உள்ளடக்கத்துக்குச் செல்

திரு. வி. கலியாணசுந்தரனார்

விக்கிமேற்கோள் இலிருந்து
திரு. வி. க அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் தலை

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953[1]) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

நாடு

[தொகு]
 • நாடு என்பது ஓர் எல்லைக்கு உட்பட்ட வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. நிலத்தின் இயற்கைத் தன்மையினினின்றும் முகிழ்ந்த வாழ்க்கை. அரசு, கலவி, தொழில், நாகரிகம் முதலியனவும் சேர்ந்த ஒன்றே நாடு என்பது.[2]

மொழி

[தொகு]
 • நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது.[2]
 • நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. அம்மொழியை வஞ்சிப்பது பிறந்த நாட்டை வஞ்சிப்பதாகும்.[2]
 • ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும்.[2]

கல்வி

[தொகு]
 • மக்கள் உடலுக்கு உணவு எத்தகையதோ அத்தகைத்து மகள் அறிவிற்குக் கல்வி. மனிதன் அறியாமையைக் கல்வி அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையில் செலுத்தவல்லது கல்வி.[2]
 • கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமன்று. பட்டம் பதவிகளைக் குறிக்கொண்டு படித்தலும் கல்வியாகாது. கல்வி என்பது அறியாமையை நீக்கி அறிவை விளங்கச் செய்வது.[2]
 • நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்றலே சிறப்பு. அதுவே இயற்கை முறை.[2]

இளமைப் பருவம்

[தொகு]
 • இளமைப் பருவம் கல்விக்கெனக் கொடுக்கப்படுவது. அப்பருவத்தை வேறு வழியில் செலவழிப்பது இயற்கைக்கு மாறுபட்டு நடப்பதாகும். இளமையை மாறுபட்ட வழியில் கழிப்பவன் வாழ்வு முற்றிலும் இடர்ப்பட்டுக்கொண்டே போகும்.[2]
 • எதையும் இளமையிலேயே பயிலல் வேண்டும். வாழ்வெனும் மரத்துக்கு இளமைப் பயிற்சி வேர் போன்றது. ஒருவனது வாழ்வுக்கு இளமை அடிப்படை.[2]
 • சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளேயே சுயமரியாதையாகும். அக்குழந்தைத் தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.[3]

மாணாக்கர்

[தொகு]
 • மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.[2]
 • மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை.[2]
 • ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும்.
 • பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன்.[2]

சுற்றுலா

[தொகு]
 • மாணாக்கர் ஓய்ந்த வேளைகளில்தரை வழியாலோ கடல் வழியாலோ சென்று பல பகுதிகளைப் பார்த்தல் வேண்டும்; பல மக்களோடு பழகல் வேண்டும்; உலக இயல்களை நன்கு தெளிதல் வேண்டும். இச்சொலவால் அவர் இயற்கைக் கல்வியறிவு பெறுதல் கூடும். மாணாக்கர் வாழ்விற்கு இச் செலவு மிக இன்றியமையாதது.[2]

உணவு

[தொகு]
 • உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசித் தோற்றம் இல்லாதபோது எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது.[2]
 • மீதூண் கொள்வது அறியாமை. நோய்க்கும் அகால மரணத்துக்கும் அடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும்; பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும்.[2]

உடை

[தொகு]
 • உடையிலும் மனிதன் எளிய உடை அணியவே பயிறல் வேண்டும். சுமை சுமையாக உடையணிவது தவறு. அச்சுமை உடல் வளத்தை நாளடைவில் குலைத்துவிடும். நாட்டின் இயற்கை வளத்துக்கேற்ற உடைதரித்தல் அறிவுடமை.[2]
 • எளிய உணவும் எளிய உடையும் மனித வாழ்வை பண்படுத்தும் இயல்பின.[2]

உடற்பயிற்சி

[தொகு]
 • உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது.[2]
 • வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும்.[2]

குளித்தல்

[தொகு]
 • ஊற்று நீரில் நாடோறுங் காலையில் திலை முழுகல் வேண்டும். மூழ்குதற்குத் தண்ணீரே சால்புடைத்து. நரம்புகட்குத் திண்மையும் உரமும் ஊட்டும் நீர்மை தண்ணீருக்குண்டு. நறுந்தண்ணீர் கிடையாவிடத்து வெந்நீரில் மூழ்குவது நலம். வெந்ரையும் தண்ணீரையும் கலந்து முழ்கல் நலன் பயப்பதாகாது.[2]

உறக்கம்

[தொகு]
 • உறக்கம் நல்லுடலுக்கு அறிகுறி. அதன் குலைவு நோயுடலுக்கு அறிகுறி. பகல் விழிப்பும் இரவில் உறக்கமும் வாழ்க்கைக்குத் தேவை. முகத்தை மூடி உறங்குதல் கூடாது.[2]

பெண்நலன்

[தொகு]
 • பெண் தாயாகலான் பெண்ணலன் பெரிதும் ஓம்பப்பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டுக்கு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்.[2]
 • ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அல்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும்.[2]
 • பிறப்பில் தீண்டமை கருதுவது கொடுமை; வண்கண்; அநாகரிகம்.[2]
 • தீண்டாமை கொண்ட நாடு பொலிவிழத்தல் திண்ணம்.[2]
 • சத்தென்னும் செம்பொருளை உன்னுதற்கும் போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்துவிட்டது. ஒரு கூட்டத்தார் இங்கும், மற்றாெரு கூட்டத்தார் உங்கும், இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபட வேண்டுமாம். கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு? கடவுளை மரம், செடி, கொடி, பாம்பு, சிலந்தி, யானை முதலியன பூசித்ததாகப் புராணங்கள் புகல்கின்றன. கடவுளின் உருவங்களின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. பல்லிகள் ஓடுகின்றன. இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமையிருக்கும்போது, ஆறறிவுடைய மனிதனுக்கா அவ்வுரிமையில்லை. சாதியார் கொடுமை என்னே! என்னே! (7 - 5 - 1927) (மாயவரம் சமரச சன்மார்க்க மாநாட்டில்)[4]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
 • பெரியார் திரு. வி. க. அவர்கள், மற்றவர்கள் அவரைப் பார்த்து நடந்துகொள்ளவேண்டிய பல பண்புகள் உடையவர். அவர் வாழ்ந்த விததமும் அவர் ஆற்றிய தொண்டும் நாம் பின்பற்றக்கூடியதான முறையில் அமைந்துள்ளன. ஈ. வெ. இராமசாமி[2]
 • என்னை பல நூல்கள் எழுதிய ஆசிரியன் என்று போற்றிப் பேசினார்கள். ஆனால், நூலாசிரியன் என்பதைவிட திரு.வி.க.வின் சிஷ்யன் என்பதால்தான் எனக்குப் பெருமை. திரு.வி.க பிளேட்டோ; ஆனால் நான் அரிஸ்டாட்டில் அல்லன். - வெ. சாமிநாத சர்மா [5]

சான்றுகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. {cite news|url=http://www.hinduonnet.com/2003/09/19/stories/2003091900680900.htm |title= செப்டம்பர் 19, 1953: திரு. வி. க.வின் மறைவு| publisher= த இந்து | date= செப்டம்பர் 19, 2003, மூலப்பதிப்பு செப். 19, 1953}}
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
 3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 5. வெ. சாமிநாத சர்மா (2006 செப்டம்பர் 19). எனது பர்மா வழி நடைப் பயணம். சென்னை: மகாகவி பதிப்பகம். pp. 179.