாய் ஏமாந்து பின்னால் வரும். -ஆப்பிரிகா
  • மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது. -அரேபியா
  • தந்தைக்கு அடங்கி நடத்தல், கணவனுக்கு அடங்கி நடத்தல், மகனுக்கு அடங்கி நடத்தல்- இம்மூன்றுமே ஒரு பெண்ணுக்குரிய மூன்று பண்புகள். -சீனா
  • அன்பான சில வார்த்தைகளே பெண்ணுக்கு அணிகலன். -டென்மார்க்
  • பெண்கள் மூடர்களாயிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை: மனிதர்களுக்குப் பொருத்தமா யிருப்பதற்காகவே சர்வவல்லமையுள்ள கடவுள் அப்படிப் படைத்திருக்கிறார். -ஜியார்ஜ் எலியட்
  • பெண்களும் யானைகளும் மறப்பதேயில்லை. -பார்க்கர்
  • பெண்கள் அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளைத் தவிர வேறில்லை. - செஸ்டர்ஃபீல்டு
  • ஆடவர்களால்தான் பெண்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வெறுக்கின்றனர். -ஃபிரான்ஸ்
  • எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகியில்லை யென்று சொல்லியதில்லை. -ஃபிரான்ஸ்
  • அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான். -ஜெர்மனி
  • கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள். -ஜெர்மனி
  • நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது. - கதே
  • மௌனம் பெண்ணுக்குப் பெருந்தன்மை யளிக்கிறது. -ஸாபாகிளிஸ்
  • மனிதனுக்கு உயர்ந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணாலேயே கிடைக்கின்றன. - கிரீஸ்
  • ஒரு பெண்ணுக்குப் பின்னால் செல்வதைவிட, ஒரு மனிதன் சிங்கத்தின் பின்னால் செல்வது மேல். -யூதர்
  • பெண், விருப்போ வெறுப்போ அடையும் பொழுது, எதையும் செய்யத் துணிகிறாள். -லத்தீன்
  • செல்வமுள்ள ஸ்திரீயைப்போல் சகிக்க முடியாதது வேறில்லை. -லத்தீன்
  • தீய யோசனை சொல்வதில் பெண்கள் ஆடவர்களை வென்றுவிடுவார்கள். -லத்தீன்
  • தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும். -ஸ்பெயின்
  • ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான். -ஸ்பெயின்
  • நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும். -ஸ்பெயின்
  • நல்ல திராட்சை மதுவைப்போல், பெண்ணும் இனிமையானவிஷம். - துருக்கி
  • ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை. -எஸ்டோனியா (தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்.)
  • ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கினும் ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம். - செர்பியா
  • கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு; நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம். - செர்பியா

பெண் பார்த்தல்

[தொகு]
  • தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு. - தமிழ்நாடு
  • வலுவில் வந்தவள் கிழவி. - தமிழ்நாடு
  • கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு. - துருக்கி
  • மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும். -ஆர்மீனியா
  • அதிக அழகுள்ளவர்களைக் காட்டிலும் குருட்டுப் பெண் தேவலை. -பர்மா
  • ஒரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் தாயை அறியவேண்டும்; மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள அவள் தாய்வழிப் பாட்டியைப் பற்றியும் விசாரித்து அறியவேண்டும். -சயாம்
  • காதைக் கொண்டு பெண்ணைப் பார், கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டாம். - போலந்து
  • கலியாணத்திற்குப் பெண் தேடி நெடுந்தூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான். அல்லது தான் ஏமாறுவான். - இங்கிலாந்து
  • பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும். -ஸெக்
  • செழிப்பான பண்ணையிலிருந்து குதிரையை வாங்கு; ஏழைப் பண்ணையிலிருந்து பெண்ணை வாங்கு. - எஸ்டோனியா
  • மாதாகோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே. - எஸ்டோனியா
  • ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க மனிதனுக்குப் போதிய நேரம் இருக்கிறது. - ஃபின்லந்து
  • ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு. - ஃபின்லந்து
  • எல்லாப் பெண்களிலும் உனக்கு மிகவும் அருகிலுள்ள பெண்ணையே மணந்துகொள். - கிரீஸ்
  • குதிரைகள் வாங்கும் போதும், பெண் எடுக்கும் போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும். -லத்தீன்
  • முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக்கொள்ளலாம். - நார்வே
  • மணப் பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழக வேண்டும். -உருசியா
  • உபதேசியாரிடம் குதிரை வாங்காதே, விதவையிடம் பெண் கொள்ளாதே. -உருசியா
  • உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே. - ஸ்பெயின்
  • பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு. -ஆப்பிரிகா
  • குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது. -ஆப்பிரிகா
  • அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன். -ஆப்பிரிகா
  • திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக்கொள், பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள். -ஆப்பிரிகா
  • பிறர் புகழும் குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள். - எஸ்டோனியா

