இலத்தீன் பழமொழிகள்
Appearance
இந்தப் பக்கத்தில் இலத்தீன் மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அடக்கமாக அடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒற்றுமையே சிறந்த வலிமை.
- அதிருஷ்டமுள்ளவர்கள் மணமாகி மூன்றாம் மாதம் குழந்தையை அடைகிறார்கள்.
- அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும்.
- இதயம் எங்கே தங்கியுள்ளதோ அதுவே வீடு.
- இரவுச்சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்.
- இறந்தவனுக்கு மரியாதை நம் நினைவு, கண்ணீர் அன்று.
- இறந்தோரைப் பற்றிப் பெருமையாக மட்டும் பேசு.
- உழைப்பு, கவலைகளிலிருந்து ஓய்வு பெறுவது மரணம்.
- உன் கடைசி நாளை எண்ணி அஞ்சவும் வேண்டாம், அதை விரும்பவும் வேண்டாம்.
- ஒற்றுமைப்பட்டால் வலிமை அதிகம்.
- ஓடுகிறவனுக்கு முன்னால் மரணம் ஓடி நிற்கும்.
- காதல் ஒருவகைப் போர் முறையாகும்.
- காதலிக்கும் காலத்தில் ஜூபிடரும் கழுதையாவார். [ஜூபிடர்-தேவர்களின் அதிபதியான கடவுள். கிரீஸில் இவரை 'சீயஸ்' என்பர்.]
- காதலின் தூதுவர்கள் கண்கள்.
- காதலிலே தோன்றும் கோபம் போலியானது.
- காலை நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள்.
- குதிரைகள் வாங்கும் போதும், பெண் எடுக்கும் போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும்.
- கோபம் வந்த பெண் கரையில்லாத கடல்.
- சமுதாயத்தின் முதற் கட்டுப்பாடு திருமணம்.
- சாசரின் மனைவி சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.
(ரோமாபுரியில் ஆண்டு வந்த தலைவர்கள் சாசர்கள், சாசரின் மனைவி, எவரும் சந்தேகம் கொள்ள இடமில்லாமல், அப்பழுக்கற்றவளாக இருக்கவேண்டும்.) - செத்தவனைத் தொடர்ந்து கொன்றவனும் விரைந்து செல்கிறான்.
- செல்வமுள்ள ஸ்திரீயைப்போல் சகிக்க முடியாதது வேறில்லை.
- தன் குடும்பத்தை விட்டு ஓடுபவன் நெடுந்தூரம் சென்று கொண்டேயிருக்கவேண்டும்.
- தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல்லை.
- தன் குடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்து கொள்பவன் கணவன்.
- தீய யோசனை சொல்வதில் பெண்கள் ஆடவர்களை வென்றுவிடுவார்கள்.
- நம் சொந்த வீடே மற்ற வீடுகளைவிட மேலானது.
- நன்றாக வாழ்வதற்குச் சொற்ப வாழ்வே போதுமானது.
- நாம் வாழத் தொடங்கிக்கொண்டே யிருக்கிறோம், ஆனால் வாழ்வதில்லை.
- நாம் வாழ்க்கையைச் சிறு துண்டுகளாக்கி வீணாக்குகிறோம்.
- நாளையே மரிக்க வேண்டியவனைப் போல வாழ்ந்து கொண்டிரு.
- நீ வாழ்ந்திருக்கும் வரை, எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேயிரு.
- நோய் நாம் யார் என்பதைக் காட்டுகின்றது.
- நோய் வந்தவுடனேயே அதைக் கவனிக்க வேண்டும்.
- நோயுற்ற காலங்களில் ஆன்மா தன் வலிமையைச் சேர்த்து கொள்கின்றது.
- நோயை மறைத்தல் அபாயம்.
- நோய்களுக்கு அஞ்சி ஓடும் பொழுது, நீங்கள் வைத்தியர் கைகளில் சிக்குகிறீர்கள்.
- பழைய காதல் ஒரு சிறைச்சாலை.
- பிறர் மனைவியரிடம் ஒருபோதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டாம்.
- புது விருந்தை வீட்டினுள் அழையாமலிருத்தல் கேவலம், வந்த விருந்தை வெளியேற்றுவது அதைவிட மோசம்.
- பெண் மனிதனின் குழப்பம்.
- பெண், விருப்போ வெறுப்போ அடையும் பொழுது, எதையும் செய்யத் துணிகிறாள்.
- போய் விட்டான் என்று நீங்கள் சொல்பவன் (நமக்கு) முன்னால் போய் நிற்கிறான்.
- மரணத்திற்கு மருந்தில்லை.
- மரணத்தின் நினைவோடு வாழ்வாயாக.
- மரணம் உனக்காக எங்கே காத்திருக்கும் என்பது நிச்சயமில்லை; ஆதலால் அதை எங்குமே எதிர்பார்க்க வேண்டும்.
- மரணம் எல்லாப் பொருள்களையும் சமமாக்குகின்றது.
- மரணம் மருத்துவருக்கு அஞ்சாது.
- மரணம்- வாழ்க்கையின் வாயில்.
- மனம் வேறிடத்தில் இருந்தால், (எல்லோருக்குமே) கண்கள் குருடுதான்.
- மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை.
- மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு.
- மனிதன் தனக்கு எவ்வளவு வேண்டியவனோ அதைவிட அதிகமாகத் தேவர்களுக்கு வேண்டியவன்.
- மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான்.
- மனைவி உள்ள கட்டிலில் சண்டையில்லாமல் இராது.
- மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும் உடந்தைதான்.
- மிக நெருங்கிய பந்துக்களின் துவேஷமே அதிகமா யிருக்கும்.
- மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம்.
- வாலிபம் பறந்து செல்கின்றது.
- வாழ்க்கை பயன்படுத்தப் பெறுவதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
- வைத்தியர் மனத்திற்கு ஆறுதலளிப்பவரைத் தவிர வேறில்லை.