பாவம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பாவம் (Sin) என்பது தீய செயல்களை[1] சமயங்களின் பார்வையில் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது பெரும்பாலும், மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலைக் குறிக்கிறது. யூதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சில சமயங்களின் பார்வையில், பாவம் என்பது கடவுளின் கட்டளையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. - ரஸ்கின்[2]
  • தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும். - ரஸ்கின்[2]
  • தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு. தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாயிருக்கிறான். அக்கொடிய எஜமானன் யார்? அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே. - ஆவ்பரி[2]
  • பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி; பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான். - புல்லர்[2]
  • சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடிபுகுந்துவிடும். - ஆவ்பரி[2]
  • தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே. - இழான் இழாக்கு உரூசோ[2]
  • மனிதன் பிறர்க்குக் கேடு சூழ்வதில் தனக்கே கேடு சூழ்ந்துகொள்கிறான். - ஹேஸியாட்[2]
  • ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும். - ட்ரைடன்[2]
  • அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர். - லாபுரூயர்[2]
  • பாவம் என்பது இறைவனிடமிருந்து விலகிச் செல்வதாகும். - லூதர்[3]
  • பாவம் முதலில் இனிமையாயிருக்கும், பிறகு, அது எளிதில் வளரும் பிறகு, மகிழ்ச்சி பெருகும். அப்படியே அது உறுதியாகி விடும்: பின்னர் மனிதன் செய்ததற்கு வருந்த மாட்டான் ஒரே உறுதியுடனிருப்பான் மேற்கொண்டு வருந்தவே கூடாது என்று தீர்மானித்துவிடுவான்; அதற்குப் பின்னால் அவன் அழிந்தவன் தான். -லெய்டன்[3]
  • பாவம் ஒருகாலும் நிலையாக நின்றுகொண்டிருப்பதில்லை; அதிலிருந்து நாம் பின்னால் திரும்பச் செல்லாவிட்டால் நாம் அதிலேயே சென்றுகொண்டிருப்போம். - பார்ரோ[3]
  • பாவம் காலையில் மிகப் பிரகாசமாக விளங்கும். இரவில் அது இருளைப்போல் கருமையாக முடிவடையும். -டால்மேஜ்[3]
  • தீய மனிதர்கள் அச்சத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். நல்ல மனிதர்கள் நற்பண்பிலுள்ள ஆர்வத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். - ஜூவினால்[3]
  • பாவத்தைப்பற்றி அலட்சியமாயிருப்பவனிடம் கடவுளைப் பற்றிய பெரிய சிந்தனைகள் இருக்கமாட்டா. -ஓவன்[3]
  • கடவுள் என்னை மன்னிப்பாரென்றும். மனிதர்கள் என் பாவத்தைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் எனக்கு உண்மையாகத் தெரிந்தால்கூட. நான் பாவம் செய்ய வெட்கப்படுவேன்; ஏனெனில், அதில் அவ்வளவு இழிவு ஒட்டியுள்ளது.- பிளேட்டோ[3]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1 யோவான் 5:17 "தீச்செயல் அனைத்துமே பாவம்."
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 265-266. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாவம்&oldid=32905" இலிருந்து மீள்விக்கப்பட்டது