மரணம்

[தொகு]
  • மரணத்தின் காரணம் பிறப்பு. - பௌத்தம்
  • மனிதன் பிறந்தவுடன் மரிக்கத் தொடங்குகிறான். - இங்கிலாந்து
  • இறந்தவனுக்குக் குளிரில்லை. - இங்கிலாந்து
  • திடீர் மரணம் திடீர் இன்பம். - இங்கிலாந்து
  • வைத்தியருக்கும் மரணம் உண்டு. - இங்கிலாந்து
  • மரணத்தற்கு அஞ்சுபவன் வாழ்பவனாகான். - இங்கிலாந்து
  • பிறப்பது போலவே, இறப்பதும் இயற்கை. - இங்கிலாந்து
  • முற்றும் கனிந்த கனி முதலில் விழும். - இங்கிலாந்து
  • பிறக்கும் பொழுதுதான் நாம் அழுகிறோம், மரிக்கும்பொழுதன்று. - இங்கிலாந்து
  • எல்லா மனிதரும் சீரஞ்சீவிகளா யிருக்கவே விரும்புகின்றனர். - இங்கிலாந்து
  • வாழ்வில் (நன்கு) வாழாதவன் மரணத்திற்குப் பின்னும் வாழமாட்டான். - இங்கிலாந்து
  • மறு வாழ்க்கையை அலட்சியம் செய்பவன் இந்த வாழ்க்கைக்குத் தீங்கிழைக்கிறான். - யங்
  • நித்தியமான வாழ்க்கையைத் தவிர வேறில்லை என்றே நான் நினைக்கிறேன் என்பதைச் சத்தியமாய்ச் சொல்லுகிறேன். -விட்மன்
  • நித்தியமான வாழ்க்கையை விரும்புதல் ஒரு பெரிய தவறுதலை நிரந்தரமாக நிலைக்கும்படி செய்வதாகும். -ஷேக்ஸ்பியர்
  • நீயோ புழுதி, புழுதிக்கே நீ திரும்பவேண்டும். -ப. ஏற்பாடு
  • இலை வாடுவது போல், நாம் அனைவரும் வாடிவிடுவோம். -ப. ஏற்பாடு
  • மரணம் கொம்பு ஊதிக் கொண்டு வருவதில்லை. -டென்மார்க்
  • அதிருஷ்டம் சிலருக்கே உண்டு, மரணம் எல்லோர்க்கும். உண்டு. -டென்மார்க்
  • ஒருவருக்காக மற்றொருவர் உயிர் துறக்க முடியாது. -ஃபிரான்ஸ்
  • பாம்பு சாகும் பொழுதே அதன் விடமும் செத்துவிடும். -ஃபிரான்ஸ்
  • மரணம் என்பது புனிதமான உறக்கம். - கிரீஸ்
  • பகலை இரவில் புகழுங்கள், வாழ்வை முடிவில் புகழுங்கள். - கிரீஸ்
  • புகழ் பெற்ற மனிதர்க்கு உலகு அனைத்துமே சமாதி. - கிரீஸ்
  • மரணம் ஆண்டிக்கும் உண்டு, போப்பாண்டவருக்கும் உண்டு. - இத்தாலி
  • இறந்தவன் ஒருவனைத் தூக்க நாலு பேர் வேண்டும். - இத்தாலி
  • ஆறடி நிலம் அனைவரையும் சமானமாக்குகின்றது. - இத்தாலி
  • மரணம் மருத்துவருக்கு அஞ்சாது. -லத்தீன்
  • ஓடுகிறவனுக்கு முன்னால் மரணம் ஓடி நிற்கும். -லத்தீன்
  • மரணம்- வாழ்க்கையின் வாயில். -லத்தீன்
  • இறந்தவனுக்கு மரியாதை நம் நினைவு, கண்ணீர் அன்று. -லத்தீன்
  • மரணத்தின் நினைவோடு வாழ்வாயாக. -லத்தீன்
  • செத்தவனைத் தொடர்ந்து கொன்றவனும் விரைந்து செல்கிறான். -லத்தீன்
  • தன் காலம் முடியாமல் எவனும் இறப்பதில்லை. -யூதர்
  • இளைஞர் இறக்கக்கூடும், முதியோர் இறந்தே ஆகவேண்டும். -யூதர்
  • வீட்டிலே மருந்து இருக்கிறது, ஆனாலும் நாம் மரிக்க வேண்டியவர்களே. - இந்தியா
  • பிறப்பதற்கு ஒரு நாளுண்டு, இறப்பதற்கும் ஒரு நேரமுண்டு. -சீனா
  • பிறத்தல் என்பது வெளியே வருதல், இறத்தல் என்பது திரும்பிச் செல்லல். -சீனா
  • மரணம் நமது விருந்தாளி. - குர்திஸ்தானம்
  • மனிதன் பிறக்கும் பொழுது, அவன் அழுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள்; அவன் இறக்கும் பொழுது, அவன் சிரிக்கிறான், மற்றவர்கள் அழுகிறார்கள். -ஜெர்மனி
  • சவப் பெட்டி தொட்டிலின் சகோதரன். -ஜெர்மனி
  • (நாள் பார்த்துவர) மரணத்திடம் பஞ்சாங்கம் கிடையாது. - இங்கிலாந்து
  • செத்த மீன்கள் வெள்ளத்தோடு பேயாவிடும். - இங்கிலாந்து
  • மரணமே உலகின் யசமானன். - அயர்லந்து
  • மரணம் உண்மையே பேசும். -பல்கேரியா
  • மரணமில்லாவிட்டால், வாழ்க்கை அற்புதமானதுதான். -பல்கேரியா
  • அவன் பாயைச் சுருட்டும் நேரம் வந்து விட்டது. -ஜெர்ஸீ
    [மரணத் தருவாய்]
  • மனிதன் மரணத்தின் குழந்தை. - எஸ்டோனியா
  • சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம். - எஸ்டோனியா
  • பிறப்பைத் தப்ப முடியாதவன் இறப்பையும் தப்பமுடியாது. - பின்லந்து
  • உலகத்தைவிட்டு வெளியேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன; ஆனால் இங்கு வருவதற்கு ஒரே வழிதான் உண்டு. -போர்ச்சுகல்
  • மரணத்திற்கு விலை உண்டு; வாழ்வைக் கொடுத்து மரணத்தை வாங்க வேண்டியிருக்கிறது. -உருசியா
  • மரணம் வீட்டுக்கு வந்துவிட்டால், மரண அவஸ்தை தீர்ந்தது. -உருசியா
  • கண்ணீர் உயிரைப் பிடித்து வைக்க முடியாது. - ஆப்பிரிகா
  • செத்தவற்றிலும் உயிருள்ளவை இருக்கும், உயிருள்ளவைகளிலும் இறந்தவை இருக்கும். - ஆப்பிரிகா
  • மரணம் வீட்டின் உடைமைக்காரன், அந்நியனல்லன். - ஆப்பிரிகா
  • தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருப்பதைவிட, ஒரேயடியாக மரித்தல் மேலானது. -கிரீஸ்
  • மனிதர் நியாயமற்ற முறையில் மரணத்தை வெறுக்கின்றனர்; அவர்களுடைய பல துயரங்களுக்கும் அதுவே காப்பாயிருக்கின்றது. -கிரீஸ்
  • மரணத்தில் பயங்கரம் ஒன்றுமில்லை, கேவலமான மரணமே அத்தகையது. -கிரீஸ்
  • நல்ல மரணம் வாழ்வு முழுவதும் பெருமையளிப்பது. - இத்தாலி
  • உழைப்பு, கவலைகளிலிருந்து ஓய்வு பெறுவது மரணம். -லத்தீன்
  • மரணம் எல்லாப் பொருள்களையும் சமமாக்குகின்றது. -லத்தீன்
  • மரணம் உனக்காக எங்கே காத்திருக்கும் என்பது நிச்சயமில்லை; ஆதலால் அதை எங்குமே எதிர்பார்க்க வேண்டும். -லத்தீன்
  • போய் விட்டான் என்று நீங்கள் சொல்பவன் (நமக்கு) முன்னால் போய் நிற்கிறான். -லத்தீன்
  • உன் கடைசி நாளை எண்ணி அஞ்சவும் வேண்டாம், அதை விரும்பவும் வேண்டாம். -லத்தீன்
  • இறந்தோரைப் பற்றிப் பெருமையாக மட்டும் பேசு. -லத்தீன்
  • மரணத்திற்கு மருந்தில்லை. -லத்தீன்
  • மரணம் வயது முதிர்ந்ததைக் கொண்டு போவதில்லை, பழுத்ததையே கொண்டு போகின்றது. -உருசியா
  • மரணம் குட்டிகளையும், ஆடுகளையும் சேர்த்து விழுங்குகின்றது. - ஸ்பெயின்
  • மரணம் உண்மையைப் புலப்படுத்துகின்றது. - யூதர்

