சு. தியோடர் பாஸ்கரன்
Appearance
தியோடர் பாஸ்கரன் சுற்றுச்சூழல் சார்ந்தும், திரைப்பட வரலாறு குறித்தும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் ஆவார்.
சுற்றுச்சூழல் பற்றிய அவர் கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்படும் இந்த மேற்கோள்கள் துவக்க நிலை சூழல் ஆர்வலர்களுக்கு உதவியாக இருக்கும் .
மேற்கோள்கள்
[தொகு]- தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை...தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை. [1]
- முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களைக்கூட மறந்துவிட்டோம். அரணைக்கும் ஓணானுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள். பாட்டுப் பாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் நம் குழந்தைகள். [1]
- ஒரு புதிய உயிரினம் தோன்றுவது தீவுகளில்தான். அதிலும், தீவின் புள்ளினங்களில் தான் இந்தத் தகவமைப்பு அம்சங்கள் நன்கு வெளிப்படுகின்றன. [2]
- புது வீட்டினுள் ஒரு பல்லியின் குரலைக் கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பல்லியின் குரல் இல்லாமல் ஒரு வீடா? [3]
- காட்டுயிர் பேணலுக்கு டூரிசம் பெரிய இடராக உருவாகியிருக்கின்றது. [4]
- தமிழ் நாட்டிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் தமிழில் பெயர்கள் இருந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த மூலப்பெயர்கள் மறக்கப்பட்டு, ஆங்கிலேயர்கள் நம் காட்டுயிர்களுக்கு வைத்த ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்து புதிய பொருத்தமில்லாத பெயர்களை நாம் உயிரினங்களுக்குச் சூட்டிவிட்டோம். [5]
- நாய், பூனை, ஆடு என்று எதாவது ஒரு செல்லப்பிராணியை வீட்டில் வளர்ப்பது, நமக்கும் விலங்கு உலகிற்கும் ஒரு பாலத்தை அமைத்து போல ஆகும். [6]
- ஆற்றில் மணலைக் கொள்ளை அடிப்பதற்கும், தாய்ப்பாலைத் திருடி விற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. [1]
- தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், மனிதன் உணவைக் கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. [1]
- மரம் என்பது மனிதனைப் போல பூமிக்குப் பாரமான உயிர் அல்ல. தன் ஒவ்வொரு உறுப்பாலும் இந்த பூமியை உயிர்ப்போடு வைத்திருக்கும் கருப்பொருள்.[1]
- இயற்கை வளம் என்பது வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது தான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது. [1]
- பெரிய ஏரிகளிலும் குளங்களிலும் பறவைகள் தென்படாமல் போனால், அந்த நீர் அருந்துவதற்குத் தகுதியற்றது என்று பொருள். [1]
- இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும். [1]
- அடுத்த தலைமுறைக்கு உயிரினங்களை நேசிக்கக் கற்றுத்தராவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் உயிரினங்களை வெறுக்காமல் இருக்கக் கற்றுக் கொடுத்தால் போதும். [1]
- மதிய சத்துணவுக் கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, தமிழகப் பல்லிகளுக்கு விஷம் இருந்தது இல்லை. பல்லிகளுக்கு விஷமில்லை என்பது அறிவியல் பூர்வமான உண்மை. [1]
- போதைப்பொருள்கள் சந்தைக்கு அடுத்தபடியாக பெருமளவில் பணம் கைமாறப்படும் இடம் காட்டுயிர் சந்தைதான் [7]
- புலி பல்லூழிக் காலப் பரிணாமத்தின் உச்சம்,நமது பாரம்பரிய செல்வம். கர்நாடக இசை, தாஜ்மகால் போல.
- புலி மற்றும் யானை பற்றிய விவரங்களை இந்த இரு உயிரினங்களுமே இல்லாத ஒரு நாட்டின் மொழி மூலமாகவே நம் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை வேதனை அளிக்கக் கூடியது.
