இராசகோபாலாச்சாரி
Jump to navigation
Jump to search

இராசகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
- வழக்கறிஞர் தொழிலில் இருந்து விழகிய பொழுது கூறியது.[1]
- அரசு லாட்டரி விற்பனையை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது. ஒரு மாநில அரசு வருவாயைக் கருதி லாட்டரியை நடத்துமானால், சூதாட்ட நிலையங்களை நடத்துவோரைத் தண்டிக்கும் தார்மீக உரிமை அதற்கு எப்படி இருக்க முடியும்?
- அண்ணாவின் அரசு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டபோது கூறியது.
- சுற்றிலும் சட்டம் கட்டிய மேஜையின் வழவழப்பான பலகை மீது, பந்துகளை ஒரு கம்பினல் இடித்து, ஒன்றோடொன்று மோதவிட்டுக் குழிகளில் விழச்செய்யும் பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கும், கோலியாட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை. பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கான மேஜை, முதலிய உபகாரணங்களுக்கு ரூ 50 ஆயிரம் போல செலவு செய்வதைவிட, நாம் ஏன் கோலி ஆடக்கூடாது? விலை மலிவாகவும் பழங்காலத்தைச் சேர்ந்ததாகவும் உள்ள எதையும் மட்டமாக நினைக்கும் மனப்பான்மை நமக்கு இருக்கிறது.[2]
- எனக்குப் பிராமணர்களும் ஒன்றுதான், வேளாளரும் ஒன்றுதான்; இருவரும் தள்ளும் மற்ற ஜாதியாரும் ஒன்று தான். ‘இவன் பேச்சோடு நில்லாதவன், செயலிலும் ஜாதி வித்தியாசத்தை மதியாதவன், அதிலும் பகிரங்க மூர்க்கன். நல்ல ஆசாரிய வம்சத்தில் பிறந்து குலத்தைக் கெடுத்தவன்” என்று என்னைக் குலத்தார் நீக்கி வெகு நாளாயிற்று.[2]
- 'முதலில் அவர் செய்யட்டும், பிற்பாடு நாம் செய்ய லாம்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் உங்களால் ஆனதை உடனே செய்ய வேண்டும். இன்றைய தினத்திலிருந்து நீங்கள் அனாவசியமாகத் தூங்காமல் ஒவ்வொரு நாளும் 'நான் இந்த தேச விடுதலைக்காக என்ன செய்தேன்' என்று உங்கள் மனதைத் தொட்டுப் பாருங்கள்.(1930)[2]
- என் வாழ்நாளில் நான் எழுதியது எல்லாம் தமிழில் தான். வியாசர் விருந்தும், கண்ணன் காட்டிய வழியும், சக்கரவர்த்தி திருமகனும், உபநிஷதப் பலகணியும், பல வருடங்களுக்கு முன்பே கதைகளும் தமிழில்தான் எழுதினேன். எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக எழுத வராது. விஞ்ஞான சொற்கள் அடங்கிய புத்தகமும் தமிழில்தான் எழுதினேன். தமிழிலேயே மூழ்கி வளர்ந்தவனை-என்னைப் பார்த்து தமிழுக்கு விரோதி எதிரி என்பது மோசடி-முழுப்பொய்-கலியுகப்புளுகு. (4-7-1965)[3]
- மக்களுக்குப் பாட்டைப் போல உற்சாக மூட்டுவது வேறொன்றுமில்லை. எனக்கு மட்டும் சுப்புலட்சுமியைப் போல பாட வந்தால், அதோடு எனக்கு இருப்பதாக நீங்கள் கூறும் குணங்களுமிருந்தால், நான் உலகத்தையே ஆளுவேன்.— (1947) (எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவில்)[4]
- அரும்பெரும் மனிதர்கள் திடீரென்று தோன்றி விடுவதில்லை. அந்தந்தப் பருவங்கள் அந்தந்தக் காலத்துக்குத்தகுதியான பிரத்தியேகமான மலர்களை உண்டாக்குவது போல, சமுதாயத்தில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப மகா புருஷர்கள் உருவாக்கப்படுகின்றனர்.[5]
