ம. சிங்காரவேலர்

விக்கிமேற்கோள் இலிருந்து
இந்தியாவின் எதிர்காலம் நம் கையிலுள்ளது. மிக உயர்ந்த இந்தியாவைக் காண, நாம் கனவு காண்கிறோம்.

ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

 • போர்கள் ஒழியட்டும்; அமைதி தழைக்கட்டும்!
 • புலியும் பசுவும் ஒரு துறையில் நீர் அருந்தினாலும் அருந்தும். ஆனால், முதலாளியும் தொழிலாளியும் சரிசமத்துவமாக தங்கள் தேசப் பொருள்களை, காந்தியாரின் சுயராஜ்ஜியத்தில் அனுபவிப்பார்கள்எ ன்பது பகற்கனவே.
 • பொருளாதார வேற்றுமை உள்ளவரை எந்த அரசாயினும் சரி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பொய்ப்பேச்சே.
 • இந்தியாவின் எதிர்காலம் நம் கையிலுள்ளது. மிக உயர்ந்த இந்தியாவைக் காண, நாம் கனவு காண்கிறோம்.
 • தொழிலாளர் தம் புரட்சிக் கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியாவைப் பற்றிய கனவை நிறைவேற்ற முயல்வோம்.
 • ஞானம் இன்றி, எந்த இயக்கமும் உலகில் நிலைக்காது என்பது, நமது கால அனுபவம். மதங்கள் தழைத்தோங்குவதும், மதங்களைக் குறித்து எழுதப்படும் புத்தகங்களால் என அறிய வேண்டும். மூட நம்பிக்கைகள் இன்றும் உலகம் எங்கும் பரவி இருத்தலுக்கான காரணம் பொய் நம்பிக்கைகளை வளர்க்கும் புத்தகங்களே.
 • விஷயங்கள் நிகழும் சந்தர்ப்பங்களை எல்லாம் தெரிந்த பிறகு, அவைகளின் காரணங்களைக் குறிப்பதுதான் விஞ்ஞான முறைக்குப் பொருத்தமாகும்.[1]
 • சாதாரண சொற்கள், சீவன உபயோகத்திற்காகவே மறைத்து வைக்கப்பட்டு, மந்திரங்களாகப் பாவிக்கப்படுகின்றன.[1]
 • பார்த்தல், பரீட்சித்தல் என்னும் இரண்டு கருவிகளை உபயோகிக்காததால் கடவுளாலும், மந்திரங்களாலும், பொய் பித்தலாட்டங்களாலும் உலகை நிரப்பி வைத்திருக்கின்றோம்.[1]

கம்யூனிஸ்ட்டுகளின் குறிக்கோள்கள்[தொகு]

 • இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் குறிக்கோளாகக் கொள்ள வேன்டியது எது?
  • எல்லோருக்கும் எளிய வாழ்வு,
  • அன்றாட உணவு பற்றிய கவலையற்ற வாழ்க்கை,
  • அகால மரணத்திலிருந்தும், உடல்நலக் கேட்டிலிருந்தும் விடுதலை பெற்ற வாழ்வு ,
  • அறியாமை நீங்கிய வாழ்வு ஆகியவையே.

வரப்போகும் துர்பாக்கியம்[தொகு]

காந்தியார் சுயராஜ்யத்தில், தனியுடைமை ஆதரிக்கப்படும். அதில் அடங்கியுள்ள பொருளாதார அடிமைத்தனமும் நிலைத்துவரும். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் உண்ணப் போதுமான உணவு இல்லாமை இன்றைக்கு உள்ளதைப் போலவே இருந்துவரும். தோழர்களே! இந்த சுயராஜ்யமா வேண்டுமெனக் கேட்கின்றேன்? ஏனெனில், காந்தி ராஜ்யத்தில் தற்போதுள்ள நிலைமையாகிய பொருளாதார வித்தியாசமே நிலைத்துவரப்போகின்றது. ஆயிரம் பதினாறாயிரம் பேர்கள் மாத்திரம் எல்லா நிலங்களையும் நீர்நிலைகளையும் தொழிற்சாலைகளையும் ரயில்வேக்களையும் வீடுவாசல்களையும் வங்கிகளையும் சொந்தமாக ஆண்டுவரப்போகின்றார்கள். ஆனால், கோடானுகோடி மக்களோ, இவை எதுவும் சொந்தமின்றி, உண்ணப் போதுமான உணவின்றி, அறிவு விளங்க சரியான கல்வியின்றி, வசிக்கச் சுகாதாரமான வீடின்றி, போதுமான கூலியின்றி, வேலை நிச்சயமின்றி உழைத்துவரப்போகிறார்கள். காந்தியாரின் சுயராஜ்யத்தில் அதுதான் சிலருக்கு வரப்போகும் நற்பாக்கியம். இதுதான் பெரும்பான்மையோருக்கு வரும் துர்பாக்கியம்

எல்லாம் யாருக்காக?[தொகு]

இந்தப் பொருளாதார வேற்றுமை உள்ளவரை எந்த அரசாயினும் சரி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பொய்ப்பேச்சே. உடையவனுடைய பொருளைக் காப்பதற்குத்தான் எல்லா போலீஸும், எல்லா நீதியும், எல்லாச் சேனை சிப்பந்திகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், எந்த இல்லாதவனுடைய வறுமையைப் போக்க, எந்த நியாயம், எந்தச் சட்டம், எந்த அரசு ஏற்பட்டுள்ளது?

பொதுவுடைமை என்றால் என்ன?[தொகு]

 • சொத்துக்களை உனது, எனது என்று பாராமல் சகலருக்கும் பொது எனக் கருதி நடப்பது பொதுவுடைமை ஆகும். இது ஒரு கொள்கை. இந்தக் கொள்கையின்படி பொருள் உடையவன் என்றாகிலும் அல்லது பொருள் இல்லாதவன் என்றாகிலும் இருக்க முடியாது. ஆதாவது இந்தக் கொள்கையின்படி ஏழை, மகராஜனென்பது கிடையாது. உடையவன், இல்லாதவன் என்று ஒரு சமூகத்தில் உண்டானால் உடையவனிடத்தில் இருக்கும் பொருளை உடையவனுக்கும் மற்ற இல்லாதவர்களுக்கும் உதவியாகும்படி செய்தல் பொதுவுடைமையின் முக்கிய கருத்தாகும்.[2]
 • சொத்துக்கள் தனித்து ஒருவனால் ஆளப்படாமல், அல்லது அனுபவிக்கப்படாமல் பலருக்கு உபயோகம் ஆகும் படி செய்தல் பொதுவுடைமை என்பார்கள்.[2]

புற இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. 1.0 1.1 1.2 சமதர்ம வார ஏடு 28.11.1934
 2. 2.0 2.1 "இயேசு பொதுவுடைமைக்காரரா?" என்ற கட்டுரையில் இருந்து. குடி அரசு 27.08.1933
"https://ta.wikiquote.org/w/index.php?title=ம._சிங்காரவேலர்&oldid=37280" இலிருந்து மீள்விக்கப்பட்டது