மருத்துவம்

[தொகு]
  • காலம்தான் தலை சிறந்த வைத்தியர். -யூதர்
  • ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன். - தமிழ் நாடு
  • வைத்தியரின் மரங்களுக்கு நம் கண்ணீர்தான் தண்ணீர். - இந்தியா
  • வைத்தியருக்கு மூக்கிலே படர்தாமரை. - இந்தியா
  • அரைகுறை வைத்தியனால் உயிருக்கு ஆபத்து, அரைகுறை முல்லாவால் சமயத்திற்கே ஆபத்து. - இந்தியா
    [முல்லா- முஸ்லிம்களின் குரு]
  • நீதிபதி, வைத்தியர் இருவரிடமிருந்தும் இறைவன் என்னைக் காப்பானாக. -துருக்கி
  • உடலைக் குணப்படுத்தலாம், மனதைக் குணப்படுத்த முடியாது. -சீனா
  • வைத்தியர் தூரத்திலிருந்து கொண்டே மருந்து அனுப்புதல், குருட்டுக் கண்ணால் பார்ப்பது போலாகும். -யூதர்
  • இலவச வைத்தியம் - பயனற்ற மருந்தாயிருக்கும். -யூதர்
  • நோயை சொன்னால்தான், குணமாக மருந்து கிடைக்கும். - ஃபிரான்ஸ்
  • வைத்தியர் வந்தாலே, நோய் குணமாகத் தொடங்கிவிடும். - ஃபிரான்ஸ்
  • வைத்தியர்கள் மட்டும் பொய் சொல்ல அனுமதியுண்டு. - ஃபிரான்ஸ்
  • மெத்தப் படித்த வைத்தியரை விட ஆக்கமுள்ள வைத்தியர் மேல். -ஜெர்மனி
  • வைத்தியர் இளமையா யிருந்தால், எப்பொழுதும் மூன்று சவக்குழிகள் தயாரா யிருக்கவேண்டும். -ஜெர்மனி
  • வைத்தியனுக்கு மூன்று விஷயங்கள் தேவை: சிங்கத்தின் இதயம், பெண்ணின் கரம், கழுகின் பார்வை. -ஜெர்மனி
  • நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும், வைத்தியருக்கு 'ஃபீஸ்' உண்டு. - போலந்து
  • பிச்சைக்காரர்களுக்குள் அவ்வளவு துவேஷம் கிடையாது. வைத்தியர்களுக்குள்ளே அதிக வெறுப்பு உண்டு. - போலந்து
  • தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்பவனுடைய நோயாளி மூடன். -இங்கிலாந்து
  • பல வைத்தியர்கள் பார்த்தால், மரணம் நிச்சயம்தான். -ஸெக்
  • தண்டனை யடையாமல் கொல்லக்கூடியவர் வைத்தியர் ஒருவரே. -ஹங்கேரி
  • எல்லோரும் ஆரோக்கியமா யிருந்தால், வைத்தியர் பாடு திண்டாட்டம். -ஹங்கேரி
  • கடுமையான நோய்க்குக் கடவுளே வைத்தியர். -ஹங்கேரி
  • ஒரு தொழிலும் தெரியாதவன் வைத்தியனாகிறான். - இத்தாலி
  • வைத்தியர்கள் அதிகமானால், நோய்கள் பெருகும். -போர்ச்சுகல்
  • வைத்தியர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள். - ரஷ்யா
  • ஒவ்வொரு பிணிக்கும் வைத்தியரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வக்கீலை நாட வேண்டாம். -ஸ்பெயின்
  • மரணம்தான் கடைசி வைத்தியர். -ஸ்பெயின்
  • நீ வைத்தியரை வெறுத்தால், பிணியையும் வெறுக்க வேண்டும். - ஆப்பிரிகா
  • அநுபவமில்லாதவன் வைத்தியரைக் குணப்படுத்திவிடுவான். - ஆப்பிரிகா
  • நீயோ வைத்தியரை ஏமாற்றிவிட்டாய்; அடுத்த நோய்க்குச் சொந்த வைத்தியம் செய்துகொள். - ஆப்பிரிகா
  • வைத்தியர்களில் வயதானவர், வக்கீல்களில் வாலிபர். - இங்கிலாந்து
  • குணப்படுத்துவது கடவுள், சம்மானம் பெறுவது வைத்தியர். - இங்கிலாந்து
  • தேவை வருமுன்பே வைத்தியருக்கு மரியாதை செய்ய வேண்டும். - இங்கிலாந்து
  • வைத்தியரிடத்திலும் வக்கீலிடத்திலும் உண்மையை மறைக்காதே. -இத்தாலி
  • வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. - தமிழ் நாடு
  • ஒன்றும் தெரியாத வைத்தியன் கொலைகாரனைத் தவிர வேறில்லை. -சீனா
  • வாலிப நாவிதன், வாலிப வைத்தியன் இருவரிடமும் எச்சரிக்கையா யிருக்கவேண்டும். - இங்கிலாந்து
  • வைத்தியர் குணமாக்கினால் சூரியனுக்குத் தெரியும், வைத்தியர் கொன்று விட்டால், பூமிக்குத் தெரியும். - இங்கிலாந்து
  • வைத்தியர்கள் கலந்து ஆலோசிப்பதற்குள், நோயாளி இறந்து விடுகிறான். - இங்கிலாந்து
  • வைத்தியருக்குக் கொடுப்பதை ரொட்டிக்காரனுக்குக் கொடு. -ஃபிரான்ஸ்
  • வைத்தியருக்குக் கொடுப்பதை இறைச்சிக்காரனுக்குக் கொடு. -ஃபிரான்ஸ்
  • நோயைக் காட்டிலும் வைத்தியருக்கு அஞ்ச வேண்டும். -ஃபிரான்ஸ்
  • ஒவ்வொரு வைத்தியரும் தம் மாத்திரைகளே உயர்ந்தவை என்று எண்ணுகிறார். -ஜெர்மனி
  • புது வைத்தியர் புதிதாகச் சவக்குழி தோண்டுபவர். -ஜெர்மனி
  • நல்ல வைத்தியர் எவரும் தாம் மருந்து உண்பதில்லை. -இத்தாலி
  • வைத்தியர் மனத்திற்கு ஆறுதலளிப்பவரைத் தவிர வேறில்லை. -லத்தீன்
  • நோய்களுக்கு அஞ்சி ஓடும் பொழுது, நீங்கள் வைத்தியர் கைகளில் சிக்குகிறீர்கள். -லத்தீன்
  • சூரியன் ஒரு போதும் வராத இடத்திற்கு வைத்தியர் அடிக்கடி வருவார். - ஸெக்

மருந்து

[தொகு]
  • சுத்தமான தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து. -ஸ்லாவேகியா
  • இனிப்பான மருந்துகளும், இன்பமான நோய்களும் உண்டா ? - இந்தியா
  • சாவைத் தடுக்க மருந்தில்லை. - இந்தியா
  • ஒற்றடம் போடுதல் பாதி வைத்தியம். - இந்தியா
  • பூண்டு தின்ற பின்னும் நோய் தீரவில்லை. - இந்தியா
    [உள்ளிப்பூடு அவ்வளவு விசேஷமாகக் கருதப்படுகின்றது.]
  • பட்டினி யிருத்தல் பரம ஔடதம். - இந்தியா
  • விடத்திற்கு மருந்து விடம்தான். - இந்தியா
  • மருந்து கால் பாகம், மதி முக்கால் பாகம். - தமிழ்நாடு
  • குரங்குப் புண்ணுக்கு மருந்தில்லை. - தமிழ்நாடு
  • மருந்தை உண்டு பத்தியம் காவாதவன் வைத்தியரின் திறமையை வீணாக்குகிறான். -சீனா
  • மருந்து கொல்லுவதில்லை, வைத்தியரே கொல்லுகிறார். -சீனா
  • பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை, தாம் உண்ட மருந்துகளாலேயே மடிகின்றனர். - ஃபிரான்ஸ்
  • அளவில்லாவிட்டால், மருந்தும் விஷமாகும். - போலந்து
  • கடவுள் ஒவ்வொரு பிணிக்கும் ஒரு பச்சிலை அளித்திருக்கிறார். -பல்கேரியா
  • வாழவேண்டியவனுக்கு மருந்துக்குப் பஞ்சமில்லை. -பல்கேரியா
  • பச்சிலைகளில் சிறந்தவை பசி, உழைப்பு, வியர்வை. - குரோஷியா
  • நாள்தோறும் ஆப்பிள் உண்பவன் வைத்தியர் பிழைப்பைக் கெடுக்கிறான். - ஸெக்
  • நாய்க்கடிக்கு நாயின் ரோமம் மருந்தாகும். -ஹங்கேரி
  • வெந்நீரும், 'எனிமா'வும் கொண்டே எல்லாப் பிணிகளையும் குணமாக்கலாம். - இதாலி
    [குடலில் நீரேற்றும் குழாய் 'எனிமா.']
  • பூண்டு ஏழு பிணிகளைத் தீர்க்கும். -ரஷ்யா
  • தலையில் வலி யெடுத்தால், மூட்டில் தைலம் தடவு. -ஸ்பெயின்
  • உணவோடு சேர்த்து மருந்தைக் கொடுத்தால், நோய் குணமாகா விட்டாலும், பசியாவது ஆறும். - ஆப்பிரிகா

