உள்ளடக்கத்துக்குச் செல்

ஜவகர்லால் நேரு

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

அதிகாரத்துவம்[தொகு]

 • சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது.[1]
 • அதிகாரத்தை வைத்திருப்பவர்களைக் கட்டாயப்படுத்தாவிட்டால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
  • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]

அரசியல்வாதி[தொகு]

 • அரசியல்வாதி எல்லா விசயங்களைப் பற்றியும் பேச விரும்புகிறார். அவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமான அறிவுள்ளவரைப்போல எப்பொழுதும் பாசாங்கு செய்கிறார்- ஜவகர்லால் நேரு[2]

இந்திய தேசிய காங்கிரஸ்[தொகு]

 • காங்கிரஸ் அரசியல் ஜனநாயகத்தை ஆதரிக்கிறது என்பதைத் தவிர விரிவாகப் பதிலளிக்க இயலாது. இதற்குமேல் எந்த முடிவும் செய்யப்படவில்லை. இன்று நிலவுகின்ற அமைப்பில் எவ்விதமான மாற்றத்தையும் செய்வதற்கு அது விரும்பவில்லை என்பது இதன் பெரும்படியான அர்த்தம்.
  • (நேரு அல்மாரா சிறையிலிருந்தபோது 1935 ஆகத்து 6ஆம் நாள் எழுதிய பாய் பரமானந்தும் சுயராஜ்யமும் என்ற கட்டுரையில்)[3]

இறுதி ஆசை[தொகு]

 • நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன்.[4]

உழைப்பு[தொகு]

 • முதியவர்கள் தமக்கு இன்னும் எஞ்சிய காலத்தை நினைத்துக்கொண்டு உழைக்கிறார்கள். இளைஞர்கள் ஊழிக்காலத்திற்கும் உழைக்கிறார்கள்.[1]

கடவுள்[தொகு]

 • நான் விஞ்ஞானக் கோயிலில் அறிவைத் தேடும் ஒரு பக்தன். வெறுமனே ஆன்மிகம் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டேன்
 • பசியால் பரிதவிக்கும் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கடவுள் என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு உணவு வேண்டும். இந்தியா பசியும் பட்டினியும் மலிந்த நாடு. இங்கு சோற்றுக்கே அல்லாடுகிற கோடானு கோடி மக்களிடம் சத்தியம் - கடவுள் - மறுவாழ்வு - அருட்செல்வம் - பற்றியெல்லாம் பேசுவது கேலிக்கூத்து. அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, நல்வாழ்வு போன்ற தேவைகளைத் தேடித் தர வேண்டியது நமது கடமை. விஞ்ஞான அறிவும் நவீன தொழில்நுட்பமுமே இவற்றைச் சாதிக்கும்.

கல்வி[தொகு]

 • இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது.
 • விஞ்ஞானத்தையும், வரலாற்று நூலையும் பிரித்துப் பேசக் கூடாது. தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த இரண்டையும் கற்க வேண்டும். — (11-10-1962)[5]
 • எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயார்.[6]

சமூகவுடைமை[தொகு]

 • உலகம் முழுவதிலும் மனித சமுதாய அமைப்பில் சோஷலிஸத் தத்துவம் படிப்படியாக ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை எவ்வளவு வேகத்தில் அடையலாம் என்பதிலும், முன்னேறிச் செல்வதற்குரிய வழி முறைகள் என்ன என்பதிலுமே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன.[7]
 • முதலாளித்துவ அமைப்பு முழுவதும் ஏதாவது ஒருவகையான செல்வம் ஈட்டும் ஆர்வமுள்ள சமூகத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோஷலிஸ சமுதாயம் செல்வம் சேர்க்கும் இந்த ஆர்வத்தைக் கைவிட முயற்சி செய்ய வேண்டும். இதற்குப் பதிலாகக் கூட்டுறவை மேற்கொள்ள வேண்டும்.[7]

சிலை[தொகு]

 • இப்பொழுது மக்கள், எங்கும் சிலைகளையும் படங்களையும் வைக்கிறார்கள், அந்த மாதிரி ஆசை தோன்றுமானல் இந்திய விவசாயிகளின் சிலையை வையுங்கள்.(17-11-1960)[8]

