உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோலோ மாக்கியவெல்லி

விக்கிமேற்கோள் இலிருந்து

நிக்கோலோ மாக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli - மே 3, 1469 – சூன் 21, 1527) ஒரு இத்தாலிய இராசதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
 • வாழ்ந்தவர்களைக் கொல்லுவதும், உற்ற நண்பர்களுக்குத் துரோகம் புரிவதும், நேர்மையில்லாமல் நடப்பதும், இரக்கமில்லாமல் இருப்பதும், மதாபிமானமற்ற செயலும் அறநெறியென்று சொல்லப்பட மாட்டாது. இந்த வழிகளால் ஒருவன் அதிகார பதவி அடையலாம். ஆனால் புகழ் அடைய முடியாது.[1]
 • உலகத்தில் மூன்று விதமான மூளைகள் இருக்கின்றன. ஒன்று, பிறர் உதவியில்லாமல், தானாகவே எதையும் அறியக் கூடியது. இது நல்ல மூளை, இரண்டாவது, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய பிறகு அறியக்கூடியது. இதுவும் நல்ல மூளைதான். ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை; பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை. இது பயனற்றது.[1]
 • அதிகாரம் வெகு சுலபமாகத் தனக்கொரு பெயரைச் சூட்டிக் கொள்ள் முடியும். ஆனால் வெறும் பெயர் தனக்கோர் அதிகார சக்தியை அடைய முடியாது.[1]
 • அதிகாரத்தை அடைபவர்கள் அதை மேன் மேலும் அதிகரித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள்.[1]
 • அதிர்ஷ்டம் என்பது ஒரு பெண். அவளைப் பலவந்தமாகத் தான் அடையவேண்டும்![1]
 • அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான்![1]
 • நாடாளும் அரசனின் நலத்தைவிட தன்னலத்தையே அதிகமாகக் கவனிக்கிறவன் சரியான அமைச்சனாக மாட்டான்.[1]
 • நாடாளும் புரவலன் தன் அமைச்சர்களுக்குப் பெருமையும் செல்வமும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேறொன்றின் மீது ஆசை வைக்க மாட்டார்கள்.[1]

