வி. வைரமுத்து
Appearance
இரா.வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை; புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்
- காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது
- இலட்சியமில்லாத வாழ்க்கை ஆணியில் தொங்குகிற சட்டை மாதிரி உள்ளீடற்றுத் தள்ளாடுகிறது
- நமது கல்வி விரல்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை
- பலர் நாற்காலி கிடைக்கும் வரை தீயைப்போல சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். கிடைத்தபிறகோ, அந்த நாற்காலியைப் போல் விறைத்துப் போகிறார்கள்
- நம்முடைய அகராதியில் அரசாங்க ஊழியன் என்பவன் ஒன்றாம்தேதி மட்டும் உறங்காதவன். மருத்துவன் என்பவன் தும்மிக்கொண்டே ஜலதோசத்துக்கு மருந்துகொடுப்பவன்
- (நமது கல்வியில்) தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல.
- களத்திற்கு வந்தபிறகு நீ கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்க முடியாது
- புகழின் பின்னால் நீ போனால் அது பொய்மான்; புகழ் உன் பின்னால் வந்தால் அது நிஜமான்; அப்போதுதான் நீ அதற்கு எஜமான்
- மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது. காலக் கணக்கில் வாழ்வு சிறிது.
- நீங்கள் படைத்த படைப்பில் பிடித்த படைப்பு எது என்று கேட்கிறார்கள். அது நாளை எழுதப்போகும் படைப்புதான். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளுமே. ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை நிற்கின்றன என்றே நினைக்கிறேன்![1]
- ஒரு விருது, விருதைப் பெற்றவனுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியைவிட அந்த விருது பெற்றவன் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சித்தான் பெரிது. இதில் நான் அடைகிற மகிழ்ச்சி சிறிது. நான் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சி பெரிது.[1]
- பத்மபூஷன் விருதைப் பற்றி கேட்ட பொழுது கூறியது.
நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]- வைரமுத்து தமிழுக்குப் புதிய சொற்கள் நிறைய உருவாக்கியவர். இந்தச் சொல் அலங்காரம் மற்றவரிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டுகிறது. மரபுக் கவிதையிலும் புதிய சொற்கள்... புதுக்கவிதையில்லும் வீரியமுள்ள வார்த்தைகள்... படிப்போருக்கு ஒரு போதையைத் தருகின்றன...! - வைரமுத்துவைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]
சான்று
[தொகு]- ↑ 1.0 1.1 ம.மோகன் (27 ஜனவரி 2016). விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி. தி இந்து. Retrieved on 18 சூன் 2016.
- ↑ சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 450-458.