உள்ளடக்கத்துக்குச் செல்

ஈ. வெ. இராமசாமி

விக்கிமேற்கோள் இலிருந்து
சீர்திருத்தம் என்பது ஓட்டை, உடைசலை அடைக்கிற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி!

தந்தை பெரியார், பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்.
  • இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி ; என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள் - நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சம் கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.[1]
  • நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது
  • புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான்.[2]
  • மழை பெய்வது பொதுநலம், குடை பிடிப்பது சுயநலம்.
  • சிந்திக்கிறவனுக்குக் கடவுள் கிடையாது.[3]
  • கட்டுப்பாடுகள் எதுவுமே தேவையில்லை என்பவன் நான்.[4]
  • இன உணர்ச்சியும், காலித்தனமும் கூடவே கூடாது.[5]
  • தமிழ்நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் செக்குமாடாக இருத்தல் வேண்டாம்; பந்தயக் குதிரைகளாக இருத்தல் வேண்டும்.[6]
  • யாராவது ஒருவர்தான் நடத்தக் கூடியவராக இருக்க முடியுமே தவிர, எல்லோரும் தலைவர்களாக இருக்க முடியாது.[6]
  • ஆத்மா என்பது ஆகாயத்தில் தளவாடமின்றிக் கட்டப்பட்ட ஒரு கோட்டை.[6]
  • என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்து, கடனாளியாக மாறி, பிறரை ஏமாற்றுவது இழுக்கு.[6]
  • பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பவை தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே இல்லை.[6]
  • நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய கடமை; உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும்.[6]
  • தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மே முதல் நாள் ஒன்றே உகந்த தினமாகும்.[6]
  • சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் சமுத்துவமாய் வாழ வேண்டும். அதற்காகப் பலாத்காரம், துவேசம், இம்சை இல்லாமல் பிரச்சாரம் செய்வது குற்றமாகாது.[6]
  • கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் துணை; தவறை உணராதவனுக்கு தலைவிதி துணை.[6]
  • தேரும், திருவிழாவும் நடத்திப் பொதுமக்கள் பணத்தைப் பாழாக்குவதே மூடத்தனம்.[6]
  • மதத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு இடமிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அது மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? இல்லையா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.[6]
  • அந்நிய நாட்டினர் நிலவிற்குச் செய்து அனுப்பிக் கொண்டிருக்க இறந்த தந்தைக்குப் பார்ப்பானிடம் அரிசி, பருப்பு அனுப்பி அழுது கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.[6]
  • கடவுள் இல்லை என்று கூற ஒரு அறிவாளியால் மட்டுமே முடியும்.[6]
  • அறிவுள்ளவருக்கு அறிவின் செயல்; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்.[6]
  • கடவுளும் மதமும் மனிதன் சிருஷ்டியே, கடவுளும், மதமும் மக்களால் தோற்றுவிக்கப்பட்டனவே அன்றித் தாமாகத் தோன்றியன அல்ல.[6]
  • கடவுள், மதம், ஆத்மா, பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், சொர்க்கம் என்பவை எல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதைகளே.[6]
  • இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.[6]
  • ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை சட்டப் பூர்வமாகத் தடுக்க வேண்டும்.[6]
  • ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை, அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பதாகும்.[6]
  • பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது ஆகும்.[6]
  • என் கஷ்டத்தைச் சாஸ்திரமும், மதமும், கடவுளும் கவனிக்கவில்லை. ஆனால், நான் ஏன் அவைகளை மதிக்க வேண்டும்?.[6]
  • குறிப்பாக மாணவர்கள அறிவியலில் நம்பிக்கை வைத்து, எந்த காரியத்தையும் துருவித் துருவிப் பார்க்க வேண்டும். முன்னோர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது.[6]
  • ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.[6]
  • ஜாதிகள் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை (இட ஒதுக்கீடு) அரசாங்க அலுவலகங்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டும்.[6]
  • கடவுள் இல்லை, கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணக்குகிறவன் காட்டுமிராண்டி.[6]
  • ஒரு மனிதன் செத்த பிறகு மோட்சம் என்கிற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்கோட்டைதான் இந்து மதம்.[6]
  • பெண்களுக்கு வேண்டியது புத்தகப்படிப்பு மட்டுமல்ல; உலக அறிவும்தான்.[6]
  • மனிதனை முட்டாளாக்கும், பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும்.[6]
  • உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டுள்ளன.
  • மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறப்புப்பேதம் புதைக்கப்படுகிறது.[6]
  • மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே.[6]
  • பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை. பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.[6]
  • மதம் மக்களின் அறிவைக் கெடுக்கிறது.[6]
  • மதம் மக்களைச் சோம்பேறிகளாய், கோழைகளாய் ஆக்குகிறது.[6]
  • உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவே மாட்டான்.[6]
  • நாத்திகன் என்றால் அறிவாளி என்றுதான் பொருள். எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கிறானோ அவன் நாத்திகன்.[6]
  • சமுதாய்ச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை; அறிவின் உண்மையான கடைசி எல்லை நாத்திகம்.[6]
  • எதையும் முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.[6]
  • அய்ம்புலன்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு, எதுவானாலும் அது பொய் என்பதே பகுத்தறிவாளனின் கொள்கை.[6]
