அதிர்ஷ்டம்

விக்கிமேற்கோள் இலிருந்து

அதிர்ஷ்டம் அல்லது நல்வாப்பு குறித்த மேற்கோள்கள்

  • துர் அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட நல்ல அதிர்ஷ்டத்தைத் தாங்கவே அதிக ஆற்றல் தேவை. - ரோஷிவக்கல்டு[1]
  • குற்றங்குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக் கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும். - கதே[1]
  • துர் அதிர்ஷ்டம் சிறியோரைப் புறங் கண்டுவிடும். ஆனால் பெரியோர் அதை வென்று விடுவர். -வாஷிங்க்டன் இர்விங்[1]
  • எப்பொழுது நாம் 'அதிர்ஷ்டம்' எனும் தேவதையை அதிகமாக விரும்புகின்றோமோ, அப்பொழுது அவள் நம்மை அதிகமாக அதட்டிப் பார்க்கின்றாள். -ஷேக்ஸ்பியர்[1]
  • அதிர்ஷ்டம் அடையும்வரை என்னை அறிவிலி என்று அழையற்க. -ஷேக்ஸ்பியர்[1]
  • அதிர்ஷ்டதேவி சிலசமயங்களில் சுக்கானல்லாத தோனிகளும் கொண்டு வருவதுண்டு. -ஷேக்ஸ்பியர்[1]
  • 'வினைப்பயன்' என்பதை நாம் பிறர் விஷயத்தில் நம்பியும், நம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது ஒரு பெரும் பாக்கியமாகும். -மில்[1]
  • பலவீனர் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பல முடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர். -எமர்ஸன்[1]
  • அதிர்ஷ்டதேவி யாரையேனும் அழிக்க விரும்பினால் அவரை வெறியராக்குவதே அவளுடைய ஆரம்பவேலை. -பப்ளியஸ் ஸைரஸ்[1]
  • அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையிலேயே இருந்துகொண்டிருக்கிறது. -பேக்கன்[1]
  • அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு. -பேக்கன்[1]
  • அதிர்ஷ்டதேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவமாட்டார்கள். -ட்ரைடன்[1]
  • கெட்டகாலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெட்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர். - கார்லைல்[1]
  • அதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான். -கார்லைல்[1]
  • அதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பது முண்டு. -ஜார்ஜ் எலியட்[1]
  • அதிர்ஷ்ட தேவியின் குன்றின்மேல் இறக்கிவிடப்படுவதில் என்ன பெருமை உண்டு? சகல பெருமையும் அதில் ஏறிச் செல்வதிலேயே. -நெளல்ஸ்[1]
  • அதிர்ஷ்டங்களை உண்டாக்கிக்கொள்வது நாம், ஆனால், அதை விதி என்று சொல்லுகிறோம். - ஆவ்ராய்[2]
  • அதிருஷ்ட சக்கரம் இடைவிடாமல் சுற்றிக்கொண்டேயிருக்கின்றது. இன்று நான் மேலே வந்துவிடுவேன் என்று எவன் சொல்லிக்கொள்ள முடியும்? - கன்ஃபூஷியஸ்[2]
  • மானிட வாழ்க்கை பகுத்தறிவைக்காட்டிலும் அதிருஷ்டத் தாலேயே ஆளப்பெறுகின்றது. - ஹியூம்[2]
  • அதிர்ஷ்டம் மனிதர்களை மாற்றுவதில்லை. அவர்களை வெளிப்படையாகத் தெரியும்படி திறந்து காட்டுகிறது. - ரிக்கோபோனி[2]
  • ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விைலும் அதிர்ஷ்டம் வந்து ஒரு முறை கதவைத் தட்டும். ஆனால், பல சந்தர்ப்பங்களில் மனிதன் அப்பொழுது பக்கத்தில் வெளியே எங்காவது போயிருப்பான். அது தட்டுவது அவன் காதில் விழுவதில்லை. - மார்க் டுவெயின்[2]
  • உண்மையில் எது நல்லதிருஷ்டம், எது துரதிருஷ்டம் என்பது நமக்குத் தெரியாது. - ரூஸோ[2]
  • நல்லவர்களுடைய துரதிருஷ்டம் அவர்களை வானைநோக்கி முகங்களைத் திருப்பும்படி செய்கின்றது. கெட்டவர்களுடைய துரதிருஷ்டம் அவர்கள் தரையை நோக்கித் தலைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளும்படி செய்கின்றது. - ஸாஅதி[2]
  • அதிர்ஷ்டம் மெலிந்தவர்களைத் தண்டிக்கும் தடி: தைரியமுள்ளவர்களுக்கு அது ஊன்றுகோல். - லோவெல்[2]
  • அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம் ஒழுக்கத்தை நம்பியிருங்கள். - பப்ளியஸ் ஸிரஸ்[2]
  • தானே தன் நிலைமையைச் செம்மைப்படுத்திக்கொள்ளும் பொறுப்பு ஒருவனுக்கு ஏற்பட்டால், அதுவே அவன் அதிருஷ்டத்தின் மடியில் தவழ்வதாகும். அப்பொழுதுதான் நம் அறிவு ஆற்றல்களெல்லாம் வளர்ச்சியடைந்து முன்பு கண்டிராத அளவுக்கு வலிமை பெறுகின்றன. - பிராங்லின்[2]
  • அநேகருக்கு அதிருஷ்டம், அளவுக்கு அதிகமாய்க் கொடுக்கின்றது. ஆனால், எவருக்கும் போதிய அளவு அளிப்பதில்லை. - மார்ஷியல்[2]
  • அதிருஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்தே சென்றுகொண்டிருப்பதைக் காணலாம். - கோல்ட் ஸ்மித்[2]
  • துயரப்படுவோர்தாம் அதிருஷ்டத்தின் ஆற்றலை ஒப்புக் கொள்வர். இன்பமாயிருப்பவர்கள் தங்களுடைய வெற்றிகளுக்குத் தங்கள் முன்யோசனையும் தகுதியுமே காரணங்கள் என்பர். -ஸ்விஃப்ட்[2]
  • அதிகாலையில் எழுந்திருந்து கடுமையாக உழைத்து முன் யோசனையுடன் நடந்துகொள்ளும் மனிதன் தன் வருமானத்தில் கவனமுள்ளவனாகவும், கண்டிப்பான ஒழுக்க முடையவனாகவும் இருந்தால் அவன் துரதிருஷ்டம்பற்றிக் குறை சொல்வதை நான் கண்டதேயில்லை. நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கங்கள். இடைவிடாத ஊக்கம் ஆகியவைகளில் அமைந்த கோட்டைக்குள் துரதிருஷ்டம் செல்ல முடியாது. மூடர்களே துரதிருஷ்டம்பற்றிக் கனவு காண்பார்கள். - அடிஸன்[2]
  • வாழ்க்கையில் வெற்றியடைந்த மனிதர் அனைவரும் காரண காரிய இயல்பை நம்புபவர் எந்த விஷயமும் அதிருஷ்டத்தால் நேரிடுவதில்லை. நியதியின்படியே நிகழ்கின்றது என்று அவர்கள் நம்புகின்றனர். சங்கிலியின் முதலாவது கண்ணியிலிருந்து கடைசிக் கண்ணிவரை எதுவும் பலவீனமாகவோ, அறுந்தோ இருக்கவில்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். அதுவே காரண காரியத் தொடர்பு. - எமர்ஸன்[2]
  • ஏதாவது ஏற்படும் என்று அதிருஷ்டம் எப்பொழுதும் காத்துக் கொண்டேயிருக்கின்றது. உழைப்பு. கூர்மையான பார்வையுடனும் உறுதியான உள்ளத்துடனும் எதையாவது உற்பத்தி செய்யும். அதிருஷ்டம். கட்டிலில் படுத்துக்கொண்டு, தனக்கு ஏதாவது சொத்து வந்து சேர்ந்ததாகத் தபால்காரர் கடிதம் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்திருக்கும். உழைப்பு. காலை ஆறுமணிக்கே எழுந்து ஊக்கமுள்ள பேனாவாலோ, 'டனார். டணார்' என்று ஒலிக்கும் சம்மட்டியாலோ தனக்கு வேண்டியதைத் தேடிக்கொள்ளும். அதிருஷ்டம், நொந்து அழும். உழைப்பு. சீட்டியடித்துக்கொண்டு உல்லாசமாயிருக்கும். அதிருஷ்டம், தற்செயலாக நன்மை வரும் என்று நம்பும். உழைப்பு. ஒழுக்கத்தையே நம்பியிருக்கும். - காப்டென்[2]
  • அதிருஷ்டமில்லாத இடத்திலோ, ஆளிடமோ நெருங்க வேண்டாம். மிகவும் சாமர்த்தியசாலிகளான பலரை எனக்குத் தெரியும். அவர்களுடைய கால்களுக்குக்கூடச் செருப்புக் கிடைப்பதில்லை. நான் அவர்களுடன் சேருவதில்லை. அவர்களுடைய ஆலோசனை நல்லதாகத்தான் தோன்றும் ஆனால், அவர்கள் தாங்களே முன்னேற முடியவில்லை. தங்களுக்குத் தாங்களே நன்மை செய்துகொள்ள முடியாதவர்கள் எனக்கு என்ன நன்மை செய்யப் போகின்றனர்? - ராத்ஸ்சைல்டு
  • அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான்! -நிக்கோலோ மாக்கியவெல்லி[3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 21-24. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. 3.0 3.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அதிர்ஷ்டம்&oldid=20221" இலிருந்து மீள்விக்கப்பட்டது