மருமகன்

[தொகு]
  • நல்ல மாப்பிள்ளை கிடைத்தவன் ஒரு மகனை அடைந்தவன்; தீய மாப்பிள்ளை கிடைத்தவன் தன் மகளை இழந்தவன். -பிரான்ஸ்

மனிதன்

[தொகு]
  • பல்லக்கில் இருப்பவன் மனிதன், பல்லக்குத் தூக்குபவனும் மனிதன் தான். -சீனா
  • உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி. -ஆர்மீனியா
  • உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி. -ஆர்மீனியா
  • ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்கவேண்டும். - இத்தாலி
  • மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை. -லத்தீன்
  • நீ கடலுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆறு. - இத்தாலி
  • மனிதன் நடமாடும் பிணம். - உருசியா
  • ஒருவன் பூரண மனிதனாக விளங்க வேண்டுமானால், அவன் பொதுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும், பல்கலைக் கழகத்தில் ஓராண்டும், சிறையில் இரண்டாண்டுகளும் கழித்திருக்க வேண்டும். - உருசியா
  • ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே. -ஸ்பெயின்
  • மெலிந்தவனை அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை. -ஆப்பிரிகா
  • மனிதன் தானே தனக்குச் சயித்தான். -இந்தியா
  • மலை இடம் பெயர்ந்து விட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனால் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம். - அரேபியா
  • மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள். - அரேபியா
  • மேலான மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கின்றது; சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது. -கன்ஃபூஷியஸ்
  • மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன். -ஹாலந்து
  • வெட்கம் மனிதனை விட்டு விலகி நின்றால், அவன் விலங்காவான். -சுவின்பர்ன்
  • தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன். -இங்கிலாந்து
  • மனிதன் இயற்கையில் ஓர் அற்புதம். -இங்கிலாந்து
  • மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே. -இங்கிலாந்து
  • சிரிக்கும் மிருகம் மனிதன் ஒருவன் தான். -இங்கிலாந்து
  • வெட்கப்படும் விலங்கு மனிதன் ஒருவனே. - மார்க்ட்வெயின்
  • மனிதர்களுக்கு மனம் பளிங்கு, பெண்களுக்கு மனம் மெழுகு. -ஷேக்ஸ்பியர்
  • இரக்கமற்ற தன்மையைக் காட்டிலும் மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை. -ஸ்பென்ஸர்
  • புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம். -ஃபிரான்ஸ்
  • மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான். -ஜெர்மனி
  • மிருகத்தையும் அதிமானிடனையும் பிணைத்துக் கட்டும் கயிறு மனிதன். -நீட்ஷே
    [மனிதனே தன்னிலும் மேம்பட்ட அதிமானிடனாகப் பரிணமிக்க முடியும் என்ற கொள்கையுடையவர் நீட்ஷே, என்ற தத்துவஞானி.]
  • மனிதனுக்கு மனிதன் கடவுள். - கிரீஸ்
  • பெரும்பாலான மனிதர் தீயவர். - கிரீஸ்
  • மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு. -லத்தீன்
  • மனிதன் தனக்கு எவ்வளவு வேண்டியவனோ அதைவிட அதிகமாகத் தேவர்களுக்கு வேண்டியவன். -லத்தீன்
  • மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான். -லத்தீன்
  • மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப் பொருளாவான். -செனீகா
  • ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது. -யூதர்

