இராணி மங்கம்மாள் (புதினம்)
Appearance
இராணி மங்கம்மாள் என்பது நா. பார்த்தசாரதி எழுதிய தமிழ் வரலாற்று புதினமாகும். இது கதிர் வார இதழில் முப்பத்தோறு வாரங்கள் தொடராக வெளிவந்து பிறகு 1981 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது.
நூலில் இருந்து மேற்கோள்கள்
[தொகு]- அறிவு ஒருவனை வெறும் விவரந் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது. அனுபவம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன். அனுபவம் தான் திறமையைக் கற்றுக் கொடுக்கிறது. அனுபவம் தான் மனத்தையும், வாக்கையும் புத்தியையும் பளிச்சென்று இலட்சணமாகத் தெரியும்படி மெருகிடுகிறது
- (அத்தியாயாம் ஒன்று, இராணி மங்கம்மாள் சிறுமியாக இருந்தபோது அவரது தந்தை கூறுவது)
- சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும், கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகாதபடி தாறுமாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில் அலைகின்ற தண்ணீர் ஒரு நாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பது தான் நியதி.
- (அத்தியாயாம் ஒன்று, இராணி மங்கம்மாள் சிறுமியாக இருந்தபோது அவரது தந்தை கூறுவது)
- ஒவ்வொரு கஷ்டமும் நம்மை வளர்ப்பதற்குத்தான் வரும்! சுகங்கள் நம்மை ஒரேயடியாக அயர்ந்து தூங்கச் செய்துவிடாதபடி அடிக்கடி நம்மை விழிப்பூட்டுவதற்கு வருபவை எவையோ அவற்றிற்குத்தான் ஜனங்களின் பாமர மொழியில் கஷ்டங்கள் என்று பெயர்
- (அத்தியாயாம் ஒன்று, இராணி மங்கம்மாள் தன் மகனிடம் கூறுவது.)
- அரசியலில் பொறுமை என்பதன் அர்த்தமே வேறு. நமது எதிரிக்கு நாம் அடக்கமாக இருப்பதுபோல் தோன்றச் செய்துவிட்டு அவனை எதிர்க்க இரகசியமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தான் பொறுமை என்று பெயர்.
- (அத்தியாயாம் இரண்டு, இராணி மங்கம்மாள் தன் மகனிடம் கூறுவது.)
- உத்தமமான வீரர்கள் நியாயமான முறையில் தன் எதிரியை மதித்து அவனை வெல்லவேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள். மத்திமமான வீரர்கள் எதிரியை அழித்து அவன் உடைமைகள் பொருள்கள் பெண்டு பிள்ளைகளைச் சூறையாட வேண்டும் என்று நினைப்பார்கள். மிகவும் மூன்றாந்தரமானவர்கள் எதிரியை வெல்வதோடு அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அவமானப்படுத்த வேண்டும் என்றும் நினைப்பார்கள். ** (அத்தியாயாம் இரண்டு, இராணி மங்கம்மாள் தன் மகனிடம் கூறுவது.)
- அரசகுமாரர்கள் காதல் வேட்கை மிகுதியால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அளிக்கும் மோதிரங்கள் முத்து மாலைகள் எல்லாம் வரலாற்றில் துயரங்களின் சாட்சியாக நிரூபணமாகி இருக்கின்றனவே ஒழியச் சத்தியங்களின் சாட்சியமாகவோ சாத்தியங்களின் சாட்சியமாகவோ நிரூபணமானதாக ஒரு சின்ன உதாரணம் கூட இல்லையே.
- (அத்தியாயாம் இரண்டு, இளவரசன் ரங்ககிருஷ்ணனினிடம் அவன் காதலி முததம்மாள் கூறுவது)
- எதிரிகளை அழிப்பதில் பல ராஜதந்திர முறைகள் உண்டு அப்பா அதில் ஒன்று அவர்களை அதிகத் தவறுகள் செய்ய அநுமதிப்பது. கோழை பின்வாங்கித் தயங்குவதற்கும், வீரன் பின்வாங்கி நிதானிப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு. கோழை பயத்தினால் பின்வாங்குவான். வீரன் எதிரியை முன்னைவிட அதிக வேகமாகப் பாய்ந்து தாக்குவதற்குப் பின்வாங்குவான்.
- (அத்தியாயாம் ஐந்து, ரங்ககிருஷ்ணனினிடம் அமைச்சர் அச்சையா கூறுவது)
- கெட்டிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாத எதிரிகளைச் சிறையிலடைக்க மாட்டார்கள்; முகஸ்துதி செய்தே வீழ்த்திவிடுவார்கள்.
- (அத்தியாயாம் ஏழு, ரங்ககிருஷ்ணன் தன் தாய் இராணி மங்கம்மாள் கூறியதை நினைத்துப்பார்பது.)
- நாட்டை ஆள்வது என்ற பொறுப்புக்கு வந்து விட்டால் எல்லா மக்களையும் நம் குழந்தைகள் போல் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு என்று நடத்தக்கூடாது. பொறுப்பில் இருப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டு என்று தெரிந்துவிட்டால் அப்புறம் மக்களே விருப்பு வெறுப்புகளைத் தூண்டுவார்கள். விருப்பு வெறுப்புகள் என்ற வலைகளை நம்மைச் சுற்றிலும் பின்னிவிடுவார்கள். நாம் அப்புறம் அந்த வலைகளுக்குள்ளிருந்து வெளியேற முடியாமலே போய்விடும்.
- (அத்தியாயாம் எட்டு, ரங்ககிருஷ்ணனிடம் அவன் தாய் இராணி மங்கம்மாள் கூறியது.)
- உலகில் மிக உன்னதமான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் மகாகவிகளாகிறார்கள். மிகக் கொச்சையான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் தங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றியே வம்பு களையும் வதந்திகளையும் கற்பித்து மகிழ்கிறார்கள்.
- (அத்தியாயாம் இருபது.)