உள்ளடக்கத்துக்குச் செல்

பொது வாழ்வு

விக்கிமேற்கோள் இலிருந்து

மேற்கோள்கள்[தொகு]

ஈ. வெ. இராமசாமி[தொகு]

  • பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.[1]
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.[1]
  • மனிதன் மற்ற மிருகங்களைப் போல் அல்லாமல், மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும். மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும். மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீர வேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும். அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும்? பிறப்பதும், சாவதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும். சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக்கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும். ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத்தொண்டு என்று வந்து விட்டால் அவை இரண்டையும் பார்க்கக் கூடாது. ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ, வலி இருந்தாலும் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவது போல், உலகில் வேறு எந்த தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும், குறை பாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும் படியும் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும். பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை. சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான். எதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும், ஏச்சு வந்தாலும், எவ்வித இழப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசிவரை கொள்கையை நழுவவிடாது காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும்.[2]
  • பணம், காசு, பண்டம் முதலியவற்றில் எனக்குப் பேராசை உண்டு. இவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியம் காட்டியிருப்பேனே தவிர, அவைகளில் நாணயக் குறைவையோ, நம்பிக்கை துரோகத்தையோ நான் காட்டியிருக்க மாட்டேன். வியாபாரத்துறையில், பொய்பேசி இருந்தாலும், பொது வாழ்வில், பொய்யையோ மனம் அறிந்து மாற்றுக்கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன். — (1 - 1 - 1962)[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  2. 2.0 2.1 "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பொது_வாழ்வு&oldid=18567" இலிருந்து மீள்விக்கப்பட்டது