மனைவி

[தொகு]
  • இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி. -இந்தியா
  • இல்லாள் இல்லாத வீட்டில் பேய்கள் குடியிருக்கும். -இந்தியா
  • விவாகமான பெண்கள் அனைவரும் மனைவியர் ஆகமாட்டார் -ஜப்பான்
  • தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்து போகும் பயிருக்குச் சமானம். -ஜப்பான்
  • இளம் மனைவி தன் வீட்டில் நிழலாகவும், எதிரொலியாகவுமே இருக்க வேண்டும். -ஜப்பான்
  • மனைவியின் மூன்று அங்குல நீளமுள்ள நாக்கு ஆறு அடி உயரமுள்ள மனிதனைக் கொல்ல முடியும். -ஜப்பான்
  • மனைவியரும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பா யிருப்பவை. -ஜப்பான்
  • உன்னிடம் ஏழு பிள்ளைகள் பெற்றிருந்தாலும், அந்தப் பெண்ணை நம்ப வேண்டாம். -ஜப்பான்
  • உன் தாயின் கண்கள் அவளைக் கவனிக்கும்வரை நீ ஒரு பெணணை நம்பலாம். -ஜப்பான்
  • சேவலுக்கு வாழ்க்கைப் பட்டால், அதன் பின்னேதான் செல்ல வேண்டும். -சீனா
  • ஒற்றைத் திறவுகோல் கிலுகிலுக்காது. -சீனா
  • ஒரே மனைவியிருந்தால், வீட்டில் சண்டைஇராது. -சீனா
  • அழகில்லாத மனைவியரும், அறிவில்லாத வேலைக்காரிகளும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள். -சீனா
  • மனைவியால் அவதிப்படுவோன்-அந்தோ பரிதாபம்! -அரேபியா
  • மனிதன், தன்மனைவியைத் தவிர, மற்ற எதைப்பற்றிப் பேசினாலும், பொறுத்துக் கொண்டிருப்பான். -பாரசீகம்
  • ஊமையான மனைவி கணவனிடம் அடிபடுவதேயில்லை. -ஃபிரான்ஸ்
  • தேனீயை மனைவியாக உடையவன் சந்தோஷமாக யிருப்பான். -ஜெர்மனி
    [சுறுசுறுப்புள்ள மனைவியால் ஆக்கம் பெருகும்.]
  • ஃபிடிலைப் போல் பெண்ணை மீட்டிவிட்டு உயரே தூக்கி வைத்து விடமுடியாது. -ஜெர்மனி
  • குடியானவன் தன் மனைவியை அடிக்காவிட்டால், அவளுடைய ஈரல் அழுகிப் போகும். -போலந்து
  • வயோதிகனுக்கு வாய்த்த இளம் மனைவி அவன் நரகத்திற்கு ஏறிச் செல்லும் குதிரை. -போலந்து
  • மனைவியர் இளைஞருக்கு நாயகிகள், முதியோருக்குத் தாதிகள். - இங்கிலாந்து
  • உண்மையான வீட்டுக்காரி அடிமையாகவும் இருப்பாள், வீட்டு அதிகாரியாகவும் இருப்பாள். -போஸ்னியா
  • ஒழுகும் கூரையும், புகையடையும் கூண்டும், ஓயாமல் சண்டையிடும் மனைவியும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிட முடியும். - வேல்ஸ்
  • ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள். - வேல்ஸ்
  • என் முதல் மனைவி மனைவியா யிருந்தாள்; இரண்டாமவள் என் யசமானியா யிருந்தாள்; மூன்றாமவளை நான் சிலுவை போல் வைத்துக் கும்பிடுகிறேன். -பல்கேரியா
  • அடங்காப்பிடாரி ஒருத்தி இருந்தால் போதும் - சுற்றிலும் பத்து வீடுகளுக்குக் காவல் நாய் தேவையில்லை. -ஸெக்
  • தாடி ஒரு மனிதனுக்குக் கௌரவம்; மனைவி அவன் கருவி. -எஸ்டோனியா
  • குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது, குடிகாரனுக்கும் ஒரு மனைவி கிடைக்கிறாள். -எஸ்டோனியா
  • குதிரையையும் மனைவியையும் இலகானில்லாமல் உபயோகிக்க வேண்டாம். -எஸ்டோனியா
  • உலகத்திற்கெல்லாம் தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னால் போதும். -எஸ்டோனியா
  • கன்னியா யிருக்கும் பொழுது மாடப்புறாவா யிருந்தவள் மனைவியான பின் தண்டாயுதமாகி விட்டாள். -எஸ்டோனியா
  • மனிதனுக்கு மனைவி வாய்த்தே தீருவாள். -எஸ்டோனியா
  • கப்பல், குதிரை, அல்லது மனைவியை மற்றவரை நம்பி ஒப்படைக்காதே. -எஸ்டோனியா
  • மனிதனின் பூட்டு மனைவி.-எஸ்டோனியா
  • மனைவி ஒருமுழம் தள்ளி யிருந்தாலும், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரமுள்ளவன். -எஸ்டோனியா
  • மனிதன் வாழ்க்கையை மனைவியே பாழாக்குகிறாள். -எஸ்டோனியா
  • எல்லாப் பெண்களும் நல்லவர்களா யிருக்கும் பொழுது, கெட்ட மனைவியர் எங்கிருந்து வருகின்றனர்? -எஸ்டோனியா
  • அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம், ஆனால் பணப்பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம். -எஸ்டோனியா
  • ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள் : அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஓட்டைப் பானை, கோபமுள்ள கணவன். -ஃபின்லந்து
  • என் கணவன் என்னை அடிப்பதில்லை, காரணம் அவனுக்கு என்மீது அன்பில்லை. - கிரீஸ்
  • மனைவியர் நல்லவரா யிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந்திருப்பார். -ஜியார்ஜியா
  • அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும். -லத்தீன்
  • மனைவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை. -ருமேனியா
  • பெண்ணைவிட நாய் அறிவுள்ளது, அது தன் யசமானரைப் பார்த்துக் குரைப்பதில்லே. -உருசியா
  • பெண்ணின் யாத்திரை சமையலறையிலிருந்து வாயிற்படிவரை. -உருசியா
  • மனைவிக்குக் கணவனே சட்டம். -உருசியா
  • சில சமயங்களில் அறிவுள்ள மனைவியின் சொல்லையும் கேட்டு நடக்கலாம். -செர்பியா
  • மனைவி இன்றியமையாத ஒரு தீமை. -செர்பியா
  • உன் கணவனை ஒரு நண்பனைப் போல நேசி, ஆனால் பகைவனைப் போல எண்ணி அவனுக்கு அஞ்சி நட. -ஸ்பெயின்
  • ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான். -ஸ்பெயின்
  • பெண்டாட்டி யென்றால், புடவை, துணிமணிகள் என்று பொருள். -ஆப்பிரிகா
  • உன் மனைவியிடம் ஆலோசனை கேள், ஆனால் அவள் சொல்வதற்கு மாறாகச் செய். -ஆப்பிரிகா
  • பெண்ணுக்குப் பணிவது நரகத்திற்குப் பாதை. -ஆப்பிரிகா
  • உத்தமமான மனைவி கணவனுக்கு ஒரு கிரீடம். -ப. ஏற்பாடு
  • புதிதாகக் கலியாணமானவனே தன் மனேவியிடம் செய்திகள் கூறுவான். - இங்கிலாந்து
  • இங்கே புதைத்திருக்கிறது என் மனைவியை; அவள் இங்கேயே யிருக்கட்டும் இப்போது அவளுக்கு ஓய்வு, எனக்கும் ஒய்வு. -டிரைடன்
  • பலர், தாம் சிக்கனமில்லாமல் வாழ்ந்து விட்டு, மனைவியைக் குறை சொல்லுவர். -இங்கிலாந்து
  • மிகவும் சாந்தமான கணவர்களுக்கும் புயல் போல் சீறும் மனேவியர் அமைகின்றனர்.-இங்கிலாந்து
  • அழகிய மனைவியை உடையவனுக்கு இரண்டு கண்களுக்கு மேல் தேவை. -இங்கிலாந்து
  • அறைகள் காலியாயிருந்தால், மனைவியர்க்குத் தலைகிறு கிறுக்கும். -இங்கிலாந்து
  • மனிதன் எல்லா விஷ ஜந்துக்களுக்கும் மருந்து கண்டுபிடித்திருக்கிறான், ஆனால் தீய மனைவிக்கு மட்டும் இன்னும் மருந்து காணவில்லை. -ராபலே
  • கெட்ட மனைவியால் கணவனின் கப்பல் உடையும். - ஜெர்மனி
  • இறந்து போன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும். - ஜெர்மனி
  • கெட்ட மனைவியை உடையவன் செல்வங்களின் நடுவில் வறுமையில் வாடுபவன். - ஜெர்மனி
  • உன் மனைவி குள்ளமாயிருந்தால், நீ குனிய வேண்டும். -யூதர்
  • மனைவி உறங்கும் பொழுது, (சாமான்) கூடையும் உறங்குகின்றது. -யூதர்
  • ஒரு மகள் வேண்டுமென்று தேர்ந்தெடுப்பதுபோல், மனைவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். -இத்தாலி
  • இறந்த மனைவியின் துக்கம் வாயிற் கதவோடு சரி. -இத்தாலி
  • ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. -லத்தீன்
    (ரோமாபுரியில் ஆண்டு வந்த தலைவர்கள் ஸீஸர்கள், ஸீஸரின் மனைவி, எவரும் சந்தேகம் கொள்ள இடமில்லாமல், அப்பழுக்கற்றவளாக இருக்கவேண்டும்.)
  • பிறர் மனைவியரிடம் ஒருபோதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டாம்.-லத்தீன்
  • மனைவி உள்ள கட்டிலில் சண்டையில்லாமல் இராது. -லத்தீன்
  • விவாகமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்திதான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். - ஸ்பெயின்
  • மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான். - ஸ்பெயின்
  • ஊமை மனைவி வாயால் ஏசமாட்டாள், கைகளை நெரித்து ஏசுவாள். -யூதர்
  • மனைவியைப் பற்றிக் குறை சொல்பவன் தன்னையே இழிவு செய்து கொள்கிறான். -ஸ்காட்லந்து
  • மனைவி விட்டுப் பிடித்தால்தான், ஒருவன் முன்னிலைக்கு வரமுடியும். -ஸ்காட்லந்து
  • வெள்ளாட்டின் வெண்ணையும், பெண்டாட்டி சொத்தும் வீட்டுக்கு வேண்டாம். -ஃபின்லந்து

மாமியார்

[தொகு]
  • மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை உன் வீட்டுக்கு வருவாள். -ஜப்பான்
  • கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான். -ஜெர்மனி
  • ஒரே வீட்டிலுள்ள மாமியாரும் மருமகளும் ஒரே பைக்குள் கிடக்கும் இரண்டு பூனைகள் போன்றவர். -யூதர்