  • டாக்டர் டி.எம்.நாயர் ஒரு புரட்சி வீரர்; சுயமரியாதை வீரர்; அவரை ஒரு திராவிட லெனின் என்று சொல்ல வேண்டும்.[6]
  • பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.[6]
  • வீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை.[6]
  • கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்.[6]
  • பெண்களைக் கூண்டுக்கிளி ஆக்காமல் தாரளமாக பழகவிட வேண்டும்.[6]
  • பெண்கள் படித்துவிட்டால் ஆண்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள்.[6]
  • அடிமைத்தனத்தின் அறிகுறியே தாலி.[6]
  • கோவில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல; மற்றெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும் பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்க மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாகவே கட்டப்பட்டதாகும்.[6]
  • பெண்கள் விடுதலை அடையவும், தனி உரிமை பெறவும் கர்ப்பத்தடை அவசியம்.[6]
  • சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்துதான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும்.[6]
  • பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யாதீர்கள்!.[6]
  • கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.[6]
  • உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.[6]
  • ஆணைப் போலவே பெண்ணுக்கும், வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.[6]
  • பெண்களுக்குக் குத்துச் சண்டை முதற்கொண்டு சொல்லிக் கொடுத்து ஆண்களைப் போலவே வளர்க்க வேண்டும்.[6]
  • ஜனநாயகம் பெறும் பிள்ளை காலித்தனம் என்ற பிள்ளைதான்.[6]
  • கணவன் மனைவி என்பது கிடையாது, ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான் உண்மை.[6]
  • சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை, என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.[6]
  • நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.[6]
  • இளைஞர்களின் சகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடையவில்லை.[6]
  • இந்து மதத்தில் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும், வீரத்தெய்வமும் பெண் தெய்வங்களாய் இருந்தும், இந்துமதக் கொள்கைப்படி பெண்களுக்குக் கல்வியும், சொத்துக்களும், வீரமும் இருக்க இடமில்லை.[6]
  • பெண் ஆசிரியர்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.[6]
  • துருக்கியில் கமால்பாட்சாவும், ஆப்கானிஸ்தானில் அமீரும் நாத்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தம்தான் காரணம்.[6]
  • மாடுகளுக்குத் தினவெடுத்தால் உரசிக் கொள்ள தேய்ப்புக்கல் நட்டு வைக்கும் இந்து மக்கள், விதவைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?.[6]
  • ஒரு உயிரைப் பட்டினி போட்டுச் சாகடிப்பதை விட, ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் காப்பாற்றுவது கொடுமையானது.[6]
  • நம் நாட்டில் புதிதாக ஒருவரைச் சந்தித்தால் அவர் உத்தியோகம் பற்றிக் கேட்போம். ரசியாவிலோ, 'சமுதாய சேவை என்ன' என்றுதான் கேட்பார்கள்.[6]
  • மக்களுக்கு மானத்தையும், அறிவையும், உண்டாக்குவதே உயர்ந்த சமதர்மத் தொண்டாகும்.[6]
  • பொதுவுடைமை என்பது சமபங்கு, பொது உரிமை என்பது சம அனுபவம் ஆகும்.[6]
  • சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட முறைகளைக் கையாண்டு, சமூகப் பேதங்களைப் போக்க, ஜாதியை ஒழிப்பதற்குச் சரியான வழி வகை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம்.[6]
  • வாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதுதான்.[6]
  • ஒவ்வொரு மனிதனும், சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்.[6]
  • தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் இழந்தான்.[6]
  • பொதுத் தொண்டு செய்பவனுக்கு நேரம், காலம் கிடையாது.[6]
  • நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும், ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.[6]
  • நம் நாட்டைப் பாரத தேசம் என்று சொல்வது ஆரிய ஆதிக்கத்தைக் குறிப்பதே தவிர வேறில்லை.[6]
  • வாயில், நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத்தின்னது. இது போன்றதே பார்ப்பனர் தன்மை.[6]
  • 'விடுதலை' ஏடு பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது விழிப்புக்கு நல்லதொரு துணைவனாக இருந்து வந்திருக்கிறது.[6]
  • பார்ப்பனர்கள் மனிதர்களாக இருக்கட்டும்; தேவர்களாக இருக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.[6]
  • பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது.[6]
  • நம்முடைய அர்த்தமற்ற பேராசை, சுயநலங்களே நமக்கு இவ்வளவு வீட்டு வேலைகளை ஏற்படுத்திக் கொண்டது.[6]
  • கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?.[6]
  • ஓய்வு, சலிப்பு ஆகியவை தற்கொலைக்குச் சமமானவை.[6]
  • இந்த நாட்டில் பாமர மக்களுக்காகவோ ஏழை மக்களுக்காகவோ ஒருவன் வேலை செய்ய வேண்டுமானால் அவனுக்கு முதலில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சனைதான் முன் நிற்கும்.[6]
  • நமது மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் செத்துப்போனவர்களிடமே யொழியே, இருப்பவர்களிடம் இல்லை.[6]
  • சுயமரியாதை இயக்கமானது வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.[6]
  • ஒரு மனிதன் தனக்கு மோட்சத்தில் இடம் பிடிப்பதற்கு ஆக வெகுபேர்களை நரகத்தில் துக்கத்தில் அழுத்துகிறான்.[6]
  • நாத்திகன் என்றால் ஆராய்பவன், தர்க்கம் செய்பவன் என்று பொருள்.[6]
  • ஆத்திகன் என்றால் முட்டாள் ஆராய்ச்சித் தன்மை அற்றவன் என்று பொருள்.[6]
  • பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் முன்னுக்கு வந்தவர்களே தவிர அறிவு, திறமை, நாணயத்தால் அல்ல.[6]