அரசியலமைப்பு

[தொகு]
 • குடியரசு, மேன் மக்களாட்சி, முடியாட்சி ஆகிய இம்மூன்று வகைக்கும் இடமளித்து உருவான அரசியலமைப்பைப் பெற்ற அரசு நிலைத்து நிற்கும்.[1]
 • நல்லதோர் அரசியல் அமைப்பைப் பெற்றிறாத குடியரசு நல்லின்பத்தோடு வாழ முடியாது.[1]
 • அரசியல் கொள்கைகளைப் பற்றிய முடிவுகளை, அவற்றை நிறைவேற்றுவதற்காகப் பின்பற்றிய செயல் முறைகளைக் கொண்டு தீர்மானிக்காமல், அவற்றின் மூலம் அடைந்த பலா பலன்களைக் கொண்டுதான் திர்மானிக்கவேண்டும்.[1]
 • எல்லா இராஜ்யங்களின் அடிப்படை அஸ்திவாரம், நல்ல சட்டங்களிலும் நற்படைகளிலுந்தான் அமைந்திருக்கிறது. ஆளும் பதவியை அடையும் ஒருவனுக்கு, அவனால் தாக்கப்பட்டவர்களும் எதிரிகளாகிறார்கள். அவனுக்கு உதவியாய் இருந்தவர்களும், அவர்களுடைய ஆசைய பிலாஷைகளை அவன் நிறைவேற்ற முடியாமல் போவதால் எதிரிகளாகிறார்கள்.[1]
 • மக்களின் அன்பைப் பெற்றுள்ள ஆட்சியாளன் எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.[1]
 • எதிர்ப்பிலே வளர்ந்தோங்கும் அரசன் பேரரசனாகிறான்.[1]
 • தன் பலத்தை நம்பி வாழாத ஆட்சியாளன் என்றும் பாதுகாப்புடன் இருக்க முடியாது![1]
 • ஆட்சியாளன் எப்போதும் திறமையை மதிப்பவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.[1]
 • ஆட்சி நடத்தும் அரசனிடம் பொதுமக்கள் அன்பு கொண்டிருப்பது நல்லதா அச்சம் கொண்டு அடங்கியிருப்பது நல்லதா என்று கேட்டால், அஞ்சுவதே நல்லது என்றுதான் வேண்டும்.[1]
 • ஆளுபவனிடம் மக்கள் கொள்ளும் அன்பு மாறும் இயல்புடையது; அச்சமோ என்றும் மாறாது.[1]
 • அரசாளும் தலைவன் அவனுடைய குடிமக்களால் பழிக்கப்படலாம். ஆனால் வெறுக்கப்படக் கூடாது.[1]
 • மக்கள் மன்னனுக்கு அஞ்சி நடக்கலாம். ஆனால் தன்னை வெறுக்கும்படியாக மன்னன் நடந்துகொள்ளக் கூடாது.[1]
 • அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும்.[1]
 • மக்களின் வெறுப்புக்காளான மன்னரெல்லாம் சதிகளுக்கு ஆளாகி கொல்லப் பட்டிருக்கிறார்கள்.[1]
 • எந்த அரசாங்கமாய் இருந்தாலும், அதன் தலையாய விஷயம், தன்னை வெறுப்பிற்கும் நிந்தனைக்கும் ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்வதேயாகும். இது அதன் பிரஜைகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும். அண்டை அயல் நாடுகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும்.[1]
 • பொது மக்கள் ஓர் ஆட்சியாளனை அலட்சியப் படுத்தத்தொடங்கிவிட்டால், அவன் விரோதியைப் போல் ஆபத்தானவன் அல்ல என்றோ, நண்பன் என்றோ கருதப்பட்டாலொழிய, அவன் மீது பலவிதமான ஏளனங்கள் வீசப்படும் எனவும் அவனைக் கவிழ்ப்பதற்கு ஒவ்வொரு விதமான சதித்திட்டமும் உருவாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கலாம்.[1]
 • ஒரு நாட்டு மக்கள் தங்களை ஆளும் ஒர் அரசனைப் படையெடுத்து வரும்படி வரவேற்பார்களானால், அப்படி வரவேற்கப்பட்ட வெளி நாட்டான் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஏனெனில் அவனாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. நரியைப்போல் சதிவலைகளை அறிந்து கொள்ளும் தந்திர சூட்சும அறிவும், ஓநாய்களான பகைவர்களை சிங்கத்தைப் போல் அச்சுறுத்துந் தன்மையும் ஓர் ஆட்சியாளனுக்கு வேண்டும்.[1]
