கான்பூசியசு

விக்கிமேற்கோள் இலிருந்து
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ , அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி.

கான்பூஷியஸ் ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  • துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ , அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி.
  • தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
  • மேலான மனிதன் எப்போதும் அறம் பற்றியே சிந்திக்குறான். பாமர மனிதன் சுகம் பற்றியே எண்ணுகிறான்.
  • கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம்.
  • சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண். படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்.
  • உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
  • ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும், அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.
  • நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு, ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
  • அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
  • அறிந்தவர்கள் பேசுவதில்லை. பேசுகிறவர்கள் அறிவதில்லை.[1]
  • மக்களின் இயற்கையமைப்பு ஒன்று போலவே இருக்கிறது. ஆனால் அவர்களுடைய பழக்கங்களே அவர்களை வெகுதூரம் பிரித்து வைத்து விடுகின்றன.[1]
  • பயிற்சி இல்லாத மக்கள் கூட்டத்தை போருக்கு அழைத்துச் செல்வது அவர்களைத் தூர எறிந்துவிடுவதற்குச் சமானமே ஆகும்.[1]
  • அகங்காரம் இல்லாமல் செல்வராய் வாழ்வதைவிட முணுமுணுக்காமல் ஏழையாய் வாழ்வது கடினம்.[1]
  • நற்குணம் தனிமையில் வாழமுடியாது. அதைச் சுற்றி அன்பர்கள் தோன்றிக். கூடிவிடுவது திண்ணம்.[1]
  • ஓர் உயர்ந்த ஜனசமூகத்தை ஆளுவதில் சிறுமீனைக் சமைப்பதைப் போல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.[1]
  • சிந்தனையில்லாக படிப்பு பயனற்றது. படிப்பிலாத சிந்தனை அபாயகரமானது.[1]
  • நீங்கள் எதை விரும்ப மறுக்கிறீர்களோ, அதைப் பிறருக்குச் செய்ய நினைக்காதீர்கள்![2]
  • தெரிந்தது இது என்பதை அறிவதும்-தெரியாதது இன்னது என்பதை அறிவதும் தான்; அறிவாளியின் சிறந்த இயல்பாகும்.[2]
  • அன்பு என்பது உதவி செய்வதுதான்; அனைவரிடத்தும் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும். இதனால் நல்லவர்களின் நட்பை நாடுங்கள்.[2]
  • அழகு எனும் பொருளின் திட்டங்களுக்கு அடங்காதனவற்றை அறவே கவனிக்காதீர்கள். அழகிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.[2]
  • எதைச் செய்தாலும் கவனத்தோடு செய்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் தவறுகள் செய்யவே மாட்டார்கள். ஒரு மனிதன் என்ன தவறு செய்கிறான் என்பதில் இருந்தே இவன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதுபோலவே நாம் தவறு செய்துவிட்டோமே என்று அச்சமோ வெட்கமோபடாதீர்கள். இவ்வாறு செய்வீர்களேயானால், நீங்கள் மீண்டும் தவறு செய்வீர்கள்![2]
  • உதவியே குறிக்கோளாகக் கருதுபவன் அற்பன்; அடுத்தவரை ஆள்காட்டியே வாழ்பவன் அற்பன்; குற்றேவல் செய்தே குறைகூறி வாழ்பவன் அற்பன்; பிறர் தயவை நம்பியே கையேந்தி பிழைப்பவன் அற்பன்; இவன் கெளரவம் உள்ள நேர்மையாளனின் பரம விரோதி![2]
  • உண்மையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு கவலை இல்லை; அறிவுடையவனுக்குத் தயக்கம் இல்லை; உள்ளத் துணிவுடையவனுக்கு நெஞ்சில் அச்சம் இருக்கயிடமில்லை.[2]

அரசன்[தொகு]