  • ஜோதிடம் என்பது சோம்பேறிகளின் மூலதனம்; பொய் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பதற்கான தொழில்முறை.[6]
  • மக்கள் அறிவையும், ஆற்றலையும், முடக்கி, முன்னேற விடாமல் தடுக்கச் சுயநலமிகள் கையாளும் சொல்லே தலைவிதி.[6]
  • எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு அதன் பயனை அளவாகக் கொண்டதேயொழிய அதை ஆக்கியவனையோ, தெய்வீகத் தன்மையையோ இலக்கண அளவையோ, அளவாகக் கொண்டது.
  • கர்மாவை நம்பியவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.[6]
  • ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்.[6]
  • எவன் ஒருவன் மக்களை வஞ்சிக்கிறானோ, தனது தேவைக்கு மீறிய சொத்து சேர்க்கிறானோ அவன்தான் திருடன்.[6]
  • இந்தக் காலத்தில் பிறரை ஏமாற்றாமல், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் இருப்பதே அறமாகும்.[6]
  • உண்ணாவிரதம் என்பது தற்கொலைக் குற்றமுள்ள நோய்.[6]
  • தேர்தலுக்கு நிற்பவன் எவனாக இருந்தாலும் அவன் அயோக்கியனே!.[6]
  • இனமானம் தன்மானத்திலும் பெரிது. உண்மையிலும் பெரிது, பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது, பண ஊற்றுள்ள உத்தியோகத்திலும் பெரிது.[6]
  • நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?.[6]
  • நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமல் இருப்பதாகும்.[6]
  • சாமி குழந்தைகளைக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்களே, அந்தச் சாமி கஞ்சியையும் ஊற்றுமா?.[6]
  • இன்றைய நிலையில் பதவிக்குப் போனால் யோக்கியனும் அயோக்கியனாய் விடுவான்.[6]
  • திருவிழா என்பது கண்ணடிக்கும் கான்பிரன்சு.[6]
  • ஒரு மொழியோ, வடிவமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டியது அவசியம்.[6]
  • இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்ட வேண்டும்; மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்தவதாக இருக்க வேண்டும்.[6]
  • பார்ப்பானோடு போராடுகிற கடைசிப் போராட்டம் என்று கருவறை நுழைவுப் போராட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.[6]
  • தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத் திருகிப் பிடுங்கிக் கொண்டு போவதுபோல் மார்வாரிகள் கொண்டு போகிறார்கள்.[6]
  • மாடுகள் தினவெடுத்துக் கொண்டால் உரசிக் கொள்வதற்குத் தேய்ப்புக்கல் அடித்து நட்டு வைக்கும் இந்து மக்கள், விதவைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?.[6]
  • வரவுக்கு மேல் செலவு செய்வது விபச்சாரத்தனம் செய்வதைப் போன்றதாகும்.[6]
  • மணமென்பது மணமக்களின் மனமொத்ததேயாகும்.[6]
  • எங்கெங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்துக்கு இடம் இல்லையோ, அங்கெல்லாம் இருந்து நாத்திகம் முளைக்கிறது.[6]
  • எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல, அது போலவே எவனும் எனக்கு மேலாவனும் அல்ல.[6]
  • பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் மனித சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும்.[6]
  • சிக்கனமே செல்வம், தகுதிக்கு மேல் வாழ்வதே தரித்திரம் என்பதை மனத்தில் இருத்தல் வேண்டும்.[6]
  • முதலில் மனிதன் மனிதனாக வேண்டும்; இரண்டாவது அவனுக்கு அறிவு வளர வேண்டும்.[6]
  • ஆடம்பர செலவு என்பது தரித்திரத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்.[6]
  • என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக்களைப்போல் சரிசமமாக வாழ வேண்டும், அறிவிலே முன்னேற வேண்டும் என்பதற்குத்தான்.[6]
  • மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் அனேகமாய் எல்லாவற்றையும், மதமும், கடவுளும், அடுத்த ஜென்ம நம்பிக்கையுமே அபகரித்துக் கொள்கின்றன.[6]
  • அறிவுக்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசு.[6]
  • தனிப்பட்ட மனுஷனே, உன் பொண்டாட்டியை என்று சொன்னால் கத்தியை எடுத்துக் கொள்கிறான். இத்தனைப் பேரையும் தேவடியாள் மகன் என்கிறான் ஒரு பயலுக்கும் மானம் இல்லையே![6]
  • கடவுள் பக்தி, மத பக்தி, அரச பக்தி, ஆகிய அறிவுத் தடைகளும், அடிமைப் புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்விச் சாலைகளுக்குள் தலைகாட்டவே விடக்கூடாது.[6]
  • உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும், அதற்கான அறிவும் பெறுவதே சுயராஜ்யமாகும்.[6]
  • பார்ப்பனர்கள் தம் உயர்விற்கும் தமிழர்களின் இழிவிற்குமே தீபாவளி போன்ற பண்டிகைகளை உண்டாக்கியுள்ளனர்.[6]
  • மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும்.[6]
  • நாம் மானமுள்ள சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளும் நிலை ஏற்பட வேண்டுமானால், நம் எண்ணிக்கைக்கு உண்டான விதிப்படி கல்வி, உத்தியோகம், பதவி ஆதிக்கம் ஏற்பட்டுத் தீர வேண்டும்.[6]
  • மனத்துள்ளே குற்றம் குறை இருந்தால் வெளியில் செய்யும் செயலும் குறையுடையதாகவே இருக்கும்.[6]
  • நம்முடைய அறிவீனத்தினாலேயே வாழ்க்கையில் பல பிரச்சனைகள், சங்கடங்கள் சூழ்ந்து கொண்டு வாட்டுகின்றன. இவைகளைக் களைந்தெறிய வழி தேடுங்கள்.[6]
  • நாம் யாரையும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டியவர்கள் அல்லோம். உண்மையான மானிடத் தன்மையை அறிய வேண்டும். மனிதனுக்கு பிறப்புரிமை தன்மானந்தான்.[6]
  • போர் முனைக்குச் செல்லும் வீரர்போல் புரட்சிக்குத் தயாராக இருங்கள்.[6]
  • மனிதனுக்கு நாளைக்கு வேண்டுமே என்கிற வேலையும், தன்னம்பிக்கை அற்ற தன்மையும், திருப்தியடையாத ஆசையும் அதிகம் இருக்கிறது.[6]
  • புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவற்றினால்தான் இயற்கையைப் படிப்பதும், முற்போக்கு அடைவதும் சாத்தியமாகும்.[6]
  • ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.[6]
  • எத்தனை ஆண்டுகாலம் ஆண்டோம் என்பதில் பெருமையில்லை என்னென்ன காரியங்கள் செய்தோம் என்பதில்தான் பெருமை.[6]
  • கடவுள் உணர்ச்சியற்றவர்களுக்கு நாட்டில் 'நாளைக்கு என்ன கதி' என்கிற பேச்சே கிடையாது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே காணப்படுகிறார்கள்.[6]
