சாதியை ஒழிக்கும் வழி (நூல்)
சாதியை ஒழிக்கும் வழி (Annihilation of Caste) என்ற நூல் 1936 ஆம் ஆண்டு லாகூரில் நடக்க இருந்த ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்காக அம்பேத்கரால் எழுதப்பட்டது. உரையின் கருத்துக்களோடு மண்டலுக்கு சில முரண்பாடுகள் இருந்ததால் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. அந்த உரையை பின்னர் புத்தகமாக அம்பேத்கர் வெளியிட்டார். அடுத்த ஆண்டே இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பெரியாரின் முயற்சியால் குடி அரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. தலித் முரசு இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு முழு உரையும் வெளியிடப்பட்டது. மத்திய அரசின் நலவாழ்வு அமைச்சகத்திற்காக செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்ட பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பின் முதல் தொகுதியில் இந்த உரை உள்ளது. இந்நூலுக்கு மகாத்மா காந்தி ஆற்றிய எதிர்வினையும், அதற்கு அம்பேத்கரின் மறுப்பும் இணைந்தே உள்ளது.
அம்பேத்கரது பிற மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- நான் இந்துக்களை விமர்சித்து இருக்கின்றேன்; அவர்கள் போற்றிடும் மகாத்மாவுக்கு இந்துக்கள் பெயரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கின்றேன். அவர்கள் என்னை வெறுக்கின்றனர். அவர்களுடையத் தோட்டத்தில் என்னையொரு நச்சுப் பாம்பாகவே அவர்கள் பார்க்கின்றனர்.[1]
- அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாகவே ஏற்றுக்கொள்வதை சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.[1]
- இந்தியாவில் சமுதாயச் சீர்திருத்தம் என்பது, சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையைப் போலவே கரடுமுரடானது, துன்பம் நிறைந்தது. எளிமையானது அல்ல.[2]
- எந்த ஒரு நாட்டுக்கும் பிற நாடுகளை ஆதிக்கம் செய்ய உரிமை இல்லை என்ற மில் அவர்களின் கோட்பாட்டை, திரும்பத் திரும்பக் கூறுகிற ஒவ்வொரு காங்கிரஸ் காரரும் - எந்த ஒரு சாதிக்கும் பிற சாதிகளை ஆதிக்கம் செய்ய உரிமை இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.[3]
- சமூகச் சீர்திருத்தத்தை அலட்சியப்படுத்தியதன் விளைவே வகுப்புவாரித் தீர்ப்பு (Communal Award) எனலாம்.[4]
- மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது.[5]
- வெறும் வார்த்தை அலங்காரங்களில் மனநிறைவு அடைந்துவிடாமல், சோசலிஷ இலட்சியத்தை ஒரு நடைமுறைக்குரியதாக ஆக்குவதற்குச் சோசலிஸ்டுகள் விரும்புவதானால், சமூகச் சீர்திருத்தப் பிரச்சினையே அடிப்படையானது என்பதையும் அதிலிருந்து அவர்களால் தப்பிக் கொள்ள முடியாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.[6]
- தங்களின் சமூக உயர்வை நிலைநாட்டும் வல்லமை பெற்றவர்களும், தங்களை விடத் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் மீது அதனைத் திணிக்கும் ஆற்றலைப் பெற்றவர்களுமான கொடுமை படைத்த இந்துக்களின் ஆணவத்தையும், சுயநலத்தையுமே சாதிமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[7]
- இந்த நாட்டு மக்களிடமிருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகம்மதியர் வைத்த பெயர்தான் 'இந்து' என்பது. முகம்மதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் 'இந்து' என்ற சொல் காணப்படவில்லை. இந்துக்களுக்குப் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனை இல்லாதிருந்த காரணத்தால் தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணரவில்லை.[8]
- ஒவ்வொரு சாதியினரும் உடுத்த வேண்டிய உடை என்பதைக் கூட அந்தந்த சாதியினரே தெளிவாக வரையறுத்திக் கொண்டுள்ளனர். இந்திய நாட்டின் ஆண்களும், பெண்களும் எண்ணற்ற விதங்களில் உடையணிந்து சுற்றுலாப் பயணிகள் வேடிக்கையாகப் பார்க்கத்தக்க அளவுக்குக் காட்சிப்பொருளாக நிற்பதற்கு வேறென்ன விளக்கம் தரமுடியும்? [8]
- ஒருவேளை கிறித்துவ மிசனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவனால் அதைச் செய்ய முடியாதா? முடியாது என்றே பனிவுடன் கூறுவேன். காரணம் இந்தப் பழங்குடி மக்களை நாகரிக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்த வேண்டும். அவர்களுள் ஒருவராக வாழ வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும். ஓர் இந்து இவற்றை எல்லாம் செய்வது சாத்தியப்படுமா? தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்கவொண்ணாத பெரும் சொத்து; எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இந்துவும் அதைக் காப்பாற்றியேத் தீர வேண்டும். வேதகாலத்து ஆரியரல்லாதவர்களின் வழிவந்த பழங்குடிமக்களோடு தொடர்பு கொள்வதன் மூலம் சாதி என்னும் உடைமையை இழக்க எந்த இந்துவாலும் முடியாது.[9]
- தாழ்ந்து கிடக்கும் மனிதருக்குத் தான் செய்யவேன்டிய கடமைப் பற்றிய உணர்வை ஒரு இந்துவுக்கு எவராலும் கற்பிக்க முடியாது என்று நான் கூறமாட்டேன். வேறு எந்தக் கடைமை உணர்வும் ஓர் இந்துவைத் தன் சாதியைக் காப்பாற்றுவது என்ற கடைமையை மீறும்படி செய்யமுடியாது என்பதுதான் இங்குள்ள சங்கடமான நிலைமை.[10]
- மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாயிருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்தளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விசயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்? பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள். ஆனால், இது திறமை உள்ளவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வு ஆகாது; விசேச உரிமைகள் பெற்றவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வாகவே இருக்கும். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனைப் பெறுவது சமூகத்துக்கு நல்லது என்றால், ஆரம்பத்திலேயே எல்லோரும் முடிந்த அளவு சமமாக இருக்கச் செய்வதுதான் அவ்வாறு உயர்ந்த பலனைப் பெறுவதற்கு வழியாகும்.[11]
- சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது.[12]
- அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்.[12]
இந்நூலைப் பற்றி பிறரது மேற்கோள்கள்
[தொகு]- .... டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில் அதைத் தமிழில் மொழிபெயர்த்து ‘ஜாதியை ஒழிக்கும் வழி' என்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0-4-0வுக்கு விற்று வருகிறோம். அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது, சுயராஜ்ஜியமும் வராது, பொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்” [13]
- எந்தச் சீர்திருத்தவாதியும் அவரது உரையைப் புறக்கணிக்க முடியாது. பழமை மரபுள்ளவர்கள் அதைப் படிப்பதால் பயனுறலாம். இப்படிச் சொல்வதால் அவருடைய உரை மறுப்புக்குரியது அல்ல என்று பொருளாகாது. மிகவும் தீவிரமான மறுப்புக்குரியது என்பதற்காகவே அதைப் படிக்க வேன்டும்...[14]
சான்றுகள்
[தொகு]
- ↑ 1.0 1.1 பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 51
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 52
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 58
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 59
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 63
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 66-67
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 71-72
- ↑ 8.0 8.1 பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 72
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 76-77
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 77
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 85
- ↑ 12.0 12.1 பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 99
- ↑ குடி அரசு, தலையங்கம், 13.1.1945
- ↑ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 120