இசை
Appearance
இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள்.
மேற்கோள்கள்
[தொகு]- இசையுணர்ச்சி இல்லாதவனும், இன்னிசையால் இதயம் இளகாதவனும் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவர். -ஷேக்ஸ்பியர்[1]
* தன்னுள்ளே இசை அமைந்திராதவனும், இனிய ஒலிகள் ஒத்து இசைப்பதில் உருகாதவனுமான மனிதன் துரோகங்களும் தந்திரங்களும், கொள்ளைகளும் செய்யக்கூடியவனாவான், அவனை எவனும் நம்ப வேண்டாம். - ஷேக்ஸ்பியர்[2]
- அளவு கடந்து அனுபவித்தாலும் சன்மார்க்க உணர்ச்சிக்கும் சமய உணர்ச்சிக்கும் கேடு உண்டாக்காத புலனுகர்ச்சி இசையொன்றே. -அடிஸன்[1]
- இசை மக்கள் அறிந்த மகத்தான நன்மை. உலகில் காணும் சொர்க்கம் முழுவதும் அதுவே. -அடிஸன்[1]
- அழகான உடையும் சத்தான உணவும் நல்ல இசையும் வாழ்வின் ஊற்றாகவும் அறத்தின் சாதனமாகவும் ஆக்கப் பெற்றவை. ஆனால் சாத்தான் அவற்றைக் குற்றம், அலங்கோலம், மரணம் ஆகியவற்றின் சாதனங்களாகச் செய்துவிடுகிறான். -ரஸ்கின்[1]
- இசையே! ஏதேதோ பேசுகிறாய். இதுவரை நான் கண்டதுமில்லை, இனிமேல் காணப்போவதுமில்லை. -ரிக்டர்[1]
- நான் தெலுங்கு நாட்டு சங்கீதத்தையும், கன்னட தேசத்து சங்கீதத்தையும் ஆராய்ந்திருக்கிறேன். அவை எல்லாம் தமிழ் இசையுடன் கொஞ்சங்கட சம்பந்தப்பட வில்லை. அவை மராட்டி, ஹிந்துஸ்தானி இசையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். தாம்பிர பரணி நதி ஜலத்தைக் குடித்து, தமிழ்க் காற்றையே சுவாசித்து வந்த தியாகராஜ சுவாமிகள் தம் தாய் பாஷையில் சாகித்திய மேற்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்தும், தமிழிலுள்ள சாகித்யங்களின் மேன்மையை உணர்ந்தும், தம் சாகித்தியங்களைத் தாய் மொழியிலேயே செய்தார். —ரசிகமணி-டி. கே. சிதம்பரந்த முதலியார் (25-10-1941) (தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)[3]
- இசையமைப்புக்குப் பாடல் எழுதுவதா? எழுதிய பாடலுக்கு இசை அமைப்பதா? என்று கேட்டால், இசையமைப்பு சிறப்பாக இருந்தால், அதற்குப் பாடல் அமைப்பதும், பாடல் சிறந்து விளங்கினால், அதற்கு இசை அமைப்பதும் நல்லது. சுரதா[4]
- இசை, கவிதையை ஒத்தது. இவை ஒவ்வொன்றிலுமுள்ள எண்ணற்ற மென்மைப் பண்புகளை எந்த வழியிலும் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், வல்லவன் ஒருவன் தானாகவே அவைகளைப் பெற்றுவிடுவான். - போப்[2]
- வாத்தியங்களின் இசை மனிதனைப் போரில் முன்னணியில் கொண்டுபோய் நிறுத்திவிடும். விவாதம் செய்வதைவிட இசை அதிக விரைவில் காரியத்தை நிறைவேற்றிவிடுகின்றது. காரண காரியத் தொடர்புடன் உபதேசம் செய்வதைவிட ஒரு நல்ல கீதம் மனிதனின் இதயத்தை உருக்கிப் பக்தி கொள்ளச் செய்துவிடும். - டக்கர்மன்[2]
- உயர்ந்த ஒழுக்க முறையையும் ஆன்மிகக் கருத்துகளையும் வெளிக் காட்டுவதற்குச் சித்திரக் கலை மிகவும் குறைந்த ஆற்றலுள்ளது. ஆனால், இசை நிகரற்ற ஆற்றலுள்ளது. -திருமதி ஸ்டோ[2]
- உயர்ந்த கருத்தில், இசை எனப்படுவது புதுமையாயிருக்க வேண்டிய அவசியமில்லை; அத்துடன் அது எவ்வளவு பழமையாயுள்ளதோ, எவ்வளவு நமக்குப் பழக்கமாயுள்ளதோ அவ்வளவுக்கு அதிகமாக அதன் பயன் இருக்கும் -கதே[2]
- நம் இயற்கைக்கு நான்காவது தேவை. இசை. முதலாவது உணவு, பிறகு உடை, அப்பால் உறைவிடம், பின்னர் இசை - போவி[2]
- கலைகள் யாவற்றிலும் உணர்ச்சிகளை மிக அதிகமாய்ப் பாதிக்கக்கூடியது இசைதான்; சட்டம் இயற்றுபவன் அதற்கு முதன்மையான ஆதரவு கொடுக்க வேண்டும். - நெப்போலியன்[2]
- தினசரி வாழ்க்கையில் ஆண்மாவின்மீது படியும் தூசியைத் துடைப்பது இசை [2]
- கொடிய விலங்கைச் சாந்தப்படுத்தவும், பாறைகளை நெகிழ்விக்கவும், தேக்கு மரத்தை விளைவிக்கவும்கூடிய வசிய சக்திகள் இசையில் இருக்கின்றன. -காங்கிரீல்[2]
- இசை நம்மை உருக்குகின்றது. நமக்கு ஏன் என்று தெரியவில்லை; நாம் கண்ணீர்த் துளிகளைக் காண்கிறோம் ஆனால், அவைகளின் உற்பத்தி நிலையத்தை அறிந்திலோம். - லான்டள்[2]
- நான் இசையைக் கேட்டுக்கொண்டே இறக்க வேண்டும். எனக்கு வேறு இன்பம் எதுவும் வேண்டியதில்லை. - கீட்ஸ்[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இசை. நூல் 158-159. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 98-100. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.