  • இன்றைய தமிழர்கள் ஓர் அளவு முன்னேற்றப் பாதையில் செல்கிறார்கள். அவர்கள் அடைய உரிமையுள்ள இடத்திற்குச் சென்று விட்டதாகக் கூறிவிட முடியாது.[6]
  • மோட்சம் என்பது அர்த்தமில்லாத சொல்.[6]
  • வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உத்தேசம் கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டும் என்பதல்ல; மனிதனுக்கு மனிதன் பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்பதுதான்.[6]
  • நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்ட இச்சட்டத்தைக் கொளுத்துகிறேன்.[6]
  • ஏழை பணக்காரத் தன்மை ஜாதியை பொறுத்தே அநேகமாய் 100 க்கு 95 பங்காக இருந்து வருகிறது.[6]
  • ஒரு நாட்டின் உணவு உற்பத்திக்கு எல்லை உண்டு. அதற்கு உட்பட்டுதான் மக்கள் தொகை எண்ணிக்கையும் இருக்க வேண்டும்.[6]
  • பெரியபுராணமும், ராமயணமும், பாரதமும் உள்ளவரை ஜாதிபேதமும் வருணாசிரமும் ஒழியவே ஒழியா.[6]
  • எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக் குறைவுக்கும், மூடநம்பிக்கைக்கும் பயன்படக் கூடாததாய் இருக்க வேண்டும்.[6]
  • காலம் மாறுதல், மனப்புரட்சி என்னும் வேகத்திலே பழைமை என்னும் பித்தலாட்டங்கள் இனி எதிர்த்து நிற்க முடியாது.[6]
  • கருமாந்திரம் என்பது காசு பறிக்கும் தந்திரம்.[6]
  • இன்றைக்கு நாம் எவைகளைக் கொள்கைகளாகச் சொல்லி, எவைகளை அழிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோமோ அந்தக் காரியங்களுக்கு புத்தருடைய கொள்கைகள் பயன்படும்.[6]
  • எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகிறோதோ அங்குதான் புரட்சி மலர்கள் வீறுகொண்டு பூக்கும்.[6]
  • எதற்காகத் திராவிடர் இயக்கம் வேலை செய்கிறது என்றால் திராவிடர் நான்காவது ஜாதியாக இருக்கக் கூடாது, தொழிலாளர் ஜாதியாக இருக்கக்கூடாது அதற்காகவே![6]
  • திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கக்கூடாது.[6]
  • இராவணனது அரசு முறை மிகுதியும் நாகரிகம் உடையதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு அவனது மந்திராலோசனை சபையும் அங்கு நடந்ததாகச் சொல்லும் வாதப் பிரதிவாதங்களுமே சான்றாகும்.[6]
  • மக்களாட்சிக்கு மக்கள் அறிவாளிகளாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.[6]
  • நாங்கள் இரகசியத்தில் சதி செய்பவர்களல்லர், பலாத்காரத்தில் நம்பிக்கை உடையவர்களும் அல்லர்.[6]
  • பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவமான கல்வி அளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்.[6]
  • இந்த நாட்டை வருணாசிரம் தருமத்தின் மூலமும், மனு தருமத்தின் மூலமும் பார்ப்பனர்களே ஆண்டு வருகின்றனர்.[6]
  • பெண்களுக்கு நல்ல அறிவையும், பழக்க வழக்கங்களையும் அளிக்க வேண்டும் அவர்களின் மூடநம்பிக்கையை அகற்ற வேண்டும்.[6]
  • வடநாட்டுச் சம்பந்தத்திலிருந்து பிரிய வேண்டும் என்கிற காரணம் கூட இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும், சுரண்டலும் ஒழியவேண்டும் என்பதற்கே.[6]
  • திருமணம் என்பதற்கு விருந்து, தடபுடல் செலவு ஒழிய வேண்டும்.[6]
  • பனகல் அரசர் ஆதிக்கம் செல்வாக்குப் பெற்ற அரசியல் கட்சி, சமூகம், பத்திரிக்கைகளுக்கு விரோதி.[6]
  • ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கம் சமுதாயத்துறையில் மக்களை மனிதத் தன்மை அடையச் செய்து, எல்லோர்க்கும் சமதர்மமும் சமநீதியும் வழங்குவதே![6]
  • கல்வியின் நோக்கம் மக்கள் பகுத்தறிவு பெறும் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர, அறிவை மழுங்க வைக்கும் மூட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கக்கூடாது.[6]
  • நம் பெண்களை மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ்பெறும் பெண்மணியாக்கவும் வேண்டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும்.[6]
  • பழி என்றால், மானக்கேடு என்றால், இழிவு என்றால் உயிர் விடவும் வேண்டும்.[6]
  • இல்வாழ்வில் ஆணுக்குப் பெண் துணை, பெண்ணுக்கு ஆண் துணை, துணை என்றால் நட்பு, உதவி, சமபங்கு என்பதைத்தான் கூறலாம்.[6]
  • ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தும் பிறருக்கும் உண்டாகச் செய்வதுதான் நாகரீகம்.[6]
  • ஆத்மா, மோட்சம், நரகம், மறுப்பிறப்பு, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன்.[6]
  • இல்வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஓர் ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ மட்டும் சொந்தமில்லை. இருவருக்கும் சொந்தமானது.[6]
  • நரகத்திற்குப் பயந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் சமதர்மக் கொள்கைகளைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகனால்தான் முடியும்.[6]
  • சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.[6]
  • பார்ப்பனர்கள் நம்மைச் சூத்திரர்கள் என்று கூப்பிட்டால் நாம் அவர்களை மிலேச்சர்கள் என்று கூப்பிட வழக்கப்படுத்தவேண்டும்.[6]
  • ரயிலும், மோட்டாரும், ஆகாய கப்பலும் போக்குவரவு சாதனங்களும் இல்லாத காலத்தில் புளுக ஆரம்பித்தால் ஜனங்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று கருதிப் பூலோகத்தில் இமயமலையை கைலயங்கிரி (வெள்ளிமலை) என்றும், பால்கடல், தயிர்க்கடல் சிரஞ்சீவிகளும் சித்தர்களும் இங்கு இருக்கிறார்கள் என்றும், மற்றும் இதுபோல் ஆசைதீரப் புளுகிவைத்தார்கள்.[6]
  • பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பிப் பின்பற்றமாட்டான்.[6]
  • முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.
  • மதத்தையாவது, ஜாதியையாவது, கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது.[7]
  • சூழ்ச்சியில் அடைந்த வெற்றி மனிதனை, சதா சூழ்ச்சியிலேயே இருக்கச் சொல்லுமே ஒழிய, வெற்றியை அனுபவிக்கக் கூட நேரமளிக்காது.[8]
  • இன்றைய போராட்டமே சாதியைக் காப்பாற்றுவது என்பதும், சாதியை ஒழிப்பது என்பதும்தான்.[9]

