நேர்மை
Appearance
நேர்மை என்பது ஒருவர் உண்மைக்கு மாறாக அல்லது பிழைக்கு ஆதரவாக அல்லாமல் நேர்வழியில் நடந்துகொள்ளும் அல்லது செயல்படும் தன்மையை வெளிப்படுத்தும் மனித குணயியல்பு தொடர்பான ஒரு சொல்லாகும். குறிப்பாக ஒருவரின் "நேர்மை" என்பதனை ஒருவரின் உருவ அமைப்பை வைத்தோ, கல்வி அறிவை வைத்து, தொழில் அல்லது இருக்கும் பதவியை வைத்தோ மதிப்பிட முடியாது. காரணம் "நேர்மை" என்பது ஒருவர் நடந்துகொள்ளும் குணயியல்பை பொறுத்து தானாகவே வெளிப்படும் தன்மை கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- வில் பயிற்சியில் அம்பு எய்யும் போது அது குறி தவறினால் காரணம் என்ன என்று கண்டு பிடிப்பவன் நேர்மையான மனிதன்! அற்பன் இருக்கிறானே அவன், இது போன்ற சம்பவத்தில் தவறின் காரணத்தைக் காணாமல் பிறர்மேல் அதைச் சுமத்துவான்: பிறரிடம் அதைக்கண்டு பிடிக்கவே முயல்வான்! -கான்பூசியசு[1]
- நேர்மையாளன் பேச்சில் அடக்கம் ஊஞ்சலாடும்! வீணாகப் பேசி நேரத்தைக் கழிக்காமல் நேர்மையான செயலில் ஈடுபடுவான்; எது தேவையோ அதையே பேசுவான்; எப்போதும் நடுநிலையோடு நிற்பான்.-கான்பூசியசு[1]
- எல்லாரையும் விரும்புவான் நேர்மையாளன்; பிறரைப் பற்றி நல்லதையே பேசுவான்; நட்பிலே கண்ணியம், தேர்வை காப்பான்; தன்னுடைய முன்னேற்றத்தைப் பிறருடைய முன்னேற்றத்திலேயே பார்த்து மகிழ்வான்: துன்பப்படுவோர் துயர் துடைப்பான்; அவன்தான் நேர்மையான மனிதன். -கான்பூசியசு[1]
- உலகமெனும் பரந்த வீட்டில் வாழ்பவன் நேர்மையாளன்; உலக வாழ்வில் தன்னுடைய நிலையில் வாழ்பவன்; நேர்மையான சாலையில் வழி நடப்பவன்; பணம் அவனுக்குத் துரும்பு அதற்காக மயங்காதவன்; வறுமை கண்டு வாடாதவன்; அதிகாரபலத்துக்காக வளையாதவன்! அவன்தான் நேர்மையான மனிதன். -கான்பூசியசு[1]
- நீதி, நேர்மை, கன்னியம், கடமை, கட்டுப்பாடு; ஆசார விதிகள் தவறாமை; எக்காரியத்தையும் தனது திறமையினாலேயே செய்து முடிக்கும் துடிப்பானவன்; இவன்தான் நேர்மையாளன். -கான்பூசியசு[1]
- உலகம் போற்றும் பண்பாளன்; பழுத்த பண்புகளைச் சுவைப்பவன்; தனது நல்லியல்புகளைத் தலையாகக் கருதுபவன்; இவன்தான் நேர்மைக்குரிய நெஞ்சினன். -கான்பூசியசு[1]
- நேர்மையை அறிந்தவனை விட, அதை விரும்புபவன் சிறந்தவன்; அதை விரும்புபவனைவிட கடைப்பிடித்து மகிழ்ச்சி பெறுபவன் தலை சிறந்தவன்; மிகவும் உயர்ந்த நிலை மனப்பண்பும், மிகத் தாழ்வான நிலையில் உள்ள மனப் பண்பும் என்றுமே மாறுவது இல்லை. -கான்பூசியசு[1]
- நேர்மை பெரும்பாலான நேரங்களில் நேர்மையின்மையை விட குறைவான லாபம் உள்ளதாகவே இருக்கின்றது. -பிளேட்டோ
- எளியவர்கள் பாதுகாப்போடும், வலியவர்கள் நேர்மை யோடும் வாழத்தக்க அமைதியான புத்துலகம் ஒன்றைச் சமைக்க நம்மாலான பணியைச் செய்வோம். -ஜான் எஃப். கென்னடி
- அந்தரங்க நேர்மை ஆன்மாவின் திருமுகமாகும், பாசாங்கு செய்தல் ஆன்மாவை மறைக்கும் திரையாகும் - எஸ். டூபே[2]
- ஆழ்ந்த உண்மையான இதயபூர்வமான நேர்மை உண்மையும் பெருந்தன்மையுமுள்ள மானிடப் பண்பாடாகும்.[2]
- நாம் நினைப்பது போலப் பேசுதலும், நாம் பாவனை செய்வது போல உண்மையில் செய்வதும், நாம் வாக்களிப்பதை நிறைவேற்றுவதும், வெளித்தோற்றத்தில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே அக ஒழுக்கத்தில் இருப்பதும் அந்தரங்க நேர்மையாகும். - டில்லோட்லன்[2]
- புறத் தோற்றத்தில் நாம் தோன்ற விரும்புவது போலவே உண்மையாகவும் இருந்துவிட வேண்டும். அதுவே உலகில் நாம் கெளரவமாக வாழ்வதற்கு ஏற்ற சுருக்கு வழி. அடிக்கடி உபயோகிக்கும் அநுபவத்தின் மூலமே மானிடப் பண்புகள் வலிமை பெறுகின்றன. - சாக்ரடீஸ்[2]
- அவனுடைய சொற்கள் உறுதிமொழிப் பத்திரங்கள், அவன் கூறும் ஆணைகள் அசரீரி வாக்குகள், அவன் சிந்தனைகள், தூய்மையானவை. அவனுடைய கண்ணீர்த் துளிகள் அவன், இதயத்தின் தூதர்கள். அவனுடைய இதயத்திற்கும் ஏமாற்றுக்கும் உள்ள தூரம் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள தூரம் போன்றது. - ஷேக்ஸ்பியர்[2]
- நேர்மையும் சத்தியமும் ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படையாகும். - கன்பூசியஸ்[2]
- மனமொன்று. சொல்லொன்று. வான்பொருளும் ஒன்றே, கனமொன்று மேலவர்தம் கண். -நீதிவெண்பா[2]
- உன்னை யோக்கியமான மனிதனாகச் செய்துகொள் பின்னர் உலகில் ஓர் அயோக்கியன் குறைந்தான் என்பது நிச்சயம். -கார்லைல்[3]
- கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே தலைசிறந்தவன். -போப்[3]
- நேர்மையும் நல்லியற்கையும் இல்லாதவனுக்கு. மற்ற அறிவெல்லாம் தீமையாகும். - மாண்டெயின்[3]
- கண்ணியமான மனிதனே இல்லையென்று எவன் சொல்லுகிறானோ, அவன் அயோக்கியன். - பெர்க்லி[3]
- தீய வழியில் இலாபம் அடைய எண்ணுவது நஷ்டத்திற்கு ஆரம்பம். -டெமாகிரிடஸ்[3]
- கண்ணியமான புகழுக்கு எது வழியென்று சாக்ரடீஸிடம் கேட்ட பொழுது, அவர் கூறியதாவது: 'நீ வெளியே எப்படித் தோன்ற விரும்புகிறாயோ அப்படி ஆகிவிடப் பயிற்சிசெய்.'[3]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 31-32. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 247. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.