ஆற்காடு ராமசாமி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

திவான் பகதூர் டாக்டர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் (1887–1976) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் இராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிருவாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர்.

இவரது கருத்துகள்[தொகு]

  • நாம் கற்றுக்கொள்ளும் கல்வியை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று நாம் நமது அனுபவத்தினால் கற்றுக்கொள்வது. மற்றாென்று, நம்மையறிந்தே கற்றுக்கொள்வது. ஆகையால் நம்மையறியாமலும், அறிந்தும் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் பலவிருக்கின்றன. பல்கலைக் கழகங்களில், பெரிய பெரிய பட்டங்கள் பெற்று விடுவதினால் பிரயோஜனமில்லை. அத்தகைய பட்டங்களுக்குப் பின்னும் பல விஷயங்கள் கற்க வேண்டியிருக்கின்றன. உலக விவகாரங்களில் போதிய அறிவு ஏற்படவும், பல விஷயங்களைக் குறித்துப் பேசத் தகுதியுடையவர்களாகவும் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.— (4-5-1928) (பிராட்வே ஒய். எம். சி. ஏ. கூட்டத்தில்)[1]
  • அக்காலத்தில் மத சந்நியாசிகளின் உறைவிடமாகிய மடங்களே கல்வி ஸ்தாபனங்களாக இருந்து வந்தன. அங்கு மதக் கல்வியுடன் மக்களுக்கு வேண்டிய இதர விஷயங்களும் கற்பிக்கப்பட்டன. நம் நாட்டில் அத்தகைய மடங்களை மீண்டும் ஏற்படுத்துவது முடியாத காரியம். ஆகையால் பாமர மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டுமானால் வாசக சாலைகள் இன்றியமையாததாகும். வாசக சாலைகளை ஏற்படுத்தச் செய்யவேண்டும் என்னும் இயக்கம் நம்நாட்டில் சமீபத்தில்தான் தோன்றியது. இங்கிலாந்தில் 14-வது நூற்றாண்டின் துவக்கத்தில் வாசகசாலைகள் தோன்றின. ஆந்திர தேசத்தில் ராஜமகேந்திரம், பெஜவாடா, காக்கினாடா முதலிய விடங்களில் வாசக சாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. நான் ஆந்திர தேசத்தில் சென்றவிடங்களில் எல்லாம் வாசகசாலைகளைக் கண்டேன். அங்கு அவ்வியக்கத்தைப் பரப்பியதற்கு விரேசலிங்கம் பந்துலுவே காரணம். (4-5-1928) (ஒய். எம். சி. ஏ. பட்டிமன்றத்தில்)[1]
  • சாதரணமாக ஒருவன் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு புத்தகத்தைப் படிப்பு முடிந்து 10-ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாசிப்பானானால், அதன் உட்பொருள்களும்,இன்பமும் அப்பொழுதுதான் அவனுக்குத் தெரியவரும். அதன் பிரயோஜனத்தை அவன் பின்புதான் அடையக்கூடும். அதனால்தால் நாம் பள்ளிக்கூடத்தை விட்ட பின்பும் கல்வி கற்க வேண்டியது அவசியமெனக் கூறுகிறேன்.— (4-5-1928, ஒய். எம். சி. ஏ. பட்டிமன்றத்தில்)[2]
  • மாணவர்கள் ஒவ்வொருவரும் சுயேச்சையாகச் சிந்திக்க வேண்டும். கூட்டங்களில் வெளியிடப்படும் அபிப்பிராயங்களை உள்ளபடி திரும்பிக் கூறிவிடுவது உபயோகப்படாது. உங்களுடைய அபிப்பிராயம் எப்படியிருத்தாலும் பாதகமில்லை. அதைப்பற்றி உங்களுடைய கூட்டங்களில் விவாதிக்க வேண்டும். — (16 - 1 - 1928)[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. 2.0 2.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆற்காடு_ராமசாமி&oldid=18565" இருந்து மீள்விக்கப்பட்டது