சீர்திருத்தம்

[தொகு]
  • சீர்திருத்தம் என்பது ஓட்டை, உடைசலை அடைக்கிற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி!

பெண்ணியம்

[தொகு]
  • தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்
  • ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசம் உரிமை என்பது.[10]
  • 'கற்பு' என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.[6]
  • பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள்.[6]
  • பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்துகொண்டெ வருகின்றது. ஒவ்வொரு பெண்ணும்-தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி – ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி – ஓர் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை – ஓர் ஆணின் கண் அழகிற்கு ஒர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் – பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமோ என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். பெண்களே வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள், நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள்மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் “இவள் இன்னொருடைய மனைவி” என்று அழைக்கப்டாமல், “இவர் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்படவேண்டும்.

பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே, பெண்கள் ஆபாசமாய்த் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும். இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்குக் கல்வியும், சொத்துகளும் இருக்க இடமில்லையே – ஏன்? ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்; எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது.[11]

அரசியல்

[தொகு]
  1. அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்.
  2. ஓர் இணைச் செருப்பு 14 வருட காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு – மனிதனே அல்லாமல் ஓர் இழிவான மிருகம் ஆட்சி செய்தால்கூட அது அதிகமான அவமானம் என்றோ, குறை என்றோ நான் சொல்ல வரவில்லை ஆனால், மனிதனானாலும், மிருகமனாலும் எந்தக் கொள்கையோடு, எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது, அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை. அடிக்கடி கட்சி மாறிக்கொண்டும், மந்திரி சபைகளைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தும், அராசகம் விளைவித்துவரும் நிலையில், இந்த நாடு சுதந்திரத்துக்கோ, சனநாயகத்துக்கோ அருகதையுள்ள நாடாகுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.[11]
  3. ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவது தானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல!

தீண்டாமை

[தொகு]
  • தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.
  • சாதி பேதம் ஒழிவதாலும், மேல் சாதி-கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப் போகுமானால், சுயராச்சியம் வருவது தடைப்பட்டு போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல்.[12]

சுயமரியாதை

[தொகு]
  • மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான-அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. "மனிதனுக்குப் பிறப்புரிமை சுயமரியாதைதான்." [13]
  • விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்த்தாலும் பலன் இல்லை.[6]
  • சுயமரியாதை இயக்க கொள்கைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்து எவ்வளவு பிடிவாதக்காரர்களையும் மனம் மாற்றி விடுவார் ஜீவா.[6]
  • மனிதன் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.[6]
  • மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.[6]
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.[6]

கலை, இலக்கியம்

[தொகு]
  • இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.[14]
  • எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.[6]
  • ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் தமிழனுக்கென்று ஒன்றும் இல்லை.[6]

பொதுவுடைமை

[தொகு]
  • பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான்; சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.[6]
  • ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது - அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ., வகுப்பைப்பற்றி பேசுவதாகும்.[6]

கற்பு

[தொகு]
  • 'கற்பு' என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.[6]
  • கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் ஒழிய வேண்டும்.[6]

பகுத்தறிவு

[தொகு]
  • சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.[6]
  • பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.[6]


பொது வாழ்வு

[தொகு]
  • பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.[6]
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.[6]
  • மனிதன் மற்ற மிருகங்களைப் போல் அல்லாமல், மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும். மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும். மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீர வேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும். அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும்? பிறப்பதும், சாவதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும். சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக்கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும். ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத்தொண்டு என்று வந்து விட்டால் அவை இரண்டையும் பார்க்கக் கூடாது. ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ, வலி இருந்தாலும் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவது போல், உலகில் வேறு எந்த தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும், குறை பாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும் படியும் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும். பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை. சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான். எதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும், ஏச்சு வந்தாலும், எவ்வித இழப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசிவரை கொள்கையை நழுவவிடாது காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும்.[11]

திருக்குறள்

[தொகு]
  • அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன.[6]
  • குறள் ஒரு அறிவுக்களஞ்சியம், பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல்.[6]
  • ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, மறுப்பு திருக்குறள் ஒன்றே! எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் பகுத்தறிவு பெற்று புது மனிதராகுங்கள்.[6]
  • திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.[6]
  • திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதோடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.[11]

கடவுள்

[தொகு]
  • மனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும்.[6]
  • கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம்.[6]
  • சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?.[6]
  • கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.[6]
  • ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை.[6]
  • பகுத்தறிவு, சுத்ந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை?.[6]

கல்வி

[தொகு]
  • கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே!.[6]
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.[6]
  • கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.[6]
  • பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.[6]
  • எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.[6]
  • தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது.[6]
  • ஆசிரியர்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.[6]
  • அறிவு முற்றும் வரையில் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.[6]
  • நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.[6]

மாணவர்கள்

[தொகு]
  • மாணவர்கள் அரசியலில் பிரவேசிக்காமல் இருக்க வேண்டும் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் தங்கள் சமூக விஷயங்களிலும் சுயமரியாதை விஷயங்களிலும் முன்னேற வேன்டியது அடிமைக் கல்வியைவிட முக்கியமானது.[15]
  • இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமானமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள்; பின் விளைவை அனுபவித்து, அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றிவிடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகின்றதோ கூட்டம் குதுகளம் என்பவை எங்கெங்கு காணப்படுகின்றனவோ அவற்றை யெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள். வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துனிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தியம், அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள். வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழக்கப்படுத்துவதேயில்லை; பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை; அறிவுக்கும், அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழகுவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து, தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாததாகும்.[11]

மொழி

[தொகு]
  • மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப் படுத்தும் சாதனமே தவிர அதற்கெனத் தனி மதிப்பு ஒன்றும் கிடையாது.[6]
  • ஆதி மொழியாக இருக்கலாம்; கடவுள் பேசிய மொழியாக இருக்கலாம்;அநேக அருள்வாக்கு கொண்ட மொழியாக இருக்கலாம். அது வேறு விசயம். அறிவுக்குப் பயன் உண்டா என்பதற்குப் பதில் வேண்டும்.[16]

திராவிடம்

[தொகு]
  • சில விஷயங்களில் மட்டும் நம்மைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்று சொல்லிக் கொன்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொன்டால் இரன்டுங்கெட்ட இழிநிலையைத் தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை.[17]
  • திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால், கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதைக் காரனுக்கு வேலையிருக்கிறது.[18]
  • சிலர் திராவிடன் என்பது வடமொழி என்பார்கள். அதைப்பற்றிய கவலையோ ஆராய்ச்சியோ தேவையில்லை. 'காபி' என்பது ஆங்கிலச் சொல் என்று எவனாவது 'காபி' குடிக்காமல் இருக்கிறானா? [19]
  • இந்து மதப் பண்டிகைகள், திராவிடர்களை இழிவுபடுத்தி என்றென்றும் அடிமைப்படுத்தவே ஏற்பட்டவை.[6]

மொழிக் கிளர்ச்சி எதற்காக?