- இன்று உணவுக்காக நாம் சாகுபடி செய்யும் எல்லாத் தாவரங்களும், நம்முடன் வாழும் செல்லப்பிராணிகள், கால்நடைகள் எல்லாமே காட்டுயிரிலிருந்து வந்தவைதான். [8]
- சோலைக்காடுகள் இயற்கை நமக்களித்த ஓர் உண்ணதக் காப்பீட்டுத் திட்டம். இதை நாம் காலாவதியாக விட்டுவிட்டோம். [8]
- நாடு என்பது மக்களால் மட்டுமே ஆனது அல்ல. அதில் ஓடும் ஆறுகள், மலைகள், காடுகள், அங்கு வளரும் செடிகொடிகள், மரங்கள், காட்டுயிர்கள் இவையாவுமே ஒரு நாட்டின் முழுப் பரிமாணத்தை உண்டாக்குகின்றன. [9]
- இந்தியச் சுற்றுச்சூழலின் சிதைவின் முக்கியப் பொறுப்பு வசதி படைத்தவர்களுடையதுதான். [10]
- ஒரு பறவையின் தமிழ்ப்பெயர் அதன் இயல்பைப் பற்றி நமக்குத் தகவல் தரக்கூடும், ஒரு பறவையின் நடத்தையை விவரிக்கக் கூடும்.
- உயிரினங்களுக்கான பாரம்பரியத் தமிழ்ப்பெயர்கள் பொருள் பொதிந்த காரணப்பெயர்கள். [11]
- ஒரு இடத்தின் இயற்கை எழிலைக் குலைக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு சாலை போட்டுவிட்டால் போதும். [12]
- இயற்கை ரீதியில், ஒவ்வொரு செயலுக்கும் நாம் ஒரு விலை கொடுத்திருக்க வேண்டும். [12]
- மனிதர்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடிய போது தீமை ஏதும் ஏற்படவில்லை. அவர்களும் ஒரு இரைக் கொல்லியாக, காட்டுப்பூனை, புலி போன்று இயங்கினார்கள். [13]
- வேட்டை இலக்கியம் சுவரசியமானதாக இருக்கலாம். அவை ஜேம்ஸ்பாண்ட் நாவல்களைப் போலத்தான் மதிப்பிடப்பட வேண்டும். [13]
- எந்தச் செடியில், எந்த நோய்க்கு மருந்து ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அதனால்தான் தாவரப் பல்லுயிரியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
சான்றுகள்
[தொகு]<references>
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 “யாருடைய பூமி?" எனும் கட்டுரையில் இருந்து.
- ↑ "தீவுகளும் உயிரினங்களும்" என்ற கட்டுரையில் இருந்து.
- ↑ "வீட்டைச் சுற்றியும் காட்டுயிர்" எனும் கட்டுரையில் இருந்து.
- ↑ "வேங்கையும் மனிதர்களும்" எனும் கட்டுரையில் இருந்து.
- ↑ "தமிழ் மொழியும் சூழலியல் இயக்கமும்” எனும் கட்டுரையில் இருந்து.
- ↑ “பாரியும் நானும்” எனும் கட்டுரையில் இருந்து
- ↑ பிழைக்குமா காணுறை வேங்கை
- ↑ 8.0 8.1 'மழைக்காட்டில் ஒரு மாலை நேரம்' கட்டுரையிலிருந்து
- ↑ 'கருங்காற் குறிஞ்சி' எனும் கட்டுரையிலிருந்து
- ↑ 'நீர்ப்பூங்காக்களும் வறண்ட கிணறுகளும்' எனும் கட்டுரையிலிருந்து
- ↑ 'அறியப்படாத மரபுச் செல்வம்' கட்டுரையிலிருந்து
- ↑ 12.0 12.1 'சமூக நீதியும் சுற்றுச்சூழல் சர்ச்சையும்' எனும் கட்டுரையிலிருந்து
- ↑ 13.0 13.1 வேட்டை இலக்கியம் - ஒரு மறு வாசிப்பு