கருத்து
Appearance
கருத்து, கண்ணோட்டம் அபிப்பிராயம் என்பது முற்றும் முடிவான தீர்ப்பு அல்ல.
மேற்கோள்கள்
[தொகு]- பெருங்கூட்டமான பொதுமக்களின் அபிப்பிராயம் என்பது நமக்கு இரண்டாவது மனச்சாட்சி போன்றது. சிலர் அதையே முற்றிலும் நம்பியிருப்பர். - டபுள்யு. ஆர். ஆல்கெர்[1]
- எல்லா அதிகாரமும் - உச்ச நிலையிலுள்ள் எதேச்சாதிகாரம் உட்பட - இறுதியாக அபிப்பிராயத்தையே சார்ந்து நிற்கின்றது. - ஹியூம்[1]
- நேற்று நான் சொன்னவைகளுக்கெல்லாம் மாறுபாடாயிருப்பினும், இன்று நான் எதை நம்புகிறேனோ அதைச் சொல்லியே தீருவேன். - வென்டல் ஃபிலிப்ஸ்[1]
- எதேச்சாதிகாரத்தை அலைத்து ஆட்டக்கூடிய சக்தி ஒன்று மக்களிடம் இருக்கின்றது. அது மின்னல், புயல், பூகம்பம் ஆகியவைகளைவிட் மேலான ஆற்றலுள்ளது. அது நாகரிகஉலகம் முழுவதும் கோபிக்கக்கூடும் என்று உணரும் அச்சமேயாகும். - டேனியல் வெப்ஸ்டர்[1]
- அபிப்பிராயம் படைகளைவிட வல்லமையுள்ளது. - பாமர்ஸ்டன் பிரபு[1]
- உலகில் நன்மையோ தின்மையோ செய்வதில் முக்கியமான விஷயம் அபிப்பிராயம். விஷயங்களைப்பற்றிய தவறான அபிப்பிராயங்களே நம் அழிவுக்குக் காரணமாக இருகின்றன. மார்க்கஸ் அன்டோனியஸ்[1]
- சட்டங்களைப் பார்க்கினும் உலகை அதிகமாக ஆட்சி புரிவது அபிப்பிராயமே. நம்முடைய சொத்துகளையும் உயிரையு காத்து நிற்கும் முக்கியமான கோட்டை தனிமனிதர்களும் மக்கள் கூட்டங்களும் கொண்டுள்ள ஒழுக்க சம்பந்தமான முடிவுகளே அன்றி. நீதித் தலங்களின் முடிவுகள் அல்ல வளர்ச்சி பெற்றுவரும் சமூகத்தில் ஆயுதங்களுக்குப் பதிலாக அபிப்பிராயமே மேலோங்கி நிற்கும். - சான்னி[1]
- பெரும்பாலான மனிதர்களுக்கு அபிப்பிராயமே கிடையாது சிலருக்கு மட்டுமே சொந்த அபிப்பிராயம் என்று இருக்கு அது சிந்தனை செய்து அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும். ஸியூ[1]
- உலகிலேயுள்ள முதன்மையான பொய், பொது மக்களின் அபிப்பிராயம் என்பது. - கார்லைல்[1]
- தாராள மனப்பான்மையுள்ள ஒருவன், மற்றொருவன் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டால், அவன்மீது குற்றம் சாட்டமாட்டான்.-ஸிஸெரோ[1]
- பெரிய நான்கு சக்கர வண்டியை ஓட்டுபவன், லகான்களை கையில் பிடித்துக்கொண்டு. குதிரைகளையே கவனித்திருந்து ஓட்டுவது போல. இராஜதந்திரி பொதுஜன அபிப்பிராயத்தைத் தொடர்ந்து செல்ல வேண்டும். - ஜே. ஸி ஹே[1]
- மற்ற மனிதர்களின் கண்களே நம்மைக் கெடுக்கும் கண்கள். என்னைத்தவிர மற்ற யாவரும் குருடர்களாயிருந்தால், எனக்கு நேர்த்தியான உடைகளோ, பெரிய வீடுகளோ, உயர்ந்த நாற்காலிகள் முதலியவைகளோ தேவையில்லை. - ஃபிராங்க்லின்[1]
- ஓர் ஆசிரியரின் நூலில் என் கருத்துப்படியே எழுதியுள்ள பகுதியை நான் பாராட்டிப் புகழ்கிறேன். அவர் என் கருத்துக்கு மாறுபடும் இடங்களில் அவர் கூற்றுகள் தவறானவை என்று நான் முடிவு கட்டுகிறேன். - ஸ்விஃப்ட்[1]
- சொந்த அபிப்பிராயம் எதுவுமின்றி, பிறருடைய அபிப்பிராயத்தையும் விருப்பத்தையுமே சார்ந்திருப்பவனை அடிமையென்று கருதலாம். - கிளாப்ஸ்டாக்[1]
- காலியாயுள்ள தோல் பைகளைக் காற்று புடைக்கச் செய்யும்: மூடர்களை அபிப்பிராயம் புடைக்கச் செய்யும். -சாக்ரடீஸ்[1]
- தனி மனிதரின் அபிப்பிராயம் பலவீனமானது. ஆனால், பொது மக்களின் அபிப்பிராயம் அநேகமாகச் சர்வ வல்லமை உள்ளது. -பீச்சர்[1]
- ஒர் அபிப்பிராயம் உண்மைக்குப் பொருத்தமாயில்லா விட்டாலும். அது உன்னுடையது என்பதற்காக அதைப் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டிருந்தால், உண்மையைவிட நீயே மேலானவன் என்று கருதுவதாகும். - வென்னிங்[1]
- இரண்டு உரோமங்களோ, இரண்டு தானியங்களோ ஒன்று போல் இருந்ததில்லை; இதுபோல, உலகத்தில் ஒரே மாதிரியான இரண்டு அபிப்பிராயங்கள் என்றுமே இருந்த தில்லை. உலகம் அனைத்திற்கும் பொதுவான இயல்பு பல. வகைகளாகப் பிரிந்திருத்தலாகும். -மாண்டெயின்[1]
- மனிதர்கள் நம்மை நிந்திக்கும் பொழுது, நாம் நம்மையே சந்தேகித்துக்கொள்ள வேண்டும்; அவர்கள் நம்மைப் புகழும் பொழுது. நாம் அவர்களைச் சந்தேகிக்க வேண்டும் என்று சொல்வது தெளிவாகக் கண்ட ஒர் உண்மையாகும்! -கோல்டன்[1]
- அபிப்பிராய வேற்றுமைக்காக நான் ஒரு மனிதனை விட்டே விலக மாட்டேன். அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில், நானே சில நாள்களுக்குப்பின் என் கருத்துக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும். - ஸர். தாமஸ் பிரெளல்[1]
- ஓர் அபிப்பிராயம் புதுமையானது என்பதற்காக அதை உதறித்தள்ள வேண்டாம் ஆனால், அதைக் கவனமாக ஆராய்ந்து அது தவறாயிருந்தால் தள்ளிவிடவும், அது உண்மையாயிருந்தால் ஏற்றுக்கொள்ளவும். - லக்ரிஷியல்[1]
- ஒரு மனிதன் தன்னைப்பற்றிய உலக அபிப்பிராயத்தை மதிக்காமலிருந்தால், ஆணவமாயிருப்பதோடு, ஒழுக்க கேடும் ஆகும் -ஸிஸெரோ[1]
- உலக அபிப்பிராயத்தைத் தழுவிக்கொண்டு உலகிலே வாழ்வது எளிது. ஏகாந்தமான இடத்தில் நம் சொந்த அபிப்பிராயமுடன் வாழ்தல் எளிது. ஆனால், மக்கள் கூட்டத்தின் நடுவில் ஏகாந்தத்திலுள்ள சுதந்தரத்துடன் இனிதாக வாழ்பவேனே பெரிய மனிதன். - எமர்ஸன்[1]
- நாம் நம்முடைய நண்பர்களின் அபிப்பிராயங்களை லாங்கி வைத்துக்கொள்வதற்காக நம் மூளைகளில் ஒரு பகுதி எப்பொழுதும் காலியாக வைத்திருக்கவேண்டும். இதயத்திலும் மூளையிலும் விருந்தினருக்கும் இடம் கொடுப்பேம் - ஜோப[1]
- பிடிவாதமுள்ள மனிதன் அபிப்பிராயங்களைப் பெற்றிருப்பதில்லை. அவைகளே அவனைப் பற்றியிருக்கின்றன. - பிஷப் பட்லர்[1]
- கருத்துகளே உலகை ஆட்சி செய்கின்றன. - கார்ஃபீல்ட்[2]
- இந்தக் காலத்தில் நாம் கருத்துகளுக்காகப் போராடுகிறோம். பத்திரிகைகள் நம் கோட்டைகளாக உள்ளன. - ஹீய்ன்[2]
- கருத்துகள் தாடிகள் (வளர்வது) போன்றது. வளர்ந்து பருவமடையும்வரை மனிதர்களுக்கு அவை முளைக்கமாட்டா. - வால்டேர்[2]
- கருத்துகள் நாகரிகத்தை மேல்நிலைக்கு உயர்த்துபவை. அவை புரட்சிகளைத் தோற்றுவிக்கின்றன. ஒரு கருத்தில் அநேக வெடி குண்டுகளைக்காட்டிலும் அதிகமான வெடி மருந்து அடங்கியுள்ளது.[2]
குறிப்புகள்
[தொகு]
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 152. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.