உள்ளடக்கத்துக்குச் செல்

பரிவு

விக்கிமேற்கோள் இலிருந்து

பரிவு அல்லது அனுதாபம் (sympathy) என்பது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 • எதை நான் இதய பூர்வமாக நம்புகிறேனே. அதையே வேறொரு ஆன்மாவும் நம்புமேல் அப்பொழுது நம்பிக்கை அளவு கடந்து ஆற்றல் பெறும். - நொவாலிஸ்[1]
 • எவ்வளவு தாழ்ந்தோருடைய அன்பு கிடைத்தாலும் போதும். எந்தக்காலத்திலும் மனிதன் அன்பின்றி மட்டும் வாழ முடியாது. -ரொமெய்ன் ரோலண்டு[1]
 • அருட்கண்ணீர் தோய்ந்த முகத்தினும் உண்மை காட்டும் முகம் கிடையாது. கண்ணிர்விட்டு வருந்துவதைக் கண்டு மகிழ்வதினும் கண்ணிர்விட்டு இரங்குவது எத்துணைச் சிறப்பாகும்! -ஷேக்ஸ்பியர்[1]
 • அன்பால் விடுதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி. அதன்பின் அவனுக்குப் பாபமுமில்லை, பாடுமில்லை. -கார்ப்பெண்டர்[1]
 • மனிதன் அடையக் கூடிய உயர்ந்த பொருள் அறிவன்று, அறிவுடன் கூடிய அனுதாபமேயாகும். -தோரோ[1]
 • முகமது நபியின் அழகிற் சிறந்த இரண்டாம் மனைவி அயேஷா ஒருநாள் 'முதல் மனைவி கதீஜாவிடமுள்ளதை விட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்?' என்று கேட்டபொழுது அவர் 'இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை. என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார். -கார்லைல்[1]
 • அனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும். -ஜார்ஜ் எலியட்[1]
 • துன்புறுவோர் அனைவரும் சகோதரர். துன்பம் துடைப்போனும் சகோதரனே. அவன் ஒருவன் கிடைத்து விட்டால் அந்த இன்பத்துக்கு இணையேது? -பர்ன்ஸ்[1]
 • பிறரிடம் துக்கத்தைச் சொன்னால் அவர் அதைக் கேட்டு இறுதியில் பெருமூச்சு விடுவரேல் அப்பொழுது துக்கம் ஆறும் என்பதில் ஐயமில்லை. -டானியல்[1]
 • அனுதாபத்தோடு பார்த்தால் தெளிவு ஏற்படாமல் போனாலும் போகலாம். அனுதாபம் இல்லாவிட்டாலோ ஒன்றுமே தெரியாமல் போய்விடும். -இஸிடோர்[1]
 • மனித உள்ளத்தில் அன்புக்கு அடுத்தபடியான தெய்விக உணர்ச்சி அநுதாபமே. -பர்க்[2]
 • மற்றவர் துயரத்தைப் பகிர்ந்துகொண்டு உருகாத கல்நெஞ்சங்கள் மிகக் கேவலமானவை. - ஏ. ஹில்[2]
 • எல்லா ஞான உபதேசங்களைக்காட்டிலும், ஆலோசனைகளைக்காட்டிலும் அதிக உதவி செய்வது ஒரு துளி மானிட இரக்கமாகும்; அது நம்மைக் கைவிடாது - ஜியார்ஜ் எலியட்[2]
 • தாராளமான இதயம் என்றால், அது பிறருக்கு வேதனை அளிக்கக்கூடிய இன்பத்தை ஒதுக்கித் தள்ளவேண்டும். - தாம்ஸன்[2]
 • தானம் அளிப்பதைவிடச் சில சமயங்களில் இரக்கப்படுதல் மேலாகும். ஏனெனில், பணம் மனித இயல்புக்கு வெளியேயுள்ள பொருள். ஆனால், அநுதாபத்தை அளிப்பவன் தன் ஆன்மாவால் தொடர்பு கொள்கிறான்.
 • மனிதன் முதலாவது கற்கவேண்டிய சிறந்த பாடம் அநுதாபம் தன் சொந்த நன்மை அல்லாத பிற விஷயங்களுக்காக மனம் இளகாதவரை, ஒருவன் தாராளமான அல்லது பெருந்தன்மையான காரியம் எதையும் சாதிக்க முடியாது. - டால்போர்டு[2]
 • அநுதாபத்தைப் போற்றி வளர்ப்போம். அது நல்ல பண்புகள் வளர்வதற்கு மனத்தைப் பண்படுத்துகின்றது. அநுதாபமில்லாமல் மரியாதை இல்லை. மனிதன் தன்னையும் தள் விஷயங்களையுமே பெரியனவாக எண்ணி, அவைகளாலான போர்வையால் தன்னை மூடிக்கொண்டு, மற்றவருடைய இன்பங்களிலோ துன்பங்களிலோ பங்கு கொள்ளாமல் உணர்ச்சியற்றுக் கிடப்பதைப் போல் இழிவானது வேறெதுவும் இல்லை. - பீட்டி[2]
 • பண்போடு பொருந்தாத அநுதாபமெல்லாம் மறைமுகமான சுயநலமேயாகும். -காலெரிட்ஜ்[2]
 • அநுதாபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. - ஏ. பி. ஆல்காட்[2]
 • ஃபாரடே என்பவர் எல்லா உலோகங்களிலும் காந்த சக்தி இருப்பதாகக் கண்டுபிடித்தார். அதுபோல், எல்லா உள்ளங் களிலும் அநுதாபம் இருக்கத்தான் செய்கிறது என்று சொல்லலாம். ஆனால், மறைந்து நிற்கும் அந்தக் குணம் வெளிப்பட்டு வருவதற்கு, உலோகமானாலும் சரி. உள்ளமானாலும் சரி. ஓரளவு சூடேற வேண்டியிருக்கிறது. -புல்வெர்[2]
 • நண்பன் ஒருவன் என் துயரத்தில் பங்குகொண்டு. அதை அற்பமாகக் குறைத்துவிடுகிறான். ஆனால், அவன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும்பொழுது அது இரட்டிப்பாகி விடுகின்றது. -ஜெரிமி டெய்லர்[2]
 • கையால் அளிப்பவை வெள்ளியும் பொன்னும். ஆனால், இதயம் அளிப்பதை வெள்ளியாலோ பொன்னாலோ விலைக்கு வாங்க முடியாது. - பீச்செர்[2]
 • துக்கம் என்ற கல் ஒருவனைக் கீழே ஆழ்த்திவிடும். ஆனால், இருவர் சேர்ந்தால் அதை எளிதில் தாங்கலாம். - டபுள்யு ஹாஃப்
 • அருட்செல்வம் செல்வத்துள் செல்வம். திருவள்ளுவர்[2]
 • பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப. - முதுமொழிக்காஞ்சி[2]
 • ஈரமில் லாதது கிளை நட்பு அன்று. - முதுமொழிக்காஞ்சி [2]
 • பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய் கண்(டு) உள்ளம்
  எரியின் இழுதாவர் என்க. - தெரியிழாய்!
  மண்டு பிணியால் வருந்து பிறஉறுப்பைக்
  கண்டு கலுழுமே கண். நன்னெறி[2]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 27-29. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பரிவு&oldid=19164" இலிருந்து மீள்விக்கப்பட்டது