சிறைச்சாலை[தொகு]

 • நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்ற, சிறையில் அடைக்கப்படுகின்ற நபர்கள் பிழைத்துக்கொண்டால், ஏன் உயிரோடு இருக்கிறேன் என வேதனைப்படுவார்கள். ஆனால் இலக்கியவாதி அந்த நாட்களை தன் வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையானவை என கருதுவான் - ஜவகர்லால் நேரு[9]

சீர்திருத்தம்[தொகு]

 • என்போதும் ஆபத்தில் சிக்காமல் வாழ்க்கை நடத்த விரும்புகிறவர்கள், சரணாகதியைக் கடவுளாக வழிபடுபவர்கள், உலகத்தை சீர்திருத்த முடியாது. உலகத்தின் இன்பங்களை, தனக்குரிய பங்கைக் காட்டிலும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மாற்றத்தின் தூதர்களாக முடியாது. அதிருப்தி உள்ளவர்கள், நாட்டில் நிலவுகின்ற தீமைகளையும் அநீதிகளையும் சகித்துக்கொள்ள மறுப்பவர்கள்தான் உலகத்தை மாற்றுகிறார்கள், முன்னேற்றுகிறார்கள்.
  • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]
 • மிக ஆழ்ந்து படிந்துவிட்ட சமூகத் தீமைகளை வெறும் சட்டத்தால் நீக்கிவிட முடியாது. என்றாலும், அப்போதுதான் எடுத்துக் கொண்ட நோக்கத்திற்கு ஒருவேகம் கிடைக்கும்.

திராவிடர்[தொகு]

 • ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னர், இந்தியா முழுதும் பரவியிருந்தவர்கள் திராவிடர்கள். அவர்கள் எகிப்து, மெசபடோமியா நாடுகளோடு வணிகம் செய்து வாழ்ந்த பழைய நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள்.[11]

தலைமைத்துவம்[தொகு]

 • தீர்க்க தரிசியாய் இருப்பவர்கள் தமக்கு உண்மை எனத் தோன்றியதைக் கடைசி வரையில் தாம் கல்லால் அடிக்கப்பட்டு சாக நேரிட்டாலும் கடைப்பிடிக்கலாம். ஆனால் நாட்டுத் தலைவனாக இருப்பவன் பல நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.[12]

நாடு[தொகு]

 • தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு, முழுக்க முழுக்கப் பிறரை நம்பியிருக்கும் ஒரு நாடு உதவாக்கரை நாடாகும். (27-11-1962)[13]
 • இந்தியா உலகத்துக்கெல்லாம் வழி காட்டியாய் இருக்க வேண்டும் என்று திரு. சுபாஷ் சந்திர போஸ் கூறியதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் பற்பல நாடுகளைப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரிதான் பேசிக் கொள்கிறார்கள், உலகம் பூராவும் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பும் பொருட்டுக் கடவுள் தங்களை அனுப்பியிருக்கிறார் என்று ஆங்கிலேயர் எண்ணிக் கொள்கிறார்கள். பிரான்சு, ரஷ்யா ஆகிய நாடுகளும் உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தாங்களே வழி காட்டியாய் இருக்கவேண்டுமென்று கூறிக் கொள்கின்றன. எந்த தேசமும் எந்த ஜாதியாரும் தாங்களே கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாது.
  • (20.5-1928) (பம்பாயில்)[14]

பர்தா[தொகு]

 • பர்தா முறை என்பது முந்தைய யுகத்தின் காட்டுமிராண்டித்தனமான எச்சம். பல இடங்களில் மதத்தின் பெயரால் பெண்கள் பர்தா முறையைக் கடைபிடிக்குமாறு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.
  • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]

பாரத மாதா[தொகு]

 • இந்த நாட்டை பாரத மாதா என்கிறோம். பாரத மாதா அழகான, ஆனாதரவான தாயாக, அவளுடைய கூந்தல் பூமியைத் தொடுவதாகச் சில ஓவியங்கலில் தீட்டியுள்ளனர். அது பாரத மாதவின் உண்மையான தோற்றமல்ல.[15]
 • பாரதமாத வாழ்க பாரதமாதா வாழ்க என்று நாம் கூறும் மாதா யார். ஓவியங்களில் தீட்டப்பட்டிருக்கின்ற கற்பனையான மாதா அல்ல, இந்திய நிலப்பரப்பும் அல்ல, இந்திய மக்களைத்தான் வாழ்க என்று சொல்லுகிறோம்.
  • (1936 செப்டம்பர் 16ஆம் நாள் எழுதிய ஒரு கட்டுரை)[15]

