மு. வரதராசன்
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவரது கருத்துகள்
[தொகு]- முப்பது நாற்பது ஆண்டுகளாகத் தமிழன் ஓயாமல் மேடைகளில் வறட்டுத் தவளைகளைப் போல் கத்தி ஒரு பயனும் காணவில்லை. கேட்டவர்கள் மண்டபம் எதிரொலிக்கக் கை தட்டியும் ஒரு பயனும் காணவில்லை. வேறே பயன் காணாவிட்டாலும் கவலை இல்லை, ஒற்றுமையாவது ஏற்பட்டாலும் மகிழலாம். அதுவும் வர வரக் குறைந்து போகிறது. ஒரு மாநாடு என்றால் இருந்த ஒற்றுமையில் ஒரு பிளவு என்று பொருள்; ஓர் ஆண்டுவிழாஎன்றால் ஒற்றுமையாக இருந்த அறிஞர்களுக்குள் பிரிவு என்று பொருள். (1960)[1]
- வாழ்வின் அடிப்படைகளான நல்ல பண்புகளாகிய அன்பு, தொண்டு, அருள், நீதி முதலியவை வாழ வேண்டுமானால் சட்டம் வேண்டியது தான்.
- உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்! — (1962)[2]
- சில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது; எண்ணச் செய்யவும் முடியாது. படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும். தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண முடியாது. அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச் செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும். இன்னும் சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும்போது தொல்லையாகவும் இருக்கும்; தொடர்ந்து படிக்கப் படிக்க, இன்பம் பயக்கும்; வாழ்நாளில் மறக்க முடியாத துணையாக இருக்கும்; வழிகாட்டியாக நிற்கும்; மனச் சான்றைப் பண்படுத்தும்; வழுக்கி விழும் போதெல்லாம் காப்பாற்ற முன்வரும்; நெறி தவறும் போதெல்லாம் இடித்துரைத்துத் திருத்தும். வாழ்நாளில் உயிரின் உணர்வு போல் கலந்து விடும் ஆற்றல் அத்தகைய நூல்களுக்கு உண்டு. [3]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ டாக்டர் மு. வரதராசன், "இலக்கிய ஆராய்ச்சி" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: நல்ல நூல், பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999