[தொகு]
  • மொழிக் கிளர்ச்சி என்பது மொழியினால் மொழியாளர்களது நற்பழக்கம், வழக்கம், அவர்களது மேன்மை, விடுதலை, முற்போக்கு, சுயமரியாதை முதலிய காரியங்களுக்கும், அவர்களது மானத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஏற்பட்டிருந்து வரும் கேடுகள் நீங்குவதற்கும், மொழியைப் பயன்படுத்தவும் அதற்கேற்ற அதற்குப் பயன்படக்கூடிய மொழியை வளர்க்கவுமேயாகும்.[20]

மனிதன்

[தொகு]
  • நன்றி விசுவாசம் உடையவன் எவனோ அவன் மாத்திரம் மனிதன் ஆவான்.[6]
  • மனிதன் வேட்டி, வீடு இவைகள் கொஞ்சம் பழசானாலும் மாற்றிக் கொள்கிறான். ஆனால் பழமைப் பித்தை மட்டும் பிடிவாதமாக மாற்றிக் கொள்ள மறுக்கிறார்.[6]
  • மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்.[6]
  • மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன.[6]
  • அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை(கடவுள்) பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.[6]
  • சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.[6]
  • மனிதனுடைய நலம் என்பவற்றுள் எல்லாம் தலை சிறந்த நலம் அவன் மனத் திருப்தியே ஆகும்.[6]
  • மனிதன் கடவுள், உணர்ச்சி மாற மாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.[6]

நீதிக் கட்சி

[தொகு]
  • எல்லா உத்தியோகங்களுக்கும், பதவிகளுக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் லாயக்கும் உரிமையும் உண்டு என்பதைச் செய்து காட்டி மெய்ப்பித்தது நீதிக்கட்சி.[6]

ஒழுக்கம்

[தொகு]
  • ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்.[6]
  • பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.[6]
  • பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.[6]
  • உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக்கொண்டு தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக, நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும். பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில்தான் வளரமுடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.[11]

மதம்

[தொகு]
  • வகுப்புவாதம் கூடாது என்று கூறும் சர்க்கார் நாமம் போட்டால் இரண்டாண்டு கடுங்காவல்; பூணுல் அணிந்தால் ஜென்ம தண்டனை என்று சட்டம் செய்திருக்க வேண்டாமா?.[6]
  • மதங்கள் என்பவை எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவையே.[6]
  • டாக்டர் அம்பேத்கர் ஆரம்பத்தில் இந்து மதத்தை திருத்தலாமா என்று எண்ணினார், பிறகு அதை திருத்த முடியாது ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.[6]
  • தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.[6]

கோவில்கள்

[தொகு]
  • நம் இழிநிலையை நீட்டிக்கும் மண்டபமே கோவில்கள்.[6]
  • கோவில்கள் அறிவு, பணம் இரண்டையும் இழக்குமிடம்.[6]


  • கோவில்கள் கடவுளுக்காகக் கட்டப்பட்டவை அல்ல, மக்களைத் தாழ்த்தவும், பார்ப்பனர் பணம் பறித்துப் பிழைக்கவும் ஏற்பட்டவையே ஆகும்.[6]

தமிழ் மொழி வளர்ச்சி

[தொகு]
  • தமிழைப் போற்ற வேண்டுமானால், பரப்ப வேண்டுமானால் மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பொது அறிவுக்குப் பத்திரிக்கை இல்லை.[16]

சுதந்திரம்

[தொகு]
  • ஒவ்வொரு மனிதனும், சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்கவேண்டும். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்.[6]
  • மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை.[21]

மது

[தொகு]
  • மதுபானக் கெடுதி ஒழிவது நல்லது என்பதில் சிறிதும் அபிப்பிராய பேதமில்லை. மதுபானத்தினால் ஏற்படும் கேட்டை நன்றாய் உணர்ந்துதான் இருக்கிறோம். கள் ஒருநாளும் இந்தியாவை விட்டு அதிலும் தென்னாட்டை விட்டு ஒழியப் போவதில்லை என்ப்தைக் கல்லின்மேல் எழுதி வைத்துக் கொள்ளும்படி, வாசகர்களுக்குத் "தீர்க்கத் தரிசனம்" கூறுவோம்.[22]

நான் மனிதனே!

[தொகு]
  • நான் சாதாரணமானவன்; என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத்தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். ”நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்’’ என்று – வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டல் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்தக் கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.[11]

நான் யார்?

[தொகு]
  • ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது – எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் – உடல்நிலையில் இளைத்துப் போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற யோசனையைவிட எப்படி அதிகமான யோசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்கவேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.[11]

நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்!

[தொகு]
  • மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக்குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்தபிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும் சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்லவந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.[11]

பகுத்தறிவு

[தொகு]
  • உலகில், மனிதன் மற்ற உயிரினங்களை விடச் சிறந்தவனாக கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான். மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக்கொண்டு வருகிறான். ஆனால், இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிக மிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு, கோயில்-குளம் கட்டிக் கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்ட வெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள். மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் கப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ, அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தர வேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது. பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பமாட்டான்; பின்பற்றமாட்டான். அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது; உடல் நலத்துக்கு ஊசி போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் சுகம் ஏற்படும் என்று கருதி பொறுத்துக் கொள்ளுகிறான். அதுதான் அறிவின் தன்மை. நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவதுபோல் காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன் போல் காணப்படுவது எப்படித் தவறாகும்? ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத் தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம், சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான்-பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை. உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி; அதை நல்ல முறையில் பயன்படுத்து, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டால்தான் அறிவு வெள்ளாமை கருகிப் போயிற்று. முன்னோர் சொல்லிப் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல, அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய, கண்டுபிடிக்க, முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.[11]

சுயமரியாதை

[தொகு]
  • தெரியாத-புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பயனே இவ்வளவு பொய்களையும் நம்பவேண்டியவனாகிவிட்டான். ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம். மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியான மான – அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், “மனிதன்”, “மானுடன்” என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமரியாதையைதான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கின்றான். சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும்,எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை. மனிதன் உலகில் தன் சுயமரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.[11]