முதுமை

[தொகு]
  • வீடு 'போ, போ' என்கிறது. 'காடு வா, வா' என்கிறது. - தமிழ்நாடு
  • வயது முதிர்ந்த மனிதன் எலும்புகள் நிறைந்த மெத்தை போன்றவன். - இங்கிலாந்து
  • வயது ஆக ஆக அறிவும் பெருகும், மடமையும் பெருகும்.- இங்கிலாந்து
  • ஆலோசனைக்கு முதியோர், போருக்கு இளைஞர். - இங்கிலாந்து
  • முதுமையில் யோசிக்கவேண்டும், இளமையில் செயல் புரிய வேண்டும். - இங்கிலாந்து
  • காதலைப்போல, வயதையும் மறைக்க முடியாது. - இங்கிலாந்து
  • மனிதனையும் விலங்கையும் அடக்கி விடுபவை வயதும், விவாகமும். - இங்கிலாந்து
  • வயது கூடக் கூட, கல்லறை நெருங்கி வருகிறது. - இங்கிலாந்து
  • முதுமையில் இளமையை விரும்புவோர் இளமையில் முதியவராயிருக்க வேண்டும். - இங்கிலாந்து
  • முதுமையே ஒரு நோய். - இங்கிலாந்து
  • வயோதிகம் நோய்கள் சேரும் துறைமுகம். - இங்கிலாந்து
  • மரணத்தைவிட அஞ்சத்தக்கது முதுமை. - இங்கிலாந்து
  • முதுமை உள்ளே வந்தால், புத்தி வெளியே போய்விடும். -ஷேக்ஸ்பியர்
  • ஆகக்கூடிய வயதுடையவனும் இறந்துதான் போனான். -அயர்லந்து
  • வழித்துணைக்கு முதுமை ஏற்றதன்று. - டென்மார்க்
  • இதயம் எவ்வளவு முதுமையோ, அவ்வளவே ஒருவனுடைய முதுமை. -ஃபிரான்ஸ்
  • பெண்டிர்க்கு நரகம் முதுமை. -ஃபிரான்ஸ்
  • முதுமையால், முகத்தைக் காட்டிலும், மனத்திலே அதிகச் சுருக்கங்கள் விழும். -மான்டெயின்
  • வயதானவர்களுக்குத் தூரத்துப் பார்வை அதிகம். - ஜெர்மனி
  • இளையோர் அறிய மாட்டார், முதியோர் மறந்துவிடுவர். - ஜெர்மனி
  • வயோதிகனைப் போல வாழ்வில் பற்றுடையவர் இல்லை. - ஸாஃபாகிளிஸ்
  • கிழவர்கள் இரண்டாவது முறையாகக் குழந்தைகள். - கிரீஸ்
  • புறாவின் இளமையினும் கழுகின் முதுமை மேலானது. - கிரீஸ்
  • இளமை ரோஜா மாலை, முதுமை முள் மகுடம். -யூதர்
  • இளமையில் தேவன், முதுமையில் சயித்தான். - எராஸ்மஸ்
  • முதுமையும் மகிழ்ச்சியும் சேர்ந்திருத்தல் அரிது. - ஸெனீகா
  • கிழவனுக்குத் தண்ணீர் இறங்கவில்லையானால், சமாதியைத் தயாரிக்கலாம். -ஸ்பெயின்
  • குழவிப் பருவத்தில் அழுகை அதிகம், வயது காலத்தில் பேச்சு அதிகம். -இந்தியா
  • வயதான பின்பு உன் குழந்தைகளுக்குப் பணிந்து நட. -ஜப்பான்
  • யார் தலைமயிர்தான் நிறம் மாறாமலிருக்கும்? -சீனா
  • பற்கள் விழுந்த பிறகு, நாவு மட்டும் ஆடிக்கொண்டே யிருக்கும். -சீனா
  • ஆகாத காலத்தில் கிழவர்களுக் கெல்லாம் பற்கள் விழாமலிருக்கும். -அரேபியா
  • இளமையின் நினைவு வந்தால் நெட்டுயிர்ப்புத்தான். -அரேபியா
  • கரடிக்கு வயதானால், அது குட்டிகளுக்கு விளையாட்டுக் கருவியாகும். -குர்திஸ்தானம்
  • கிழவிகளை நீ ஏமாற்ற முடிந்தால், சயித்தானையே நீ பிடித்து விடலாம். -ஐ. நாடோடிகள்
  • நாற்பது வயது - இளமையின் முதுமை; ஐம்பது வயது முதுமையின் இளமை. -ஃபிரான்ஸ்
  • சயித்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான். -போலந்து
  • வயது முதிர்ந்தவரைப் பார்த்து, உடம்பு எப்படி?' என்று கேட்க வேண்டாம், 'இப்போது என்ன நோய்?" என்று கேட்கவும். -போலந்து
  • முதியோரை மதித்தல் ஆண்டவனை மதிப்பதாகும். -பல்கேரியா
  • மனிதன் இருமுறை குழந்தை. -எஸ்டோனியா
  • கிழவருக்கு மரணம் கண் முன்னால் நிற்கும், இளைஞருக்குப் பின்புறம் நிற்கும். -எஸ்டோனியா
  • மனிதன் முதுமையடைகிறான், ஆனால் பிணி இளமையடைகின்றது. -எஸ்டோனியா
  • தொட்டிலைத் தாங்குபவள் கிழவி, அவளே குழந்தையின் கைதி. -எஸ்டோனியா
  • கிழட்டுப் பசுவுக்குத் தான் கன்றாயிருந்தது நினை விராது. -எஸ்டோனியா
  • கிழவிகளையும், ஓநாய்களையும் படைத்து, இறைவன். உலகைப் பாழாக்கி விட்டான். -எஸ்டோனியா
  • வயது முதிர்ந்தவன் நெடு நாளைக்குக் குழந்தையாயிருப்பான். - ஐஸ்லந்து
  • தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை. -ரஷ்யா
  • கிழவியும் சயித்தானும் எப்பொழுதும் கூடியே யிருப்பார்கள். -செர்பியா
  • வயதானவருக்கு அவர் கேட்கு முன்னால் கொடு. -ஆப்பிரிகா
  • தாடியுள்ள வாய் பொய் சொல்லாது. -ஆப்பிரிகா
  • முதுமைக்கு அஞ்சுங்கள், அது தனியாக வருவதில்லை. - கிரீஸ்

