ஜார்ஜ் எல். ஹார்ட்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜார்ஜ் எல். ஹார்ட் (George Luzerne Hart, III; பிறப்பு 1945) கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவரே மூல காரணர் ஆவார். தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகத்துக்கு உணர்த்தியவர்களில் இவர் முக்கியமானவர். பிறப்பால் இவர் ஓர் ஆங்கிலேயர் ஆவார். ஹார்ட் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். அத்துடன் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு இலத்தீன், கிரேக்கம், உருசியம், செருமானியம், பிரெஞ்சு போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • புறநானூறு சொல்லும் செய்திகளைப் பயின்றே வாழ்நாள் முழுவதும் கழித்துவிடலாம். அப்போதும் புதிய புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.[1]
  • பழந்தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிப் பேசும் போதே தமிழர்கள் அதை இலட்சிய உலகம் போலப் பேசுகின்றார்கள். அந்தக் கலாச்சாரம் செழுமையானதாகவும், சுவையானதாகவும் இருந்தது. அதே நேரத்தில் வன்முறை மிகுந்ததாக இருந்தது. சங்கப்பாடல்கள் ஒரு வீரியமான சமுதாயத்தை சித்தரிக்கின்றன. பாடல்களில் ஒரு சக்தி மிளிர்கிறது. வடமொழி கலாச்சாரம் வருவதற்கு முந்தையது அது. அம்மக்கள் குடிப்பதைப் பற்றியோ, அசைவம் உண்பதைப் பற்றியோக் குறைத்து எண்ணவில்லை. ஆனால் தெய்வ நம்பிக்கை இருந்தது. படை மறமும் மிகுந்திருந்தது. இப்படி சுவையானதொரு வாழ்வை சங்க இலக்கியம் கண்முன் நிறுத்துகிறது. வடமொழியில் இதைப் பார்க்க முடியவில்லை.[1]
  • புறநானூற்றில் அரசரைப் பற்றி இருக்கும். அப்படி அரசனைப் பாடுகையில் சமூகத்தில் அடிமட்டதில் இருக்கும் பாணர், கினையர், விறலியர் போன்றோரின் வாழ்க்கையைக் கூறும். உண்மையான இந்தியா புறநானூறு காட்டுவது தான். கிராமங்களில் மக்கள் வாழும் முறையை அது காட்டுகிறது. பண்டிதர்களோ வடமொழி இலக்கியங்களைப் படித்துவிட்டு மேல்தட்டு வாழ்க்கை முறையை பழங்கால இந்திய வாழ்க்கை முறையாக காட்டிவிடுகிறார்கள். அதற்கு சரியான மாற்று தமிழில்தான் உள்ளது.[1]
  • இந்தியாவின் கிரேக்கர்கள் தமிழர்கள் என்பது ஓரளவு உண்மை. கிரேக்க இலகியம் மகத்தானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தின் விரிவு அதற்குக் கிடையாது.[1]
  • கம்ப இராமாயணம் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல. கம்பன் வடமொழிக் கதையை எடுத்துக் கொண்டு மறு படைப்பு செய்திருக்கிறான். கம்பனுடைய இராமாயணம் அறத்துக்கும் மறத்துக்குமான போராட்டத்தை சித்தரிக்கிறது.[1]
  • கடமைக்கும் நியாயத்துக்குமான போராட்டத்தில் பகவத் கீதை ஒரு பழைய வட இந்திய வழியைத் தருகிறது. ஒருவன் கடமையைச் செய்ய வேண்டும் பலனை கடவுளுக்கு அற்பணித்து விடவேண்டுமென்று.. ஆனால் தென்னிந்தியத் (தமிழகம்) தீர்வு அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒருவன் கடமையைச் செய்ய வேண்டும், அது நெறி வழுவாமல் இருக்கவேண்டும் என்பதாகும்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜார்ஜ்_எல்._ஹார்ட்&oldid=37236" இருந்து மீள்விக்கப்பட்டது