உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெர்மனி பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இதில் ஜெர்மனி மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

 • அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்பொழுதும் மோசமான குழந்தைகள்.
 • அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம்.
 • அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான்.
 • அழகுக்காக கலியாணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாயம், பகல் நேரங்களில் துக்கமாயும் இருப்பான்.
 • அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும்.
 • அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது.
 • ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும்.
 • இளமைத் திருமணம் நீண்டகால அன்பு.
 • இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள்.
 • இளையோர் அறிய மாட்டார், முதியோர் மறந்துவிடுவர்.
 • இறந்து போன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும்.
 • உடல் நலமாயிருக்கும் பொழுதே நோயைப்பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்.
 • ஒவ்வொரு மணியும் (நேரமும்) நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது, கடைசி மணி அடித்தவுடன் ஆவி பிரிகின்றது.
 • ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது.
 • ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும், ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள்.
 • ஒவ்வொரு வைத்தியரும் தம் மாத்திரைகளே உயர்ந்தவை என்று எண்ணுகிறார்.
 • ஓராண்டு இன்பம் வேண்டுவோர் திருமணம் செய்து கொள்வது நலம்; இரண்டாண்டுகள் இன்பம் வேண்டுமானால், திருமணம் செய்யவேண்டாம்.
 • கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால், அவனுக்குத் திருமணம் பற்றிய நினைவை உண்டாக்குவார்.
 • கணவனின் அன்பே மனைவியின் வாழ்க்கை.
 • கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான்.
 • கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
 • கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு.
 • கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் சிறைவாசம்.
 • காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும்.
 • காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.
 • காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர்.
 • காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான்.
 • காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும்.
 • காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா.
 • காதலுக்குக் காலம் கிடையாது.
 • காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும்.
 • காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை.
 • காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை.
 • காதல்தான் காதலை வெல்ல முடியும்.
 • காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை.
 • காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி.
 • குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான், குழந்தைகளில்லாமல் மரிப்பவன் மகிழ்ச்சியை அறியான்.
 • குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால், அவர்களை எப்படியும் திருப்பலாம்.
 • கெட்ட மனைவியால் கணவனின் கப்பல் உடையும்.
 • கெட்ட மனைவியை உடையவன் செல்வங்களின் நடுவில் வறுமையில் வாடுபவன்.
 • சவப் பெட்டி தொட்டிலின் சகோதரன்.
 • சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும்.
 • தந்தை அழ நேருவதைவிட, குழந்தை அழுதால் அழட்டும்.
 • தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை
 • திருமணம் என்பது காதல் நோய்க்கு வைத்தியசாலை.
 • துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள்.
 • தேனீயை மனைவியாக உடையவன் சந்தோஷமாக யிருப்பான்.
  [சுறுசுறுப்புள்ள மனைவியால் ஆக்கம் பெருகும்.]
 • நன்றாயிருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கியிருக்கும்.
 • நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும்.
 • நோயே ஒரு வைத்தியன்.
 • நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும்.
 • நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணாக்கமாட்டான்.
 • பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.
 • பன்னிரண்டு வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிறோம்; பதினெட்டில் வாலிபப் பருவத்தையும், இருபதில் முதற் காதலையும், முப்பதில் மனிதரிடம் கொண்ட நம்பிக்கையையும், அறுபதிலிருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிறோம்.
 • பாதி வீட்டில் குடியிருந்தால் பாதி நரகம்.
 • பிடிலைப் போல் பெண்ணை மீட்டிவிட்டு உயரே தூக்கி வைத்து விடமுடியாது.
 • புது வைத்தியர் புதிதாகச் சவக்குழி தோண்டுபவர்.
 • பெற்றோர்கள் நூற்பதைக் குழந்தைகள் கழியில் சுற்ற வேண்டும்.
 • பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது.
 • போருக்குப் போகும் போது ஒரு முறை தொழவும், கடலுக்குப் போகும் போது இருமுறை தொழவும், திருமணம் செய்யும் போது மும்முறை தொழவும்.
 • மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும்.
 • மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான்.
 • மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
 • மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான்.
 • மனிதன் பிறக்கும் பொழுது, அவன் அழுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள்; அவன் இறக்கும் பொழுது, அவன் சிரிக்கிறான், மற்றவர்கள் அழுகிறார்கள்.
 • முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி-இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை.
 • மெத்தப் படித்த வைத்தியரை விட ஆக்கமுள்ள வைத்தியர் மேல்.
 • வைத்தியர் இளமையா யிருந்தால், எப்பொழுதும் மூன்று சவக்குழிகள் தயாரா யிருக்கவேண்டும்.
 • வைத்தியனுக்கு மூன்று விஷயங்கள் தேவை: சிங்கத்தின் இதயம், பெண்ணின் கரம், கழுகின் பார்வை.
 • வயதானவர்களுக்குத் தூரத்துப் பார்வை அதிகம்.
 • வாழ்க்கை நமக்கே அளிக்கபெற்றதன்று, இரவலாக வந்தது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜெர்மனி_பழமொழிகள்&oldid=38025" இலிருந்து மீள்விக்கப்பட்டது