வாழ்க்கை

[தொகு]
  • இளந் தளிர்களும் உதிர்ந்த சருகுகளும் எங்குமே காணப் பெறுகின்றன. -இந்தியா
  • சில சமயம் மூழ்குதல், சில சமயம் மேலெழுதல்: இது தான் வாழ்க்கை. -இந்தியா
  • வாழ்க்கை காற்றின் நடுவிலுள்ள ஒரு தீபம். -ஜப்பான்
  • வாழ்க்கை என்பது அன்பும் மனைவியும். -ஜப்பான்
  • உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம். -சீனா
  • உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உன் சரித்திரத்தில் ஓர் ஏடாகும். -அரேபியா
  • சுவர்க்கத்திற்குச் செல்வோரின் பயிற்சி நிலையமே வாழ்க்கை. -அரேபியா
  • வாழ்க்கை இரு பகுதிகளுள்ளது: ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு, மற்றது வருங்காலம் என்ற விருப்பம். -அரேபியா
  • நீ காலையைக் கண்டிருக்கிறாய், இன்னும் மாலையைக் காண வில்லை . -யூதர்
  • வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடன்தான மரணம் என்னும் கடன்காரன் அதைப் பெற்றுக் கொள்ள ஒருநாள் வருவான். -யூதர்
  • வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி-மகிழ்ச்சி மறைந்த பின்பும், தலைவலி இருந்துகொண்டேயிருக்கும். -பாரசீகம்
  • மூச்சு வருவதும் போவதும் தொட்டிலின் ஆட்டம்; முடிவான தூக்கம் வருமுன் எச்சரிக்கையாயிரு. -பாரசீகம்
  • வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும்பொழுது கண்ணீர் வரும். - ஃபிரான்ஸ்
  • வாழ்க்கை என்னவென்று நாம் தெரிந்து கொள்ளுமுன், பாதி வாழ்க்கை கழிந்து விடுகின்றது. - ஃபிரான்ஸ்
  • வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது; இரண்டாம் பகுதி முதற் பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது. - ஃபிரான்ஸ்
  • நாம் வருகிறோம், அழுகிறோம், இது தான் வாழ்க்கை ; நாம் அழுகிறோம், போகிறோம், இது தான் மரணம். - ஃபிரான்ஸ்
  • நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்களே மனிதனின் நாட்கள். - ஃபிரான்ஸ்
  • மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான் . -ஜெர்மனி
  • பன்னிரண்டு வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிறோம்; பதினெட்டில் வாலிபப் பருவத்தையும், இருபதில் முதற் காதலையும், முப்பதில் மனிதரிடம் கொண்ட நம்பிக்கையையும், அறுபதிலிருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிறோம். -ஜெர்மனி
  • ஒவ்வொரு மணியும் (நேரமும்) நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது, கடைசி மணி அடித்தவுடன் ஆவி பிரிகின்றது. -ஜெர்மனி
  • வாழ்க்கை நமக்கே அளிக்கபெற்றதன்று, இரவலாக வந்தது. -ஜெர்மனி
  • இறந்து போனவனின் 'உயில்' அவன் வாழ்க்கையின் கண்ணாடி. -போலந்து
    ['உயில்' என்பது மரண சாசனம்.]
  • இருபது வருடம் வளர்ச்சி, இருபது வருடம் மலர்ச்சி, இருபது வருடம் ஒரே நிலை, இருபது வருடம் வாடுதல். -பெல்ஜியம்
  • நாம் அழுதுகொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்றமடைந்து இறக்கிறோம். - இங்கிலாந்து
  • நான் பிறக்கும்பொழுதே அழுதேன் ; ஏன் அழுதேன் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். - இங்கிலாந்து
  • வாழ்வும் துயரமும் ஒன்றாகத் தோன்றியவை. - இங்கிலாந்து
  • வாழ்க்கை வாழ்வதிவதில்லை, நம் விருப்பத்திலிருக்கிறது. - இங்கிலாந்து
  • இறக்கும் வரை நாம் வாழத்தான் செய்வோம். - இங்கிலாந்து
  • பிறப்பில் அழுகிறோம், இறப்பில் ஏன் என்பதைக் காண்கிறோம். -பல்கேரியா
  • வாழ்க்கை வேண்டுமானால், நாட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். -பல்கேரியா
  • பிறக்கும் பொழுது அழுதுகொண்டு வந்தோம், போகும் பொழுதாவது சிரித்துக்கொண்டு செல்லும்படி வாழ வேண்டும். -எஸ்டோனியா
  • வாழ்க்கை ஒரு போராட்டம். -எஸ்டோனியா
  • வாழ்க்கை என்பது அடித்தல், அல்லது அடிபடுதல். -உருசியா
  • மரணத்திற்கு அஞ்சவேண்டாம், வாழ்க்கைக்கு அஞ்சு. -உருசியா
  • மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது. - ருமேனியா
  • மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இறக்கும் பொழுது விழிப்படைகிறார்கள். - குர்ஆன்
  • பூமியில் மனிதனின் வாழ்க்கை ஒரு போராட்டம். -ப.ஏற்பாடு
  • நீண்ட வாழ்வு நெடுந் துயரங்களுள்ளது. -இங்கிலாந்து
  • எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு நேர்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம். -இங்கிலாந்து
  • வாழ்க்கை ஒரு தறி, அதில் மாயை (என்ற துணி) நெய்யப்படுகின்றது. -இங்கிலாந்து
  • சிந்தனை தான் வாழ்க்கை. -காலரிட்ஜ்
  • வாழ்க்கை, இருமுறை சொன்ன கதையைப்போல், சலிப்பாயுள்ளது. -ஷேக்ஸ்பியர்
  • வாழ்க்கை (தறியிலுள்ள) ஓர் ஓடம். -ஷேக்ஸ்பியர்
  • நல்லதும் கெட்டதுமான நூல்களைக் கலந்து நெய்தது தான் வாழ்க்கை. -ஷேக்ஸ்பியர்
  • எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை........ -வோர்ட்ஸ்வொர்த்
  • நாம் வாழ்கிறோம், மடிகிறோம்: இரண்டில் எது நல்லது என்று எனக்குத் தெரிந்ததைவிட உங்களுக்கும் தெரியாது. -பைரன்
  • மனிதன், காற்றை (மட்டும்) உட்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது. -ஃபிரான்ஸ்
  • வாழ்க்கை ஒரு கோட்டை, அதைப்பற்றி நம் அனைவருக்கும் ஒன்றும் தெரியாது. -ஃபிரான்ஸ்
  • சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், பழக்கம் அதை இன்பமாக்கும். -ஃபிரான்ஸ்
  • வாழ்க்கையில் திருப்தியை விட அதிருப்தியே அதிகம். -ஃபிரான்ஸ்
  • வாழ்க்கை அபாயகரமான கடல் யாத்திரை. -ஃபிரான்ஸ்
  • வாழ்க்கை ஒரு மேடை, உங்கள் பாகத்தை , நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். - கிரீஸ்
  • சந்தோஷமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை சுருக்கம், துக்கமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை நீண்டது. - கிரீஸ்
  • இன்று வாழுங்கள், பழமையை மறவுங்கள். - கிரீஸ்
  • வாழ்க்கை தீமையில்லை, தீமையாக வாழ்வதிலேயே தீமை உள்ளது. - கிரீஸ்
  • நல்லதோ, கெட்டதோ நாம் அனைவரும் வாழத்தான் வேண்டும். -இத்தாலி
  • நன்றாக வாழ்வதற்குச் சொற்ப வாழ்வே போதுமானது. -லத்தீன்
  • நீ வாழ்ந்திருக்கும் வரை, எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டே யிரு. -லத்தீன்
  • வாழ்க்கை பயன்படுத்தப் பெறுவதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. -லத்தீன்
  • நாளையே மரிக்க வேண்டியவனைப் போல வாழ்ந்து கொண்டிரு. -லத்தீன்
  • நாம் வாழத் தொடங்கிக்கொண்டே யிருக்கிறோம், ஆனால் வாழ்வதில்லை. -லத்தீன்
  • நாம் வாழ்க்கையைச் சிறு துண்டுகளாக்கி வீணாக்குகிறோம். -லத்தீன்
  • செத்துக் கிடக்கும் சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல். -உருசியா
  • மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான். - ஸ்பெயின்
  • தலைசிறந்த மரணத்தைவிட, மட்டமான வாழ்க்கையும் மேலானது. -யூதர்