மதம்[தொகு]

 • மதமானது அநேகமாக எப்போதுமே குருட்டு நம்பிக்கை, பிற்போக்கு, வறட்டுக் கோட்பாடு, வெறியுணர்ச்சி, முடநம்பிக்கை, சுரண்டல், உடமையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது.[16]
 • மதமானது தெளிவான சிந்தனைக்கு எதிரியாக எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அது மாற்றப்பட முடியாத சில தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.[16]
 • மதத்திலிருந்துதான் எதேசதிகாரம் பிறக்கிறது, மக்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர்.
  • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]
 • மதம் மனிதனுடைய சுதந்திர தாகத்தைக் குறைக்கின்ற அபீனாக கடந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
  • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]

பஞ்சாயத்து[தொகு]

"ஸ்தல சுயாட்சி அல்லது பஞ்சாயத்துதான் அரசாங்கக் கட்டுக்கோப்பின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரம் உறுதியாக இல்லாவிடில் மேல் கட்டுமானம் பலவீனமாகிவிடும்...சோஷலிஸக் கூட்டுறவுச் சமுதாய அமைப்பிலே நாம் மேலிருந்து எதையும் திணிக்க முடியாது. வேரிலிருந்து, கிராமத்திலிருந்து, கிராமப் பஞ்சாயத்திலிருந்துதான் அது ஆரம்பமாக வேண்டும்..." - 1958[17]

பதவி[தொகு]

 • பதவிக்கு, மனிதனைக் கெடுக்கும் குணம் உண்டு என்பது எனக்குக் தெரியும். பதவியினால் நான் எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. (12-6-1963)[18]
 • எனக்குப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. பதவி வகிப்பது எனக்குப் பெருஞ்சுமையாகவே இருக்கிறது. இந்த நெருக்கடி நேரத்தில் நான் தொடர்ந்து பதவியில் இருப்பதின்மூலம் நாட்டுக்குச் சிறிது சேவை செய்ய முடியும் என நினைக்கின்றேன்.— (12 - 6 - 1963)[5]

யுத்தம்[தொகு]

 • அச்சமே முதன்மையான தீமையென்று நான் கருதுகிறேன். ஏனெனில், அச்சத்திலிருந்து பூசலும், பலாத்காரமும் தோன்றுகின்றன. பலாத்காரம் பயத்தின் விளைவு அது போலவேதான் பொய்யும்.[19]

ஜனநாயகம்[தொகு]

 • ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்களுக்குரிய பிரச்சினையன்று. [20]
 • பூரண அரசியல் ஜனநாயகம் என்பதன் பொருள் பொருளாதார ஜனநாயகமாக வளர்ச்சியடைதல் என்று பொதுவாகச் சொல்லி விடலாம்.[20]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 83-91. ISBN ISBN 978-81-237-3332-6. 
 2. ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 405
 3. ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 275-276
 4. திரு.வீரபாண்டியன் (2016 நவம்பர் 14). இந்தியாவின் ஆன்மாவில் கலந்த நேரு!. கட்டுரை. தி இந்து. Retrieved on 14 நவம்பர் 2016.
 5. 5.0 5.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 6. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 7. 7.0 7.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 202-203. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 8. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 8. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 9. ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 404
 10. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 11. தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்
 12. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 13. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 14. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 15. 15.0 15.1 அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 107-109. ISBN ISBN 978-81-237-3332-6. 
 16. 16.0 16.1 அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 225-230. ISBN ISBN 978-81-237-3332-6. 
 17. முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை (முதற் பதிப்பு: ஜனவரி, 1967 ed.). சென்னை: ஸ்டார் பிரசுரம். 
 18. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 20. 20.0 20.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 179. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜவகர்லால்_நேரு&oldid=38261" இலிருந்து மீள்விக்கப்பட்டது