உள்ளடக்கத்துக்குச் செல்

வ. உ. சிதம்பரம்பிள்ளை

விக்கிமேற்கோள் இலிருந்து
வ. உ. சிதம்பரம்பிள்ளை

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) என்பவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

இவரது கருத்துகள்

[தொகு]
 • நாம் சிரார்த்தம் என்னும் பேரால், பல தானங்களும், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் பாத்திரங்களும், அரிசி, காய்கறிகளும் குறிப்பிட்ட சமூகத்தவர்க்குக் கொடுத்தல் அவசியமெனக் கருதி அவ்வாறு செய்து வருகின்றோம். இதனால் நம் பிதிர்கள் சுவர்க்கத்தை யடைவார்கள் என்றும் நம்புகிறோம். இவ்வாறு பிள்ளைகள் செய்வதால், தந்தை தான் செய்த பாபத்தினின்றும் மீளுவது உண்மையாயின் நமது தத்துவமான ‘அவனவன் செய்தவினை அவனவனைச் சாரும்’ என்பது பொய்யாகப் போகின்றதன்றோ? ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைச் சார்ந்தார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், கோர்ட்டார் விடுவார்களா? உண்மை நீதிபதி விடமாட்டான். லஞ்சம் வாங்குபவனே அதற்கு ஒருப்படுவான். - (3 - 3 - 1928, காரைக்குடியில்)[1]

நமது தேசத்தில்-பொய்யான காரியங்களில் நம்பிக்கைக் கொண்டு மயங்கி ஏராளமான பணங்களைச் செலவழிக்கின்றனர். அவசியமான காரியங்களுக்கு எவ்வளவோ பணம் தேவையிருக்கப் பொய்யானவற்றிற்குப் பெரும் பணம் செலவு செய்யப்படுவதை எண்ணும் பொழுது வருத்தம் உண்டாகிறது. இப்பணம் நம் நாட்டிலுள்ள எல்லா சாதியாருக்கும் பயன்படுகிற தென்றாலும் பாதக மில்லை. குறிப்பிட்ட வகுப்பாருக்கே இப்பணம் செல்லுகின்றது. இதுவரையில் லாபமடைந்து வந்தவர்கட்கு என் பேரில் வருத்தமுண்டாகலாம். நீங்கள் நீதியை உணர்ந்து அதன்படி செய்யுங்கள். வெகு காலமாக திதி கொடுத்தல் என்னும் வழக்கத்தை நம்மவர்கள் கையாண்டு வருகின்றனர். இவ்வாறு செய்ய வேண்டுமென்று நம்தமிழ் நாற்களில் காணப்படவில்லை. —(3 - 3 - 1928, காரைக்குடியில்)[2]

 • குற்றம் செய்தவன், அதற்குள்ள தண்டனையடைதல் வேண்டும், கருணை காட்டுவது எளியோரிடமன்றிக் குற்றவாளியிடமன்று. குற்றஞ் செய்தவர்களை மன்னித்துக் கொண்டேயிருந்தால் உலகம் ஒழுங்காக நடைபெறாது. எமன் எப்போதும் தண்டித்துக் கொண்டேயிருப்பினும் தருமன் என்று அழைக்கப்படுகிறான். காரணமென்னை? நடு நிலைமையோடு சிக்‌ஷித்தலால் அன்றோ ஆகவே, இறந்தவர்கள் பெயரால், மூட நம்பிக்கையால் பார்ப்பனருக்கோ, சைவருக்கோ பணங்களைக் கொடுக்க வேண்டாம். இவ்வாறு கூறுவதால் என்னை நாத்திகன் என்று சிலர் கூறலாம். பிறரால் ஏமாற்றப் படுவதைத் தடுக்கும் பொருட்டே நான் சொல்லுகிறேன்.— (3-3-1928)[3]
 • நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேணடும். பணமுள்ளவர்கள் தேசசரித்திரம் பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுவதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம். சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும் பேசவும், அவசியமானால் உபநியாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்கவேண்டும். தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்கவேண்டும். நன்செய், தோட்டம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தல் அவசியமாகும். வ. உ. சி. (3 - 3 - 1928) (காரைக்குடியில்)[1]
 • இனி கலாசாலைகளில் ஒரு மணி நேரம் பாஷா கல்வியும் 6-மணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயம் பாடமாக வைத்தல் அவசியமாகும். -(3-3-1928 (காரைக்குடியில்)[4]
 • நான் ஓட்டும் கப்பலில், வெள்ளையர், மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் தாய் நாட்டுக்குப் புறப்பட வேண்டும். அந்நியன் கப்பலேறும் நாளே புனிதநாள்.[5]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
 • அரவிந்தர் ஒரு வங்காளி. எந்த ஒரு வங்காளியும் அவரை மறக்கவில்லை. பிரகாசம் ஒரு தெலுங்கர். எந்த ஒரு தெலுங்கனும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டுந்தான் வ. உ.சியை மறந்து விட்ட்னர். அவரது அருமை பெருமைகளைப் பறைசாற்றத் தவறிவிட்டனர். —கவிஞர் சுரதா (1971)[6]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 6. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வ._உ._சிதம்பரம்பிள்ளை&oldid=18583" இலிருந்து மீள்விக்கப்பட்டது