விருந்து

[தொகு]
  • வீட்டிலிருக்கும் விருந்தாளி கடவுளுக்கு நிகரானவர். -செக்
  • வருகிற விருந்தினரை வரவேற்று, போகிறவரை விரைவில் வழியனுப்பு. -போப்
  • விருந்தும் மருந்தும் மூன்று நாள். - தமிழ்நாடு
  • மருந்தே யாயினும் விருந்தோடு உண். - தமிழ்நாடு
  • முதல் நாள் விருந்தாளி, மறுநாள் தொந்தரவு. - இந்தியா
  • அம்மான் வீடானாலும், ஏழு நாட்களுக்குத்தான் வசதியாயிருக்கும். - இந்தியா
  • விருந்தென்றால், வீடு நிறையக் கூட்டம்; உபவாச மென்றால், உலகமே திரும்பிப் பார்ப்பதில்லை. -சீனா
  • விருந்தினன் நாத்திகனாயினும், அவனைக் கௌரவிக்க வேண்டும். -அரேபியா
  • அழைத்து வந்தவனை விட, அழையாமல் வந்தவன் மேல். - கால்மிக்
  • விருந்துச் சாப்பாடு கடனாக அளிக்கப்படுவது. - ஆப்கானிஸ்தானம்
    [நாமும் திரும்ப விருந்தளிக்க வேண்டும்.]
  • நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளி துருக்கியனை விட மோசமானவன். -பல்கேரியா
  • வீட்டு அம்மாளின் விருந்தாளி பாக்கியசாலி, வீட்டுக்காரனின் விருந்தாளி பாக்கியமற்றவன் -ஃபின்லந்து
  • விருந்தாளியின் பார்வை கூர்மையானது. -ஐஸ்லந்து
  • முன் தகவலோடு வரவும், அன்புடன் வழியனுப்பும்படி - போய்விடவும்.- இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம். -லிதுவேனியா
  • விருந்தாளி அதிகாலையில் எழுந்திருந்தால், இரவில் அவன் நம்முடன் தங்க விரும்புகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். -ரஷ்யா
  • விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு. - ஸ்பெயின்
  • விருந்தினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை மறந்து விடக்கூடாது. -சுவீடன்
  • புது விருந்தை வீட்டினுள் அழையாமலிருத்தல் கேவலம், வந்த விருந்தை வெளியேற்றுவது அதைவிட மோசம். -லத்தீன்
  • அதிக உபசாரம் அபசாரத்திற்கு அறிகுறி. -சீனா
  • கடன் வாங்கி விருந்துகள் நடத்தி ஆண்டியாக வேண்டாம். -அபாகிரைஃபா
  • மற்றொருவர் மாளிகையில் விருந்து நன்றாகத்தான் இருக்கும். -ஹாலந்து
  • விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிறான். -ஃபிரான்ஸ்
  • விருந்து நடத்திக் கொள்ளக் காலம் இருக்கிறது. -ஃபிரான்ஸ்
  • மூடர்கள் விருந்து நடத்துகிறார்கள், அறிவாளிகள் அதை அநுபவிக்கிறார்கள். -இத்தாலி
  • இன்று விருந்து, நாளை உபவாசம். - லத்தீன்
  • பெரிய விருந்தும் சிறிது நேரம்தான். -யூதர்
  • விருந்தினால் வைத்தியர்களுக்கு வேட்டை. - இங்கிலாந்து
  • விருந்து நடத்தினால் நண்பர்கள் கிடைத்து விட மாட்டார்கள். - இங்கிலாந்து

வீடு

[தொகு]
  • ஒவ்வொரு வீடும் ஓர் உலகம். -ஸ்பெயின்
  • சின்ன வீடானாலும், சொந்த வீடு வேண்டும். - லிதுவேனியா
  • நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை. - லிதுவேனியா
  • உயரே ஏறிப் பார் : எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகவே தோன்றுகின்றன. - இந்தியா
  • யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு நின்று கொண்டே தின்னும். - தமிழ்நாடு
  • தொலைவிலே தங்க மழை பெய்தாலும், வீட்டைச் சுற்றி ஆலங்கட்டியே மழையாகப் பெய்தாலும், வீடுதான் சிறந்தது. -மலாய்
  • ஏழுமுறை இருக்கையை மாற்றுவோன் ஆண்டியாவான். -மலாய்
  • கட்டடம் கட்டுதல் இனிமையாக எளிமையடையும் வழி. - இங்கிலாந்து
  • வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணிலிருந்து சுவர்கள் முளைத்திருப்பதாக எண்ணுவான். -எஸ்டோனியா
  • வீடு இல்லாளின் உலகம், உலகம் மனிதனின் வீடு. -எஸ்டோனியா
  • நிலைப் படியிலே அமர்ந்திருப்பவன் எல்லோருக்கும் தடையாயிருப்பான். - நார்வே
  • வீட்டுக்குக் கேடு வருவது பின்கதவினால்தான். -ரஷ்யா
  • நம் வீடு இறைவனுடையது. -செர்பியா
  • வீட்டைவிட்டு ஓடுபவன் வீட்டுக்கே திரும்பி வருவான். -ஸ்பெயின்
  • ஒரு வீட்டை வாங்குமுன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். -யூதர்
  • ஒவ்வொரு விலங்கும் தன் குகையில் உறுமும். - ஆப்பிரிகா
  • வீட்டைப் பெருக்குவோன் துடைப்பத்தின் மீது அமரக் கூடாது. - ஆப்பிரிகா
  • தன் வீட்டுக்குத் திரும்பிவரும் மனிதன் தீய சகுனங்களைப் பொருட்படுத்த மாட்டான். - ஆப்பிரிகா
  • பாழடைந்த வீட்டிலெல்லாம் ஒரு பேய் இருக்கும். - எகிப்து
  • வீடு அன்பு நிறைந்த இடம். -ஆப்பிரிகா
  • பாதி வீட்டில் குடியிருந்தால் பாதி நரகம். -ஜெர்மனி
  • பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம். -ஜெர்மனி
  • ஒரே கழியைக் கொண்டு எப்படி வீடு கட்ட முடியும்? -சீனா
  • கட்டிய வீடு கிடைக்கும், ஆனால் மனைவியை நாம்தான் கட்டிக் கொள்ள வேண்டும். -இங்கிலாந்து
  • மனிதனுக்குத் தன் வீடுதான் மாளிகை. -இங்கிலாந்து
  • முறையில்லாத வாடகைக்காரனைவிட, காலி வீடே மேலானது. -இங்கிலாந்து
  • சத்திரத்தின் பக்கத்திலும், முக்குமுனையிலும் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். -இங்கிலாந்து
  • வீட்டைப் பார்க்கிலும் கதவு பெரிதா யிருக்கக் கூடாது. -இங்கிலாந்து
  • வீட்டைப் பார்த்தே உடையவனை அறிந்து கொள்ளலாம். -இங்கிலாந்து
  • வாழ்க்கையின் இன்பத்திற்குப் பலவகை இன்பங்கள் தேவை; ஆதலால் அடிக்கடி உன் வீட்டை மாற்றிக் கொள்ளவும். -அரேபியா
  • வெளியே விளக்கு வேண்டும், வீட்டிலே அனல் வேண்டும். -ஆர்மீனியா
    (விளக்கு-வழி காண்பதற்காக; அனல்-குளிர் காய்வதற்காக.)
  • வெறும் கையோடு வீடு திரும்பினால், உன்னை வீட்டுக்கு உடையவனாக. எண்ணிக் கொள்ள வேண்டாம். -பல்கேரியா
    [வீட்டில் அனைவரும் அலட்சியமாக எண்ணுவர்.]
  • வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை. -ஃபிரான்ஸ்
  • இதயம் எங்கே தங்கியுள்ளதோ அதுவே வீடு. - லத்தீன்
  • என் வீட்டில் நானே அரசன். -ஸ்பெயின்
  • தன் வீட்டில் அமைதி கிடைக்காதவன் பூலோக நரகில் இருக்கிறான். - துருக்கி
"https://ta.wikiquote.org/w/index.php?title=உலகப்_பழமொழிகள்&oldid=38040" இலிருந்து மீள்விக்கப்பட்டது