 • ஓர் ஆட்சியாளன், தாராள மனப்பான்மையுள்ள வள்ளல் என்று பெயரெடுப்பதற்காக, வரிபோட்டு, மக்களைச் சுரண்டிக் கொடுங்கோலன் என்று நிந்திக்கப் படுவதைவிட, கருமித்தனம் உடையவன் என்று பெயரெடுப்பது நல்லது.[1]
 • நாடாளும் மன்னன், தேவை ஏற்பட்டால் ஒருவன் உயிரை வேண்டுமானாலும் பறிக்கலாம். ஆனால் ஒருவன் உடமையை மட்டும் பறிக்கவே கூடாது! ஏனெனில் மக்கள் தங்கள் தந்தையின் சாவைக்கூட மறந்து விடுவார்கள். ஆனால் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் பொறுக்கவே மாட்டார்கள்![1]
 • ஆட்சிபீடம் ஏறிய ஒருவன் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவானேயாகில், அவன் சந்தர்ப்பத்திற்கேற்ப. நல்லவனாய் இல்லாமல் இருக்கவும், தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்பத் தன் அறிவைப் பயன்படுத்தவோ, பயன்படுத்தாமலோ இருக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.[1]
 • ஆட்சியாளன் புத்தியுள்ள வனாயிருந்தால் சமாதான காலத்தில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது. ஆபத்துக் காலத்தில் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதல்களைச் சமாளிப்பதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.[1]
 • பலம் பொருந்திய நகரத்தையும், தன்னை வெறுக்காத மக்களையும் உடைய அரசன் தாக்குதலுக்கு ஆளாக மாட்டான் . அப்படியே தாக்கப்பட்டாலும், தாக்கியவனே வெட்கமடைந்து புறமுதுகு காட்டி ஓடும்படி நேரிடும்.[1]
 • சீர்கெட்ட ஒரு நகரத்தை அடையும் ஒர் அரசன் அதை சீர்த்திருத்துவதன் மூலம் புகழடைகிறான்![1]
 • நல்ல அரசுகள் நிலைத்து நிற்கக் கூடிய தன்மையற்றுப் போவதால் தீய அரசுகளாக மாறி விடுகின்றன. இவ் வகையில் நல்ல அரசுகளும் குறைபாடுடையனவே.[1]
 • பரம்பரை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தை இழக்க நேரிட்டால் அது அதிர்ஷ்டத்தின் கோளாறல்ல. அவர்களுக்கு ஆளத் தெரியாததின் கோளாறேயாகும்![1]
 • உடைமைகளை (அல்லது நாடுகளை) சேர்த்துக்கொள்ள விரும்புவது இயற்கையானது. அதைச் செய்யவல்லவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவார்களேயானால், என்றும் புகழப்படுவார்களே தவிர, இகழப்பட மாட்டார்கள். வல்லமையில்லாதவர்கள் எப்படியாவது செய்ய முனையும்போதுதான் தவறு செய்கிறார்கள். பழிக்கும் இகழ்ச்சிக்கும் இரையாகிறார்கள்.[1]
 • கொடுமையும் துரோகமும் புரிந்தவர்கள். எப்படித் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு நீடித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் தாங்கள் செய்த கொடுமைகளை முற்றிலும் சரிவரச் செய்தவர்களாய் இருப்பார்கள்![1]
 • அன்பு, மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழும்புகிறது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் நின்றுபோகும்.[1]
 • ஆலோசனையாளர்கள் எத்தனை யோசனை சொன்னாலும் ஆட்சியாளனுக்குப் புத்தியில்லாவிட்டால் அத்தனையும் பாழ்![1]
 • இலட்சியவேகம் என்பது, நாம் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்தாலும் திருப்தியே ஏற்படாதளவு மனித இருதயத்தில் எழும்பும் அதிவலிமையான ஒரு வேட்கையாகும்.[1]