  • மிகப் பழைய காலத்தில் மக்களுக்கு அரசர்களே தெரியாது. பிறகு நேசித்துப் புகழ்ந்தார்கள். பிறகு பயந்தார்கள். இறுதியில் அரசர்களை எதிர்த்தார்கள்.[1]
  • நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால், 'அவன் தன் நல்ல ஒழுக்கத்தால் ஆட்சி செலுத்தும்போது துருவ நட்சத்திரம் போல் விளங்குகிறான். அந்த விண்மீன் சலனமற்று, நடுநிலையிலிருக்க, மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.[2]
  • மன்னனாக இருப்பது கஷ்டம்தான்; ஆனால் அமைச்சனாக இருப்பதும் கஷ்டந்தான்! ஏன் இந்தக் கஷ்டம் உருவாகின்றது என்றால், அரசன் தானே, நீதி ஒழுக்கத்தைப் பின்பற்றுபனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் கீழ் வாழும் மக்களும் அவன் ஏவுதல் ஏதும் இல்லாமலேயே அவனுடைய கட்டளைக்கு அடங்கி நடப்பார்கள்! [2]
  • 'நேர்மையானவர்களை அரசன் மேனிலைக்குக் கொண்டுவர வேண்டும். மனக்குற்றம் உள்ளவர்களை ஆட்சியை விட்டு அல்லது அவர்களது பதவியை விட்டு அகற்றிவிட வேண்டும். இப்படி ஓர் அரசன் நடவடிக்கை எடுப்பானானால், மக்கள் அந்த ஆட்சிக்கு அன்புடன் பணிந்து நடப்பார்கள். அதே போல அடுத்துள்ளவர்களை மகிழ்விப்பார்கள். தூரத்தில் உள்ளவர்களை ஈர்த்துக் கவர்வதும், வசீகரிப்பதும் நல்ல ஆட்சி நீடிப்பதற்குரிய சிறந்த இலக்கணமாகும்; [2]
  • மக்களின் நேர்மையான ஒழுக்க வளர்ச்சிகளுக்கு அரசு எந்தக் காலத்திலும் அலட்சியமாக, அக்கரையற்ற விதமாக இருக்கக் கூடாது. ஒருவேளை அந்த மன்னன் அலட்சியமாகவும், அக்கரையற்றும் இருந்துவிட்டு, சட்டங்கள் மூலமாகவும்; தண்டனைகளைத் தருவதன் வாயிலாகவும், மக்களை அடக்க முயன்றால்; அவர்கள் அவற்றை மீறுவதில்தான் அதிக அக்கரை காட்டுவார்கள்; தண்டனைகளையும் அலட்சியம் செய்வார்கள்! [2]

அறிவின்மை[தொகு]

  • அறிவின்மை உள்ளத்தின் இரவு. ஆனால், அந்த இரவில் மதியுமில்லை. தாரகையுமில்லை.[3]

அறிவுடைமை[தொகு]

  • அறிவைப் பெற்றிருந்தால் அதை உபயோகிக்க வேண்டும், உனது அறியாமையை ஒப்புக்கொள்வது போல, அறிவை அடைந்திருந்தால் போதாது.[4]

இழிந்த மனப்பான்மை[தொகு]

  • மேலான மனிதர்கள் சில சமயங்களில் நேர்மையற்றவராக இருக்கலாம்; ஆனால், இழிவான மனப்பான்மையுள்ளவன் அதே சமயத்தில் நேர்மையானவனாகவும் இருப்பதில்லை.[5]

சிந்தனை[தொகு]

  • சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு: படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.[6]

நேர்மை[தொகு]

  • நேர்மையும் சத்தியமும் ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படையாகும்.[7]

படித்தல்[தொகு]

  • கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன்.[8]

கோபம்[தொகு]

  • கோபும் எழும்பொழுது. அதன் விளைவுகளை எண்ணிப்பார்.[9]

தவறுகள்[தொகு]

  • கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால், விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை.[10]

பழமை[தொகு]

  • எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால், பழமையை ஆராய்ந்து பார்.[11]

மனிதர்[தொகு]

  • உன்னதமான மனிதனுடைய வாழ்க்கைமுறை மூன்று பிரிவாயிருக்கும்; அவன் ஒழுக்கத்தோடு இருப்பதால். கவலையற்றிருப்பான்; அவன் அறிவாளியாயிருப்பதால், அவனுக்குக் குழப்பங்கள் இருக்கமாட்டா அவன் தைரியமாயிருப்பதால், அச்சம் அண்டாது.[12]
  • மேலான மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கின்றது; சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது.

முன்யோசனை[தொகு]

  • தூத்திலுள்ளதைப்பற்றிச் சிந்தனை செய்யாத மனிதன், தன் அருகிலேயே சோகம் தங்கியிருப்பதைக் கண்டுகொள்வான்.[13]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 சி.பி.சிற்றரசு (1953 ஏப்ரல்). சீனத்தின் குரல். நூல் 23-24. மன்றம் வெளியீடு. Retrieved on 21 மே 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 65-66. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 109. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 31-32. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 168-169. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 206. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 262-263. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 304. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கான்பூசியசு&oldid=37352" இலிருந்து மீள்விக்கப்பட்டது