உள்ளடக்கத்துக்குச் செல்

அரசாங்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

அரசாங்கம் (Government) என்பது நாடு அல்லது சமுதாயத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். நாடுகளின் பொதுநலவாயத்தில் (Commonwealth of Nations) “அரசாங்கம்” என்ற சொல்லானது ஒரு மாநிலத்தில் நிறைவேற்று அதிகாரத்தைச் செயல்படுத்தும் மக்களின் கூட்டு குழுவை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல் பயன்பாட்டுக்கு ஒத்ததாக அமெரிக்க ஆங்கிலத்தில் "நிர்வாகம்" என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  • நம்மை நாமே ஆண்டுகொள்ளக் கற்பிக்கும் அரசாங்கமே அரசாங்கங்களுள் தலைசிறந்தது. -கதே[1]
  • அரசாங்கம் என்பது, வெறும் ஆலோசனை கூறுவது மட்டுமன்று அதற்கு அதிகாரம் உண்டு. தன் சட்டங்களை அமல் நடத்தும் ஆற்றலும் உண்டு. - வாஷிங்டன்[1]
  • நல்ல சட்டங்களும் நல்ல ஆயுதங்களுமே எல்லா அரசாங்கங்களுக்கும் முக்கியமான அடிப்படை - மாக்கியவில்லி[1]
  • அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுக்கும் அறிவாளர் அனுபவிக்கும் தண்டனை, தீய மனிதர்களின் ஆட்சியின்கீழ் வாழ்வதாகும். -பிளேட்டோ[1]
  • அரசாங்கம் அவசியமான ஒரு தீமை, அது நடைவண்டிகள், ஊன்றுகோல்களைப் போன்றது. நமக்கு அது அவசியம் என்பது நாம் இன்னும் எவ்வளவு குழந்தைப்பருவத்திலிருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றது. அதிகமாக ஆட்சி புரிதல் மக்களுடைய சக்தியையும் தாங்களே தங்களுக்கு உதவிக் கொள்வதையும் மாய்த்துவிடும். - வெண்டெல்ஃபிள்ப்ஸ்[1]
  • ஆண்டு அடக்குதல் குறையக் குறைய நமக்கு நல்லது. சட்டங்கள் குறைவாயிருப்பதும் அளிக்கப்படும் அதிகாரம் குறைந்திருப்பதும் நலம், சாதாரணமான அரசாங்கத்தால் விளையும் தீமைக்கு மாற்று. தனிப்பட்டவரின் ஒழுக்கமும், தனி மனிதரின் வளர்ச்சியும். - எமர்ஸன்[1]
  • நன்றாக ஆளப்பெறும் மக்கள். வேறு சுதந்தரம் எதையும் தேடக்கூடாது. ஏனெனில், நல்ல அரசாங்கத்தைப்பார்க்கினும் அதிகமான சுதந்தரம் வேறு இருக்க முடியாது. - ஸர் வால்டர் ராலே[1]
  • மனிதர்கள் ஆண்டவனிடத்திலும் அறிவினிடத்திலும் நம்பிக்கை வைத்திருந்தால், அவர்களிலே பெரும்பாலோரைக் கொண்ட அரசாங்கம், இறுதியில் அறிவாளர்களையும் பெரியோர்களையும் முதன்மையாகக்கொண்டு விளங்கும். - ஸ்பால்டிங்[1]
  • மிகத்தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவருக்கு நேர்ந்த தீங்கை எல்லோருக்கும் ஏற்பட்ட அவமதிப்பாகக் கருதும் நிலையில் ஆட்சி புரியும் அரசாங்கமே தலைசிறந்ததாகும். - ஸோலன் [1]
  • அரசாங்கங்கள் அமைக்கப்பெறுவதில்லை. ஒட்டு வேலைகளால் உண்டாக்கப்பெறுவதில்லை. அவை வளர்ந்து உருவாகின்றன. பல நூற்றாண்டுகளாகப் பல துயரங்களை அநுபவித்துக்கொண்டு அவை மெதுவாக வளர்ந்து வந்துள்ளன. - ஜான் மாஸ்ஃபீல்டு [1]
  • அரசர்கள், ஏகாதிபத்தியங்களின் உண்மையான வலிமை சேனைகளிலும் உணர்ச்சிகளிலும் இல்லை. ஆனால், அவர்கள் கபடமில்லாமலும், உண்மையாகவும், சட்டப்படியும் நடக்கிறார்கள் என்று மக்கள் கொள்ளும் நம்பிக்கையிலேயே அது அமைந்துள்ளது. அந்த உயர் நிலையிலிருந்து ஓர் அரசாங்கம் விலகியவுடன். அது ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுள்ள ஒரு கூட்டத்தைத் தவிர வேறில்லை. அதன் முடிவு காலமும் நெருங்கி நிற்கும். - எச். ஜி. வெல்ஸ் [1]
  • இறைவனுக்குக் கீழ்ப்படிந்துள்ள இந்தத் தேசிய சமூகம் சுதந்தரத்துடன் புதுப் பிறவியை அடைய வேண்டும். அதனால், மக்களுடைய, மக்களால் நடத்தப்பெறும், மக்களுக்கான அரசாங்கம் பூமியிலிருந்து மறைந்துவிடாமல் இருக்க வேண்டும். - ஆபிரகாம் லிங்கன்[1]
  • தாழ்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு ஜனநாயகம் ஓரளவு நல்வாழ்வை அளித்து வருவதுதான். அது அடைந்துள்ள வெற்றியாகும். முற்றிலும் நல்வாழ்வை அளிக்காவிட்டாலும் அது அளிக்க முயற்சி செய்கின்றது. இந்தக் காரணத்திற்காகவே நம்முள் பெரும்பாலோர் அதை அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். - ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் [1]
  • மக்கள் நன்மை செய்வதற்கு உதவியாகவும், தீமைசெய்வதைத் தடுப்பதாகவும் இருப்பதே அரசாங்கத்தின் முறையான கடமையாகும். - கிளாட்ஸ்டன் [1]
  • மக்கள் நீதிபதிகளுக்கு அடங்கியும். நீதிபதிகள் சட்டங்களுக்கு அடங்கியும் உள்ள நிலையில், சமூகம் நன்றாக ஆளப் பெறுவதாகக் கொள்ளலாம் - ஸோலன் [1]
  • அரசாங்கத்தை அமைக்க மக்களுக்கு அதிகாரமும் உரிமையும் உண்டு என்று கருது முன்பு ஒவ்வொரு தனி மனிதனும் அரசாங்கத்திற்கு அடங்கி நடக்க வேண்டியது கடமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். - வாஷிங்டன்[1]
  • எந்த அரசாங்கமும், அதன் அதிகார விநியோகமும் எந்த உருவத்தில் இருந்த போதிலும் அது அன்பை அடிப்படையாகக் கொள்ளாமலும், அறிவைத் துணைக்கொள்ளாமலும் இருந்தால், அது கொடுங்கோன்மையேயாகும். - திருமதி ஜேம்ஸன்[1]
  • பலாத்காரத்தின் துணைகொண்டு வகித்துவரும் அதிகாரம் நீடித்து நிற்பது அரிது. ஆனால் அமைதியும் நிதானமும் எல்லா விஷயங்களையும் நீடித்து நிற்கச் செய்பவை. - ஸெனிகா[1]
  • நீதியில்லாத எந்த அரசாங்கமும் மதிக்கத்தக்கதன்று. அப்பழுக்கில்லாத மக்கள் நம்பிக்கையைப் பெறாமலும், பொது மக்களுக்கான புனிதக் கொள்கை, விசுவாசம், கெளரவம் ஆகியவை இல்லாமலும் இருந்தால், வெறும் அரசாங்க அங்கங்களும், சட்ட நிர்வாகமும் மட்டும் அரசியல் சமூகத்திற்குப் பெருமையுண்டாக்க முடியாது. -டேனியல் வெப்ஸ்டர்[1]
  • ஒரு நகரம், நல்ல சட்டங்களால் ஆளப்பெறுவதை காட்டிலும், ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் மேலாகும் - அரிஸ்டாட்டில்[1]
  • ஆட்சி செய்வதை மிகச்சிலருடைய வசத்தில் விட்டு விடக்கூடாது சட்டம் இயற்றுவதை மிகப்பலருடைய கையில் ஒப்படைக்கவும் கூடாது. - ஸ்விஃப்ட்[1]
  • அஞ்சாமை, ஈகை, அறிவு.ஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. -திருவள்ளுவர்[1]
  • அறனிழுக்காது அல்லவை நீக்கி மறனிழுக்கா
    மானம் உடையது அரசு. - திருவள்ளுவர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரசாங்கம்&oldid=19370" இலிருந்து மீள்விக்கப்பட்டது