இழத்தல்

[தொகு]
 • இகழ்ச்சிக்கிடமான முறையில் ஒரு சிறுபகுதியை இழப்பதை விட, எல்லாவற்றையுமே துணிவுடன் இழந்து விடுவது எவ்வளவோ மேலாகும்.[1]

உணர்தல்

[தொகு]
 • எல்லோராலும் ஒன்றைக் காண முடியும். ஒரு சிலரால்தான் உணர முடியும்![1]
 • ஒவ்வோருவரும் உண்மையே சொல்லுவார்களானால் அந்த உண்மைக்குரிய மதிப்பே போய்விடும்![1]
 • உனக்கு நீயே உதவி செய்து கொள். ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள்![1]

ஏழ்மை

[தொகு]
 • நான் ஓர் ஏழை; அதுவே என்விசுவாசத்திற்கும் கண்ணியத்திற்கும் அத்தாட்சியாகும்.[1]

கஷ்டம்

[தொகு]
 • ஒரு கஷ்டத்தைச் சமாளிக்க இன்னொரு கஷ்டத்தில் சிக்கிக் கொள்ள நேரிடுவது இயற்கைதான். ஆனால், இரண்டு கஷ்டங்களில் எதில் துயரம் குறைவோ அதை நல்ல வழியாகக் கைக்கொள்ள வேண்டும்.[1]
 • காதல், மக்களின் இதயங்களிலே சிறகடித்துப் பறக்கும் போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைப் பிணைத்துப் பிடித்து வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது.[1]
 • சிறு குழந்தையைப் போலவும், அடிக்கொரு நினைப்புமாகவும் உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும், இருதயங்களையும் அவர்களுடைய முதுகெலும்பையுங்கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது.[1]
 • காதலை விரும்பி, அதன் போக்குப்படி யெல்லாம் போகவிட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். அது தங்களை விட்டு பறந்து போகும் போது அவர்கள் அதைப்போக விட்டுவிடுகிறார்கள். அது திரும்பி வரும்போது அதை மறுபடியும் ஆனந்தத்துடன் வரவேற்றுக் கொள்கிறார்கள்.[1]

காலப்போக்கு

[தொகு]
 • காலத்திற்கும் சூழ் நிலைக்கும் தகுந்தபடி தன் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்துக் கொள்கிறவனிடம் அதிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.[1]
 • காலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகின்றவன் இன்பமாகவும், காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறான்.[1]

குடியரசு

[தொகு]
 • குடியரசில் உரிமையை நிலை நிறுத்தக் குற்றஞ்சாட்டும் வாய்ப்பு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.[1]

கோட்டை

[தொகு]
 • குடிமக்கள் அன்பின் மீது எழுப்பப்படுகிற கோட்டை தான் உண்மையில் சிறந்த கோட்டை![1] • ஆளப்படும் மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாளன் எத்தனை கோட்டைகளை யுடையவன் ஆனாலும் அவன் பத்திரமாக இருக்க முடியாது.[1]
 • மனத் திருப்தியில்லாத மக்கள் மலிந்துள்ள நாட்டிலேதான் சதிகாரர்கள் முளைப்பார்கள்.[1]
 • நாடாள்பவனிடம் மக்கள் நல்லெண்ணம் உடையவர்களாயிருந்தால், சதிகாரர்கள் மக்களையும் தங்கள் எதிரிகளாகப் பாவித்துப் பயப்படுவார்கள். தங்கள் சதிக்குற்றம் வெளிப்பட்டு விட்டால் புகலிடம் இல்லாமல் திண்டாட நேரிடுமேயென நினைத்துச் சதி செய்யும் எண்ணமே அற்றுப் போவார்கள்.[1]
 • புத்தியுள்ளவர்கள் தாம் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.[1]
 • சந்தர்ப்பத்தைக் கடந்து போகும் படி கை நழுவ விட்டு விடக் கூடாது.[1]

சுதந்திர அரசு

[தொகு]
 • சுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும், குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப் படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன்.[1]

சுதந்திரம்

[தொகு]
 • புதிதாகச் சுதந்திரமடைந்த ஒரு நாடு தன் சுதந்திரத்திற்கு எதிரியாய் உள்ளவர்களையெல்லாம் ஒழித்துவிட்டால் தான் அமைதியாக இருக்க முடியும்![1]
 • காற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.[1]
 • எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக நடக்கக் கூடிய பேர்வழியும், சமயம் வந்தால் சட்டென்று காரியத்தை முடித்தால்தான் வெற்றி காண முடியும்![1]
 • காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர்கள் தாம் செயல்களில் வெற்றி காண்பார்கள்.[1]
 • புத்தியுள்ள வில் வீரர்கள் தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்வதற்காக அதனினும் உயரத்தில் உள்ள ஓரிடத்தைக் குறியாக வைத்து அம்பு விடுவார்கள். அது போலவே, புத்திசாலியான மனிதர்கள் தாங்கள் பெரியவர்களைப் போல் காரிய சித்தியடைவதற்காக, முற்காலத்திலிருந்த மிகப் பெரியவர்களைப் பின்பற்றி நடக்க முயல்வார்கள்.[1]

சொத்துடைமை

[தொகு]
 • பெரும்பாலான மக்கள் கெளரவத்தை விடத் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.[1]
 • தங்கள் தந்தை இறந்ததை எளிதாக மறந்து விடுவது மக்கள் இயல்பு. ஆனால், தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்! பொறுக்கவும் மாட்டார்கள்[1]

தலைவர்கள்

[தொகு]
 • பின்பற்றுவோர் இல்லாத தலைவர்கள் அதிவிரைவில் அழிந்து போவார்கள். அதனால் ஒரு பெருந்தொல்லையும் விளையாது.[1]
 • பொதுமக்கள், மேலும் சிறப்பாய் வாழலாமென்று தங்கள் தலைவர்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அதில் ஏமாற்றமே அடைகிறார்கள்.[1]

தாழ்வு மனப்பான்மை

[தொகு]
 • தாழ்வு மனப்பான்மை என்பது பயனற்றது என்பது மட்டுமல்ல, உண்மையில் துன்பந் தருவதுமாகும்.[1]

நடு நிலைமை

[தொகு]
 • பக்கத்தில் உள்ள இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால், நடு நிலைமை வகிப்பதை விட ஏதாவது ஒரு தரப்பில் சேருவதே அறிவுடமையாகும்.[1]
 • தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன் பக்கம் சேர்வதைவிட, தன் உதவியை விரும்பிப் பெறக்கூடியவன் பக்கம் சேர்வதே நன்மை பயக்கும்.[1]
 • நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான்.[1]

நம்பிக்கை

[தொகு]
 • உன்னையே நீ நம்பு.[1]
 • மனிதத் தன்மை நன்மையைக் காட்டிலும் தீமையின் பக்கமே சாயும். இயல்புள்ளது.[1]
 • கசப்பான பண்டங்களால் சுவை ஊறப்படுவது போலவே, அதிகப்படியான இனிப்புப் பண்டங்களால் திகட்டலும், குமட்டலும் ஏற்படுகிறது. அது போலவே மனிதர்கள் நன்மைகளால் அலுப்பும் திமைகளால் ஆத்திரமும் அடைகிறார்கள்.[1]
 • எந்த மனிதனும் எப்பொழுதும் நல்லவனாகவோ அல்லது எப்பொழுதும் தீயவனாகவோ இருக்க முடியாது. அவன் தன் தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றபடி நல்லவனாகவோ தீயவனாகவோ மாறிக் கொண்டால்தான் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியும்.[1]
 • தீய சக்திகளை நேரிடையாக எதிர்த்தால் அவற்றின் பலம் அதிகரித்து விடும். சமயத்திற்கேற்றபடி நடந்து தான் அவற்றைச் சாய்க்க வேண்டும்.[1]

நன்றியின்மை

[தொகு]
 • லோபித்தனத்தினால் அல்லது பயத்தினால்தான் நன்றி கெட்டதனம் உற்பத்தியாகிறது.[1]
 • என் தேசத்தை என் ஆத்மாவையும் விட அதிகமாக நேசிக்கிறேன்.[1]

நீதிமுறை

[தொகு]
 • நல்ல படைபலமில்லாத ஒரு நாட்டில், நல்ல நீதி முறைகள் இருக்க முடியாது.[1]
 • நெடு நாளைக்கு மாற்றப்படாமல் இருக்கக் கூடிய நிலைத்த சட்டங்களைப் பெற்ற நாடு இன்பப் பூமியாக இருக்கும். அப்படியல்லாமல் நீதி முறைகளை அடிக்கடி சிர்திருத்த வேண்டிய நிலையில் உள்ள நாடு மிகுந்த துன்பத்தில் உழலும்.[1]
 • வளமை மிகுந்த ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாயிருப்பது இயற்கை. அவர்களைச் சுறுசுறுப்புடன் விளங்க வைக்க வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் தேவை.[1]
 • ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தி அதற்குரிய நீதி முறைகளை வகுக்க விரும்புகிற எவரும், எல்லா மனிதர்களும், தீயவர்கள் என்றும், அவர்கள் சமயம் வாய்க்கும்போது தங்கள் தீய குணத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கக் கூடியவர்கள் என்றும் மனத்தில் கொள்ள வேண்டும்.[1]
 • மக்கள் நன்னடத்தை உள்ளவர்களாயிருக்க வேண்டுமானால் நல்ல கல்வி கற்றவர்களாயிருக்க வேண்டும். நல்ல கல்வி, நல்ல நீதிமுறை இருந்தால்தான் கிடைக்கும். நல்ல நீதிமுறை, பலரால் பழிக்கப்படும் கலகங்களால்தான் கிடைக்கும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்.[1]

படை

[தொகு]
 • குடிமக்களையே தன் படைவீரர்களாகப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாளன் வேறு எந்தக் கொடிய பகைவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.[1]
 • படைபலம் படைத்த திர்க்கதரிசிகள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படை பலமற்றவர்களே தோல்வியடைந்திருக்கிறார்கள்.[1]
 • படைப் பயிற்சியைவிட இன்பக் கேளிக்கைகளையே பெரிதாக மதிக்கிற ஆட்சியாளர்கள், அதிரைவில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.[1]
 • இராணுவத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பெருந்திறமைசாலிகளாக இருந்தாலொழிய அந்தப் பீட்த்தில் நிலைத்திருக்க முடியாது.[1]

பட்டங்கள்

[தொகு]
 • பட்டங்கள் மனிதர்களுக்குக் கெளரவம் அளிப்பதில்லை. மனிதர்கள்தான் பட்டங்களுக்கு கெளரவமளிக்கிறார்கள்.[1]

பயமுறுத்தல்

[தொகு]
 • யாரையும் பமுறுத்தவோ, அல்லது பழிக்கவோ செய்யாமல் ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வானாகில், அது அவனிடமுள்ள மாபெரும் புத்திசாலித்தனத்தின் அறிகுறியெனக் கருதுகிறேன். ஏனெனில், பயமுறுத்துவது, பழிப்பது, இவை இரண்டில் எதுவும் எதிரியைப் பலஹீனப் படுத்திவிடுவதில்லை. அதற்கு மாறாக, ஒன்று அதிக எச்சரிக்கையுடன் அவனை விழித்திருக்கச் செய்கிறது: மற்றொன்று அவனுக்குத் தீராக் குரோதத்தையும் பழிவாங்கும் வெறியையும் தூண்டிவிடுகிறது.[1]
 • சாதாரண மனிதர்கள் சிறு தீமைகளுக்குத்தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந் திமைகளுக்குத் தகுந்தப்டி பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள்.[1]
 • வேலை செய்யும் தேவை எதுவுமில்லாமல், தங்களுடைய அளவற்ற நிலபுலன்களிலிருந்து வரும் வாடகையைக் கொண்டு சோம்பேறித் தனமாக வாழுபவர்களைத் தான் பிரபுக்கள் என நாம் அழைக்கிறோம்.[1]

பெரியோர்

[தொகு]
 • மனிதர்கள், மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயலுதல்வேண்டும்.[1]
 • பெரிய மனிதர்கள் என்போர் தாங்கள் செல்லும் பாதையில் ஒவ்வோரடியிலும் குறுக்கிட்ட பேராபத்துக்களையும், பெருங் கஷ்டங்களையும் தங்கள் திறமையாலும், ஆண்மையாலும் அகற்றியெறிந்து கொண்டே மேலோங்கி வந்திருக்கிறார்கள்.[1]
 • தேடுகிற சக்தியைக் காட்டிலும் எப்பொழுதும் ஆசை பெரிதாயிருக்கிறது.[1]
 • மனிதர் தங்கள் தேவைக்காகப் போராடுகிற நிலைமை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப் போவதில்லை.[1]

போராட்டம்

[தொகு]
 • போராடுவதில் இரு முறைகள் உண்டு. ஒன்று அறவழியில் நின்று போராடும் முறை: மற்றொன்று மூர்க்கமான பலத்தைப் பயன் படுத்தும் முறை. முதல் வழி மனிதத் தன்மை இரண்டாவது வழி மிருகங்களுக்குரியது. ஓர் ஆட்சியாளனுக்கு மனிதத் தன்மையும் வேண்டும். மிருகத் தன்மையும் வேண்டும்.[1]

மகனுக்கு

[தொகு]
 • மகனே, நீ என்னை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டுமானால், எதிலும் வெற்றிகரமாக விளங்கு. உனக்கே ஒரு மதிப்பை உண்டாக்கிக்கொள் : கடுமையாகப் பயில்; நீயாகவே நன்றாக நடந்துகொள்; கற்றுக்கொள்.[1]

மக்கள் பிரதிநிதிகள்

[தொகு]
 • மக்கள் பிரதிநிதிகள் என்போர் ஆட்சியில் மக்களின் பங்கை ஏற்பவர்களாக மட்டும் இருப்பதில்லை. மக்கள் உரிமையைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
 • இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது.[1]
 • மத சாம்ராஜ்யத்தின் அதிபதிகள் மட்டுமே, பாதுகாக்கப்படாத ராஜ்யங்களையும் ஆளப்படாத பிரஜைகளையும் உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப்படாதவையாகையால் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை. அவர்களுடைய பிரஜைகள் ஆளப் படாதவர்கள் ஆகையால், அவர்கள் ஆதிக்கத்தை மறுப்பதில்லை.[1]

மதிப்பு

[தொகு]
 • எனக்குக் கிடைக்கும் மதிப்பு அனைத்தும் என்னிடமுள்ள சிறு திறமையின் காரணமாகவே வருகிறது.[1]

மனித இயற்கை

[தொகு]
 • மனிதர்களை எல்லாவற்றிற்கும் ஆசைப்படக் கூடியவர்களாகவும், ஆனால் அவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாகவும் இயற்கை படைத்திருக்கிறது.[1]
 • மனிதர்களுக்கு இயற்கை வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத்தது போலவே, அவர்களுக்கு வெவ்வேறு விதமான மனங்களையும் சுபாவங்களையும் கொடுத்திருக்கிறதென்று நான் நம்புகிறேன்.[1]
 • காலப் போக்கும் சூழ்நிலைகளும் பொதுவாகவும் குறிப்பாகவும், மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதே சமயம் மனிதனின் சுபாவங்களும் நடைமுறை போக்கும் மாறாமல் ஒரே மாதிரியாக அப்படியே இருக்கின்றன. அதனால் தான் மனிதனுக்கு ஒரு சமயம் நல்லதிர்ஷ்டமும் மற்றொரு சமயம் துரதிர்ஷ்டமும் ஏற்படுகின்றன.[1]
 • அடி முட்டாள்களாகவோ, அதி புத்திசாவிகளாகவோ, மிகவும் நல்லவர்களாகவோ யாரும் இல்லை. மனிதர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் செயல்களையே பாவித்துப் பின்பற்றி அவர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே எப்பொழுதும் செல்கிறார்கள்.[1]
 • தங்களை அன்பு காட்டச் செய்கிறவருக்குக் குற்றமிழைப்பதை விடத் தங்களை அச்சமுறச் செய்கிறவர்களுக்குக் குறைவாகவே குற்றமிழைப்பது மனிதர் இயல்பு.[1]
 • மெதுவாக நகர்வதுதான் பொதுமக்களின் வழக்கம்.[1]
 • எல்லோராலும் கண்களால் தான் பார்க்க முடியும். ஒரு சிலரால்தான் உணர்ந்து பார்க்க முடியும். • பெரும்பாலானவர்கள் எதையும் கண்களால் பார்த்தே மதிப்பிடுகிறார்கள். சிலர் தம் கையினால் தொட்டுப்பார்த்து உண்மையான மதிப்பை உணர்கிறார்கள்.[1]
 • முகஸ்துதி செய்பவர்களை நம்பவே கூடாது.[1]
 • முகஸ்துதி மனிதரை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள்.[1]

