ச. வையாபுரிப் பிள்ளை
Appearance
ச. வையாபுரிப்பிள்ளை (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மைத் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், காலமொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை, கவிதைகள் புனையும் திறம்படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர்.
மேற்கோள்கள்
[தொகு]- இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது. அது மனிதனது ஆன்மாவையும், அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும், சொல்-வடிவிலே காட்டும் குறிப்பாகும். ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே. அதன் சிறப்பு-இயல்புகள் கலையழகும், சிறப்பாற்றலும், நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும். அதன் அளவு-கருவிகள் அதனுடைய அகிலத்துவமும், அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகும். அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி, மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும். அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும்.
சான்றுகள்
[தொகு]- எஸ். வையாபுரிப் பிள்ளை, "இலக்கியச் சிந்தனைகள்" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கியமாவது யாது?, நவபாரதி பிரசுராலயம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை.