நூலாசிரியர்

விக்கிமேற்கோள் இலிருந்து

நூலாசிரியர் என்பவர் ஓர் எழுத்தாக்கத்தின் ஆசிரியர், கதாசிரியர், படைப்பாளர் போன்றோரைக் குறிப்பது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • எந்த நூல், ஆக்கியோன் இரத்தத்தால் ஆக்கப் பட்டிருக்கிறதோ அந்த நூலே எனக்குப் பிரியம். -நீட்சே[1]
  • ஆசிரியன் தன் நூலில் தன் ஆன்மாவைக் காட்டும் அளவே அவன் நமக்கு அவசியம் ஆவான். -டால்ஸ்டாய்[1]
  •  கலைஞன் பேசுவது நம் அறிவோடன்று, மனத்தில், நாம் தேடாமல் கிடைத்த அம்சமொன்றுண்டு. அதனாலேயே அது அழியாதது. அந்த அம்சத்தோடு தான் கலைஞன் பேசுவான். அன்பு அழகு அச்சரியம் ஆநந்தம் இந்த உணர்ச்சியே அது.- கோன்ராட்[1]
  • நல்ல விஷயம் என்று எண்ணி நான் பாடுவதில்லை. என் மனோநிலைமை அல்லது என் வாழ்வில் ஏற்பட்ட சம்பவம், அதுவே என் பாடல்களுக்கு உற்பத்தி மூலம். -இப்ஸன்[1]
  • அறிஞன் சமாதானப் பிரியர், ஆயுதம் பூண்பதில்லை. ஆனால் அவர் நாவோ க்ஷவரக் கத்தியிலும் அதிகக் கூர்மையானது. அவர் பேனாவோ அதைவிட அதிகக் கூர்மை உடையது. -ப்ரெளண்[1]
  • ஒரு எளிய அழகான வாக்கியம் எழுதப் பல வருஷங்கள் ஒரு முகமாக உழைத்தால் முடியும் என்பதை அறிவேன்.- டங்கன்[1]
  • உண்மையான ஆசிரியனை உலகக் கஷ்டம் எதுவும் அடக்கிவிட முடியாது. ஒய்ந்துபோன ஆசிரியனை எவ்வித அதிர்ஷ்டமும் தூக்கி நிறுத்திவிட முடியாது. -நாரிஸ்[1]
  • படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான். -ஸிட்னி ஸ்மித்[1]
  • வாலிப ஆசிரியர்கள் தம் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுக்கிறார்களேயன்றி போதுமான உணவு கொடுப்பதில்லை. -ஜூபர்ட்[1]
  • தெரிந்தவற்றைப் புதியனவாகவும் புதியனவற்றைத் தெரிந்தனவாகவும் செய்யக்கூடிய சக்தியே ஆசிரியனிடத்தில் நம்மை ஈடுபடுத்தும். -தாக்கரே[1]
  • இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதொன்றே சிறப்பு என்று எண்ணற்க. இதற்கு முன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பே யாகும். -கதே[1]
  • ஒவ்வோர் ஆசிரியரும் தாம் விரும்பாவிடினும் தம் நூல்களில் தம்மை ஓரளவு சித்திரிக்கிறார். - கதே[2]
  • மிகவும் சுயமாக எழுதும், ஆசிரியர்கள் அவ்வாறு சுயமாகப் படைப்பவர்களாக் விளங்குவதன் காரணம், அவர்கள் புதிய விஷயத்தைக் கூறுகின்றனர் என்பதன்று. அவர்கள் தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை முன்பு எவரும் சொல்லியிராதவை போல எடுத்தளிப்பதே காரணம். - கதே[2]
  • மிகவும் சுயமாக எழுதும், ஆசிரியர்கள் அவ்வாறு சுயமாகப் படைப்பவர்களாக் விளங்குவதன் காரணம், அவர்கள் புதிய விஷயத்தைக் கூறுகின்றனர் என்பதன்று. அவர்கள் தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை முன்பு எவரும் சொல்லியிராதவை போல எடுத்தளிப்பதே காரணம். - கதே[2]
  • படிப்பவர்களைக் கவரக்கூடிய ஆசிரியரின் இரண்டு ஆற்றல்களாவன: புதிய விஷயங்களைப் பழக்கப்படுத்துதல், பழைய விஷயங்களைப் புதுமையுடன் அளித்தல். - ஜான்ஸன்[2]
  • நன்றாக எழுதுதல் என்பது நன்றாகச் சிந்தித்தல், நன்றாக உணர்தல். நன்றாகத் தெரிவித்தலாகும்; அதாவது, அறிவு. உயிர்த் துடிப்பு. நல்ல கவைத்திறன் ஆகியவை ஒருங்கே வேண்டும். - பஃப்பன்[2]
  • ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும். - டிரைடன்[2]
  • தந்தையார் தாயார் எவரும் தம் குழந்தைகள் விகாரமாக இருப்பதாக எண்ணுவதில்லை; தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தக் குணம், உள்ளத்தால் படைக்கும் படைப்புகளில் மேலும் அதிகமாயிருக்கும். -செர்வான்டிஸ் [2]
  • ஒரு நாட்டின் முக்கியமான பெருமை அதன் ஆசிரியர்களிடமிருந்தே வருவதாக ஜான்ஸன் கூறுகிறார். ஆனால், அவர்கள் ஞானக் களஞ்சியங்களை அளிக்கும் பொழுதுதான் இந்த உரை பொருந்தும். அவர்கள் ஒழுக்கத்தைப் போதிக்காவிடில், அவர்கள் புகழுக்கு உரியவர்களாயில்லாது, கண்டனத்திற்கே அதிகமாக உரியவர்கள். - ஜேன் போர்ட்டர் [2]
  • எழுத்தில் பதியத்தக்க புகழுள்ள காரியங்களைச் செய்வதற்கு அடுத்தபடியாக, ஒரு மனிதனுக்குப் பெருமையோ இன்பமோ அளிக்கும் விஷயம் படிக்கத்தக்கவைகளை எழுதுவதாகும். -செஸ்டர்ஃபீல்[2]
  • நூலாசிரியராக விளங்குவதில் மூன்று கஷ்டங்கள் இருக்கின்றன. வெளியிடத்தக்க விஷயம் எதையாவது எழுதுதல், அதை வெளியிடக் கண்ணியமான மனிதரைக் கண்டுபிடித்தல், அதைப் படிக்கப் புத்திசாலிகளான வாசகர்களைப் பெறுதல்.- கோல்டன்[2]
  • ஆசிரியராவதற்கு அறிவுத்திறன் மட்டும் போதாது நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்கவேண்டும். - எமர்ஸன்
  • பெரிய ஆசிரியர் தம் வாசகர்களுக்கு நண்பராகவும் நன்மை செய்பவராகவும் விளங்குகிறார். -மெகாலே[2]
  • ஆசிரியர்கள் உயிரோடிருக்கும் பொழுது அவர்களை ஏளனம் செய்து கண்டிப்பார்கள் இறந்த பிறகு புகழ்வார்கள். - வால்டேர்[2]


குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 243-244. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நூலாசிரியர்&oldid=35315" இலிருந்து மீள்விக்கப்பட்டது