சமுதாயச் சீர்திருத்தம்

[தொகு]
  • சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை-மேல்பூச்சு வேலை செய்வதோ பயன்தராது. இன்றையச் சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்து விட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை சாதியற்ற உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்கவேண்டும். நம்முடைய சமுதாயம் குரங்குப்பிடிச் சமுதாயம்; உலகம் முக்காலே அரைக்கால்வாசி முன்னேற்றம் அடைந்த பிறகும், இது முன்னோர் சொன்னபடி நீண்ட நாளாக நடந்து வந்த பழக்கம் என்றுகூறி, முதுகுப் பக்கம் பார்த்துக்கொண்டு பிடிவாதமாக நடந்து, இன்னும் காட்டுமிரண்டித் தன்மையிலேயே இருக்கிறது. நீ ஒரு ஊரிலே இருக்கிறாய். அந்த ஊரிலே 50 பேருக்கு நரம்புச் சிலந்தி வந்திருக்கிறது. அது எதனால் வந்தது என்று பார்க்கிறாய். அந்த ஊரில் உள்ள கேணியில் நரம்புச் சிலந்தி பூச்சி இருக்கிறது. அந்த தண்ணீரைக் குடிப்பதால்தான் அவர்களுக்கு நரம்புச் சிலந்தி வந்திருக்கிறதென்றால் அந்தக் கேணியிலிருக்கிற நீரையெல்லாம் இறைத்து விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும். ஊற்றே நரம்புச் சிலந்தியை உண்டாக்கக் கூடியதாக இருந்தால், அந்த ஊற்றையே அடைத்துவிட்டு, வேறு புதுக்கேணி வெட்ட வேண்டும். இல்லை, நான் அந்த தண்ணீரைத்தான் குடிப்பேன் என்றால் அந்த நோய்க்கு ஆட்பட்டாக வேண்டுமே தவிர, அதிலிருந்து தப்ப வழியில்லை. நான் அந்த ஊற்றை அழிக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருக்கின்றேன். சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், சாதி, பழக்க வழக்கம், சாத்திரங்கள், கடவுள், கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல் - எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்த மேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவுப் பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது. சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும், பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்கு கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால், அக்கடவுளைப் பஞ்சமனும், சூத்திரனும் தொழலாமா?

அறிவியல்

[தொகு]
  • கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள். உணவுத் துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும். அரிசிக்குப் பதிலாக வேறு எதாவது இரசாயனப் பொருள்களை கண்டுபிடித்தே ஆகவேண்டும். நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயங்க வைத்தோம். பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற்கேற்றார்போல் மாற்றி ஓடச் செய்கிறோம். அதுபோல மனித எந்திரத்தையும் பெருந்தீனி மூலம் ஓடச் செய்யாமல், மின்சாரம் போன்ற சக்திப் பொருள் ஒன்று கண்டுபிடித்து [சிறிய உணவு] அதைக்கொண்டே மனிதனை இயக்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்யவேண்டும். மக்கள் பிறப்புக் கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழமுடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்குமேல் பெறமாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும்-பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும். கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும். ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயிலவேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறித்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும். நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமறியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ, அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும். படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் – தொல்லை கொடுக்காதவனாய் – நாணயமாய் வாழ்வதற்கு.[11]

இலக்கியம்

[தொகு]
  • இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? – என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல், மனித சமுதாய வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

பொருளாதாரம்

[தொகு]
  • செல்வம்(பணம்) தேட வேண்டும் என்று கருதி, அதில் இறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக்கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டி. இத்தியாதி போட்டிகள் அவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு விடுகின்றன. வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக்கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பார்கள். இன்றைய அமைப்பில் கையில் காசில்லா விட்டால் மனிதன் பெரிதும் யோக்கியனாகக் கூட நடந்து கொள்ளமுடியாது. மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன், அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும்தான் காரணம். ஆசையால், நல்ல முறையில் கொஞ்சம் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்து கொள்ளவோ வேண்டியதில்லை.[11]

திருமணம்

[தொகு]
  • மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப் போல் நடந்து கொள்ளவேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள், அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற என்னமில்லாது பழக வேண்டும். மணமக்கள், வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையராக இருக்க வேண்டும். நம்மால் நன்மை செய்ய இயலாவிட்டாலும், கேடாவது ஏற்படாத மாதிரி நடந்துகொள்ள வேண்டும். நல்வாழ்வும், நாணயமான வாழ்வும் பெறக் குழந்தைப் பேற்றைக் குறைத்துக் கொண்டு, வாழ்க்கை வசதிகளை நல்லவண்ணம் அமைத்துக் கொள்ளவேண்டும். கல்யாணம், திருமணம் என்கிற பெயர்களைக்கூட நான் ஒப்புக்கொள்வதில்லை. வாழ்க்கை துணை ஒப்பந்தம் என்றுதான் நான் சொல்வது. ஆகையால், ஒப்பந்தத்துக்கு உறுதிமொழியும், அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்?[11]

சாதி ஒழிப்பு

[தொகு]
  • சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள். நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால், அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப் போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதி நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டும். மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப் படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் – நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.[11]

பல்துறை

[தொகு]
  • என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்துவிட்டு கடனாளியாக மாறிப் பிறரை ஏமற்றுவது இழுக்கு; இதைவிட விபச்சாரம் என்பது இழிவானதல்ல. விபச்சாரத்தைவிட மோசமான பண்பு – அதிகச் செலவு செய்து அதற்காகக் கடன் வாங்கித் திண்டாடுவதுதான். 30 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி; 1,000 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி என்றால் என்ன அர்த்தம்? தன்னை அடக்காதவனுக்குத்தான் தரித்திரம் உண்டாகும். தன்னை அடக்காதவள்தான் விபச்சாரி. நம் மக்கள் அறிவு பெறவேண்டுமானால் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும். உலகில் பத்திரிகைகள் இரண்டு விதமானவை. தமது வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால், மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை ஒன்று. மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்பவேண்டுமே என்று பொதுநலம் கருதுபவர்களால், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை மற்றொன்று. ஒவ்வொரு மனிதனின் இலட்சியமும், தான் மனிதனாகப் பிறந்தது மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்காக என்றிருக்க வேண்டும். புதுமைக்கு மக்களை திருப்ப வேண்டும் புதுமைகளை மக்கள் உணரும் படிச் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் பழமையை விட்டுக் காலத்திற்கேற்ப முன்னோக்கிச் செல்லவேண்டும். அப்போது தான் நாமும் மற்ற உலக மக்களைப்போல் சிறப்பாக வாழமுடியும்.[11]