மொழிவழி அரசியல்

[தொகு]
 • மொழியிலும், நீதி முறையிலும், பழக்க வழக்கங்களிலும் மாறுபட்ட பல பகுதிகளை ஒன்று சேர்த்துக் கட்டியாளுவது மிக கடினம்.[1]
 • ஒரே மொழிபேசும் ஒரே இனமக்கள் வாழும் பல இராஜ்யங்களை ஒன்று சேர்த்து ஆளுவது சுலபம். அதிலும் அவர்கள் சுதந்திரமாக இருந்து பழக்கப் படாதவர்களாயிருந்தால் இன்னும் சுலபம்.[1]
 • யுத்தம் என்பது எந்த மனிதனும் அதன் மூலம் கண்யமாக வாழமுடியாத ஒரு தொழிலேயாகும். அந்த வேலையின் மூலம், ஏதாவது இலாபத்தை அறுவடை செய்கிற போர்வீரன், பொய்மையும், வெறியும், கொடுமையும், உடையவனாக விளங்கவே கடமைப் பட்டிருக்கிறான்.[1]
 • எவன் யுத்தம் உண்டாக்குவதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறானோ, அவன் பாபி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. - யுத்தம், திருடர்களை உண்டாக்குகிறது. சமாதானம் அவர்களைத் தூக்கு மேடைக்கு கொண்டு வருகிறது.[1]

வதந்தி

[தொகு]
 • குற்றஞ் சாட்டக்கூடிய வழிவகைகள் இல்லாத இட்ங்களில் தான் வதந்தியைப் பரப்பும் முறை பெரிதும் கையாளப்படுகிறது.[1]

விதி

[தொகு]
 • மனித விவகாரங்களின் போக்கைச் சிந்தித்துப் பார்த்தால், பல விஷயங்கள் கிளம்புவதையும், அவற்றை நாம் எதிர்த்து காக்கவிடாதபடி வானத்து விதி செய்து விடுவதையும் காணலாம்.[1]
 • பட்டு வியாபாரத்தைப் பற்றியோ, கம்பளி வியாபாரத்தைப் பற்றியோ அல்லது லாப நட்டக் கணக்குளைப் பற்றியோ பேசாமல் அரசியலைப் பற்றிப் பேச வேண்டும் என்று எனக்கு விதி வகுத்திருக்கிறது.[1]

விஷயங்கள்

[தொகு]
 • தீவிரமான விஷயங்கள் வேதனையைத் தவிர வேறு எதையும் எனக்குக் கொண்டுவந்ததில்லை. அற்ப விஷயங்களோ திருப்தியையும் பேரானந்தத்தையும் தவிர வேறு எதையும் கொண்டு வந்ததில்லை.[1]

வெற்றி தோல்வி

[தொகு]
 • தன் போக்கின்படி ஒருவன் செய்கிற காரியங்கள் காலப்போக்கிற்கும் சூழ் நிலைகளுக்கும் பொருந்தி விடுகிறபோது, அந்த மனிதன் தன் காரியத்தில் தான் எதிர்பார்க்கும் பலனை அடைகிறவனாகவும் வெற்றி பெறுகிறவனாகவும் ஆகிவிடுகிறான். காலப்போக்கிற்கும் சூழ்நிலைகளுக்கும் ஒத்து வராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான்.[1]
 • எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள்.[1]
 • ஒருவன் மாபெரும் வெற்றியுடன் பத்துக் காரியங்களைக் கூடச் செய்து முடித்து விடலாம்; ஆனால் முக்கியமானதொரு தோல்வியே முன்னதனைத்தையும் அழித்து விடப்போதுமானது.[1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=நிக்கோலோ_மாக்கியவெல்லி&oldid=35412" இலிருந்து மீள்விக்கப்பட்டது