- குடிப்பதற்குக் குழாய்த் தண்ணீர், குளிப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர், துணி துவைப்பதற்குக் குளத்துத் தண்ணீர்-இப்படிச் சிலர் உபயோகிப்பார்கள். ஆனால், காவிரி நீர், குளிக்க, குடிக்க, துணி துவைக்க, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்குமே பயன்படும். காவிரி நீர் மாதிரி நமது எழுத்தும் இருக்க வேண்டும். அதாவது எளிமையாக, தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருக்கவேண்டும். நம் தமிழைப் புரிந்து கொள்ள யாரும் சிரமப் படக்கூடாது. கருத்தைப் புரிந்து கொள்வது அவரவர் ஈடுபாட்டைப் பொறுத்தது.[6]
- என்னைப் பொறுத்த வரையில், என்னிடமிருந்த அளவு, என்னால் முடிந்த வரையில், சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்தேன். என் தியாகம் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். என்னிடம் இருந்ததும், என்னல் முடிந்ததும் அவ்வளவுதான். அதைச் செய்துவிட்டேன்.[6]
- நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன். —இராஜாஜி (5-3.1962)[6]
- * தமிழ் நாட்டில் தமிழ் சங்கீதம் வளர்ச்சியடைய வேண்டுமென்ற பேரவா கொண்டவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாகத் தமிழ்ப் பாடல்கள் பாடுவதைப் பற்றி ஓர் விவாதம் நடந்து வருகிறது. சங்கீதத்திற்குப் பாஷை அவசியம் இல்லையென்று கூறப்படுகிறது. அப்படியானல் இப்பொழுது போற்றப்பட்டு வரும் மகான் தியாகராஜாவின் கீர்த்தனங்களுக்கு அவசியமேயில்லையே! — (30.12.1942) (காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.)[7]
பொன் மொழிகள்[தொகு]
- நம்முடைய தேகமும், உள்ளமும் ஆண்டவனுடைய கோயில். அதைச் சுத்தமாக வைத்துக் காப்பது நம் கடமை.
- எவ்வளவு கல்வியும் செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை.
- தீண்டாமை என்பது நமது சமூகத்தில் ஒரு மாசு. தீண்டாமை ஒரு விஷப் பாம்பு. அதைக் கொன்றாக வேண்டும்.
- பள்ளிக்கூடங்கள் தேசத்தில் எத்தனை இருந்தாலும், பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடேயாகும்.
- வாழ்கையில் தைரியமாக இருப்பதைவிட மகிழ்ச்சி அளிக்க்கூடிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும்!
- ஞானமும், பக்தியும் அனைவருக்கும் உரித்தான பெருஞ்செல்வம்.
- கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது. சாந்தமே முகத்திற்கு அழகு தருகிறது.
- ஒழுக்கத்துடனும், நாணயத்துடனும் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், எல்லோருக்கும் நன்மை விளையும்.
- நம்முடைய சமூகம் சுதந்திர வாழ்க்கையை அடைந்துவிட்டது. சுதந்திரத்துடன் சுகமும் பெறவேண்டுமானால், மக்கள் அற வழியில் நிற்கவேண்டும்.[8]
நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ தமிழருவி மணியன் (25 டிசம்பர் 2013). ராஜாஜி என்ற ராஜரிஷி. தி இந்து. Retrieved on 6 சூலை 2016.
- ↑ 2.0 2.1 2.2 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 8. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ 6.0 6.1 6.2 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ கிருட்டிணகிரி மாவட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பார்வையாளர்களுக்கு வழங்கும் இராசாசி வாழ்கை குறிப்பு ஏட்டில் உள்ள அவரது பொன் மொழிகள். வெளியீடு இயக்குநர், செய்தி- மக்கள் தொடர்பு துறை, சுற்றுலாதுறை தமிழ்நாடு அரசு.(நவம்பர் 1986 இல் அச்சிடப்பட்டது)