தொழில்கள் குறித்து

[தொகு]
  • விவசாயம் யார் செய்வது, யார் பூமியைப் பயிர் செய்வது என்று கேட்கப்படலாம். இது, கக்கூசு எடுக்கும் சக்கிலி, பறையர், ஒட்டர் என்பவர்களுக்குப் படிப்புக் கொடுத்து மேன்மக்களாக ஆக்கிவிட்டால், கக்கூசு எடுப்பவர்கள் யார் என்று கேட்கப்படுவது போலக் கேட்கப்படுவதாகும். அதற்கு எனது பதில், 'அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்கு போட்டுக் கொண்டு செய்ய வேண்டும் என்பதுதான்.

கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன்மிக்க அற்பமாகவும், வாழ்வில் இழிவாகவும் இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டின் முன்னேற்றமாகும்.[23]

வாரிசு

[தொகு]
  • எனக்குப் பிறகு யார் என்று கேட்கிறார்கள். ஏசுவுக்குப் பிறகு அவருடைய பைபிள்தான். நபிக்குப் பிறகு. அவருடைய குரான்தான். அதுபோல, எனக்குப் பிறகு, என் எழுத்து, என் நூற்கள் இவைகள்தான்.— (1-1-1963)[24]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளேயே சுயமரியாதையாகும். அக்குழந்தைத் தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன். -திரு. வி. கலியாணசுந்தரனார்[25]
  • ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன: (1) அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். (2) அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்படவேண்டும். (3) அவர் கடுமையாக வையவும் சபிக்கவும் படவேண்டும். இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர் நமது பெரியாராவர். —டி. கே. சி. (20-7-1928)[26]

சான்றுகள்

[தொகு]
  1. ஈ.வெ.ரா சிந்தனைகள் புத்தகம் இரண்டு, முதல் பதிப்பு, பக்கம் 1260
  2. விடுதலை தலையங்கம் 2-10-1952
  3. விடுதலை 26-11-1970)
  4. ஈ.வெ.ரா சிந்தனைகள் புத்தகம் இரண்டு, முதல் பதிப்பு, பக்கம் 1229
  5. ஈ.வெ.ரா சிந்தனைகள் புத்தகம் இரண்டு, முதல் பதிப்பு, பக்கம் 1230
  6. 6.000 6.001 6.002 6.003 6.004 6.005 6.006 6.007 6.008 6.009 6.010 6.011 6.012 6.013 6.014 6.015 6.016 6.017 6.018 6.019 6.020 6.021 6.022 6.023 6.024 6.025 6.026 6.027 6.028 6.029 6.030 6.031 6.032 6.033 6.034 6.035 6.036 6.037 6.038 6.039 6.040 6.041 6.042 6.043 6.044 6.045 6.046 6.047 6.048 6.049 6.050 6.051 6.052 6.053 6.054 6.055 6.056 6.057 6.058 6.059 6.060 6.061 6.062 6.063 6.064 6.065 6.066 6.067 6.068 6.069 6.070 6.071 6.072 6.073 6.074 6.075 6.076 6.077 6.078 6.079 6.080 6.081 6.082 6.083 6.084 6.085 6.086 6.087 6.088 6.089 6.090 6.091 6.092 6.093 6.094 6.095 6.096 6.097 6.098 6.099 6.100 6.101 6.102 6.103 6.104 6.105 6.106 6.107 6.108 6.109 6.110 6.111 6.112 6.113 6.114 6.115 6.116 6.117 6.118 6.119 6.120 6.121 6.122 6.123 6.124 6.125 6.126 6.127 6.128 6.129 6.130 6.131 6.132 6.133 6.134 6.135 6.136 6.137 6.138 6.139 6.140 6.141 6.142 6.143 6.144 6.145 6.146 6.147 6.148 6.149 6.150 6.151 6.152 6.153 6.154 6.155 6.156 6.157 6.158 6.159 6.160 6.161 6.162 6.163 6.164 6.165 6.166 6.167 6.168 6.169 6.170 6.171 6.172 6.173 6.174 6.175 6.176 6.177 6.178 6.179 6.180 6.181 6.182 6.183 6.184 6.185 6.186 6.187 6.188 6.189 6.190 6.191 6.192 6.193 6.194 6.195 6.196 6.197 6.198 6.199 6.200 6.201 6.202 6.203 6.204 6.205 6.206 6.207 6.208 6.209 6.210 6.211 6.212 6.213 6.214 6.215 6.216 6.217 6.218 6.219 6.220 6.221 6.222 6.223 6.224 6.225 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  7. குடிஅரசு 14.9.1930
  8. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 5, தத்துவம் 2, பக்கம் 4186
  9. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுப்பாசிரியர் வே.ஆனைமுத்து, முதல் பதிப்பு, பக்கம் 1630
  10. பெண் ஏன் அடிமையானாள்?
  11. 11.00 11.01 11.02 11.03 11.04 11.05 11.06 11.07 11.08 11.09 11.10 11.11 11.12 11.13 11.14 11.15 "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு
  12. குடி அரசு 18.07.1937
  13. குடி அரசு 09-01-1927
  14. ஈ.வெ.ரா சிந்தனைகள் புத்தகம் இரண்டு, முதல் பதிப்பு, பக்கம் 1258
  15. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5, தத்துவம் 2, பக்கம் 4200
  16. 16.0 16.1 பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5, தத்துவம் 2, பக்கம் 4191
  17. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5 தத்துவம் 2, பக்கம் 4128
  18. விடுதலை தலையங்கம் 21-10-1952
  19. குடி அரசு 9-12-1944
  20. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5 தத்துவம் 2, பக்கம் 4134
  21. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5, தத்துவம் 2, பக்கம் 4194
  22. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5, தத்துவம் 2, பக்கம் 4222
  23. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுப்பாசிரியர் வே.ஆனைமுத்து, முதல் பதிப்பு, பக்கம் 898
  24. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  25. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  26. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.

பிற இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஈ._வெ._இராமசாமி&oldid=38257" இலிருந்து மீள்விக்கப்பட்டது