காமராஜர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
காமராஜர் உருவப் படம் கொண்ட அஞ்சல் தலை

காமராஜர் (சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.

இவரது கருத்துகள்[தொகு]

 • சிலர் ஐந்தாறு வேஷ்டி புடவைகளை வாங்கி, பீரோ நிறைய அடுக்கி வைத்துக் கொண்டு, யாராவது விருந்தினர்கள் வந்தால் திறந்து காட்டுவார்கள். அவ்வளவுதானே தவிர வேறு பிரயோசனமில்லை; பணம் முடங்கி வீணாகப் போகாமல் வெளியே வந்து நாட்டின் செல்வத்தை மேலும் வளர்க்க வேண்டும்.[1]
 • பிரசங்கம் செய்வது எனக்கு எப்பொழுதும் பிடிக்காது. அக்காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி, ஆனாலும் பிரசங்கம் செய்யாமலே இருக்கமுடியவில்லை. தனியே பிரசாரம் செய்யப் போன போதோ, அல்லது பிறர் வற்புறுத்தலினாலோ பேச வேண்டியிருக்கிறது. அப்படி நான் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தது எளிங்க நாய்க்கன்பட்டி என்ற கிராமத்தில் அவ்வூர் விருதுநகருக்குச் சுமார் 5 மைலில் உள்ளது. சுமார் 200 வீடுகள் கொண்ட சிறு கிராமம். சுப்பராய பந்துலு என்ற மற்ருெரு காங்கிரஸ் ஊழியர் என்னுடன் வந்திருந்தார். கூட்டம் 500 பேர் இருக்கும். அதாவது அந்தக் கிராமத்தார் எல்லோருமே வந்திருந்தார்கள்.[2]
 • புரட்சி வரும் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை தான், ஆட்சியிலிருப்பவர்கள், வாயளவில் சோஷலிசம் என்றும் முற்போக்கு என்றும் பேசிக்கொண்டேயிருந்தால்—காரியமாற்றாமல் காலங் கடத்தினால் புரட்சி வரத்தான் செய்யும். — (17-10-1970)[3]

பஞ்சாயத்து[தொகு]

 • “..... நம் கிராம மக்களுடைய வாழ்க்கைத் தரம் நன்றாக வளர்வதற்காக அமைக்கப்பட்ட ஸ்தாபனம் பஞ்சாயத்து. அதனுடைய முன்னேற்றம் தான் நம்முடைய முன்னேற்றம் என்று கருத வேண்டும். அந்த மனப்பான்மைதான் நமக்கு ஏற்பட வேண்டும். மேற்பார்வை செய்யும் அதிகாரம், ஜனநாயகத்தில் இருந்துதான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. உதாரணமாக ஒரு கோர்ட் இருக்கிறது என்று சொன்னால், முன்சீப் கோர்ட், அதற்குமேல் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று மேலே இருக்கிறது அல்லவா? அது மாதிரித்தான் மேல் அதிகாரியும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அதனால் மேற்பார்வை அதிகாரிகள் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் மனிதர்கள்தானே. அவர்களும் தப்புகள் செய்யலாம். இருந்தாலும் ஜனநாயகத்தில் தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் கடமை......” - 1962[4]

சர்வோதயக் கல்வி[தொகு]

 • ஆதாரக் கல்வி என்றால் எதோ நூல் நூற்பது, காய்கறித் தோட்டம் போடுவது என்று நினைக்க வேண்டாம். அவைகளெல்லாம் குழந்தைகளைத் தொழிலிலே பழக்குவதற்காக ஏற்பட்டவைகளே தவிர வேறில்லை. [1]

தன்மைப்பற்றி[தொகு]

 • நான் கல்லூரியில் படிக்காதவன். பூகோளம் தெரியாதவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். கல்லூரி போனவன் என்றோ, எனக்குப் பூகோளம் தெரியும் என்றோ, நான் எப்போதும் சொன்னதில்லை. ஆனாலும் எனக்கும் பூகோளம் தெரியும். தமிழ் நாட்டில் உள்ள ஊர்களையெல்லாம் பெரும்பாலும் அறிவேன். அவற்றிற்குப் போகிற வழி, இடையில் வரும் ஆறுகள், முக்கிய ஏரிகள், அவற்றின் உபயோகம் பற்றி எனக்குத் தெரியும். மற்றும் எந்தெந்த ஊரில் எப்படி எப்படி ஜனங்களுக்கு ஜீவனம் நடக்கிறது, எந்தத் தொழில் பிரதானமாக இருக்கிறது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன். வட இந்தியாவிலும் பல இடங்களைப் பார்த்துத் தெரிந்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் பூகோளம் இல்லை, கோடுகள் இழுத்துப் படம் போட்ட புத்தகந்தான் பூகோளம் என்றால், அது எனக்குத் தெரியாததாகவே இருக்கட்டும். (1959-ல் சென்னைப் புளியந்தோப்பு குட்டித் தம்பிரான் தெரு பொதுக் கூட்டத்தில்)[1]
 • நமக்குத் தலைவலி என்றால் டாக்டர் வந்து மருத்து கொடுப்பார். தலைவலியை வாங்கிக் கொள்ளமாட்டார். அதைப்போல, போர்க்கருவி வரும். ஆனல் போராடுவது நாம்தான்,— (9.12. 1962)[5]

நபர்குறித்த மேற்கோள்கள்[தொகு]

 • மக்களின் உணர்வைப் புரிந்தவர் காமராசர். எனவே அவருடைய திட்டம் நல்ல திட்டமாகத்தான் அமையும்.
  • -ஜவகர்லால் நேரு (1957 இல் மதிய உணவுத் திட்டத்தைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் சேர்க்க காமராசர் வேண்டுகோள் விடுத்தபோது, திட்டக்குழுவின் உயர் அலுவலர்களும், உறுப்பினர்களும் எதிர்த்தபோது கூறியது அவர்களிம் கூறியது)[6]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 4. முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம். 
 5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 6. பேராசிரியர் மு. நாகநாதன் (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். pp. 43-48. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=காமராஜர்&oldid=19011" இருந்து மீள்விக்கப்பட்டது