அரவிந்தர்
Jump to navigation
Jump to search

ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo, அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்து 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர்.
அரவிந்தரின் பொன்மொழிகள்[1][தொகு]
- பகுத்தறிவு இறக்கும்போதுதான் ஞானம் பிறக்கிறது என்பதை நான் தாமதித்துத்தான் புரிந்துகொண்டேன். அம்முக்திக்கு முன் நான் அறிவினை மட்டுமே பெற்று இருந்தேன்.
- அறிவு பொய்த் தோற்றங்களை ஆய்ந்து, அனுமானித்து ஏற்கிறது. ஞானமோ திரைக்குப் பின் நோக்கி, காட்சியைப் பெறுகிறது.
- பகுத்தறிவு பிரிக்கின்றது. விவரங்களை வரையறுத்து அவற்றிடையே வேற்றுமையை நிறுவுகின்றது. ஞானமோ ஒன்றுபடுத்துகின்றது. வேற்றுமைகளை ஒரே இசைவினுள் இணைக்கின்றது.
- எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய்யப்படும் ஓர் அம்பு. தன் இலக்கின் புள்ளியை மட்டுமே அதனால் தொட இயலும்; முழு இலக்கையும் அதனால் அடைய இயலாது. ஆனால் எய்தவனோ தான் வெற்றி பெற்று விட்டதாய்க் கருதி, இன்னுமென்ன வேண்டும் என்ற பெரும் திருப்தியுடன் இருக்கிறான்.
- துன்பத்தையோ, தோல்வியையோ கண்டிராதவனை நம்பாதே. அவன் விதியைப் பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ்ப் போரிடாதே.
- சில சமயங்களில் செயலாற்றுவது இயலாததாக, செயலாற்றாமல் இருப்பது விவேகமாக இருக்கலாம்; அப்போது ஆன்மாவின் தவத்தில் ஆழ்ந்து விடு. தெய்வத்தின் சொல்லை அலது வெளிப்பாட்டை எதிர் நோக்கியிரு.
- இடைக்காலத் துறவிகள் பெண்களை வெறுத்தனர்; துறவிகளைச் சோதிப்பதற்கே கடவுள் பெண்களைப் படைத்தார் என நினைத்தனர்; கடவுளையும், பெண்களையும் பற்றிய கருத்து இதை விடக் கண்ணியமாக இருந்திருக்கலாம்.
- நீ மலையுச்சியில் தனித்து அசைவற்று மௌனமாக அமர்ந்திருக்கும் அதே சமயத்தில், நீ வழி நடத்தும் புரட்சிகளை உன்னால் காண முடிந்தால், நீ தோற்றங்களிலிருந்து விடுபட்டவனாவாய்; தெய்வீகப் பார்வை பெற்றவனாவாய்.
- இறைவன் மும்முறை சங்கரரைப் பார்த்து நகைத்தான்; முதலில் தன தாயின் சடலத்தை எரிக்க வீடு திரும்பிய போது; இரண்டாவதாக ஈசா உபநிடதத்திற்கு உரை எழுதியபோது; மூன்றாம் முறை செயலின்மையைக் கற்பிக்க பாரதம் முழுமையையும் புயலாய் வலம் வந்த போது.
- இறைவன் இப்படியிருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும்; இல்லையெனில் அவன் இறைவன் அல்லன் என்று எவரோ விதி விதித்தார். ஆனால் எனக்கோ, 'இறைவன் எத்தகையவன் என்பதைத்தான் என்னால் அறிய முடியும். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வாறு நான் அவனுக்குக் கூற முடியும்?' என்றுதான் தோன்றியது. இறைவனை நாம் மதிப்பிடக் கூடிய அளவைதான் ஏது? இம் மதிப்பீடுகள் எல்லாம் நம் அகங்காரத்தின் மடமைகளே.
- எல்லா அறிவையும் தான் வெற்றி கொண்டு விட்டதைப் போல் விஞ்ஞானம் பேசுகிறது; நடந்து கொள்கின்றது. தனித்துச் செல்லும் விவேகமோ, அளவற்ற ஞானக் கடல்களின் விளிம்புகளில் எதிரொலிக்கும் தன் காலடியோசையைக் கேட்டவாறே நடையிடுகின்றாள்.
- அரசுகள், சமூகங்கள், அரசர்கள், காவலர், நீதிபதிகள், நிறுவனங்கள், கோயில்கள், சட்டங்கள், மரபுகள், ராணுவப் படைகள், இவையெல்லாம் சில நூற்றாண்டுக் காலங்களுக்கு நம் மீது சுமத்தப்படும் தற்காலிகத் தேவைகளே. இறைவன் நம்மிடமிருந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டிருப்பதே இத்தேவைக்குக் காரணமாகும். அம்முகம் தன் எழிலிலும், மெய்ம்மையிலும் மீண்டும் நமக்குத் தெரியும் போது, ஒளியில் இவையெல்லாம் மறைந்து போகும்.
- ஞானம் நம்முள் அடியெடுத்து வைக்கும்போது அவள் அளிக்கும் முதற்பாடம் இதுவே- “ அறிவென்பது ஏதுமில்லை; வரம்பற்ற இறைவனைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் மட்டுமே உண்டு”.
- இந்த நாட்டை வயல்களும், ஆறுகளும், காடுகளும் அடங்கிய நிலப்பரப்பாக நினைக்காமல், இதனை அன்னை என நினைத்து வழிபடுகிறேன். அன்னையின் மார்பிலே ஒரு அரக்கன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளுடைய குருதியை உறிஞ்சுவானாகில் மகன் கவலை யாதுமின்றி, தனது மனைவி மக்களுடன் உல்லாசமாகக் காலம் கழிப்பான? தன் அன்னையைக் காப்பாற்ற உடனே வழி தேடுவான் அல்லவா! இழிநிலே அடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாற்றும் வலிமை எனக்குண்டு. இதனை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு உடல் வலிமை இல்லை. ஆனால் நான் கத்தியையோ, துப் பாக்கியையோ, ஏந்திப் போர் புரியப் போவதில்லே. அறிவின் வலிமையினாலேயே போர் புரியப்போகிறேன்.[2]
வெளியிணைப்புக்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஸ்ரீ அரவிந்தர் அமுத மொழிகள், தி இந்து ஆனந்த ஜோதி, இணைப்பு, 12.8.2016
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.