ஆன்மா
Appearance
உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா (Soul), ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- உடல்-அது மண்ணேயன்றி வேறன்று ஆன்மா-அது நித்தியத்தின் முகை ஆகும். -கல்வெர்வெல்[1]
- மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். -கார்லைல்[1]
- ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒருமுறை திறந்து விட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது. -ஹோம்ஸ்[1]
- அறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே. -லாங்பெலோ[1]
- மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும். -ஸெனீகா[1]
- ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறிடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுள் ளது என்பதே உண்மை. -கதே[1]
- ஆன்மா அழிவற்றது என்றும், அதன் வேலை எக்காலத்தும் நித்தியமாகத் தொடர்ந்து நடந்து வருமென்றும் நான் பூரணமாக நம்புகிறேன். இரவில் மறைவதாக நம் கண்களுக்குத் தோன்றும் கதிரவனைப் போன்றது. அது வேறிடத்திற்குத் தன் ஒளியைப் பரப்பவே அது சென்றுள்ளது. - கதே[2]
- ஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறைவாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும். -ஆல்ஜர்[1]
- நாகரிக முன்னேற்றத்திற்கு வகுக்கப்பட்டுள்ள கருவிகளில் எந்தக் காலத்திலும் சான்றோரின் ஆன்மசக்தியே தலைசிறந்ததாகும். - ஹாரிஸன்[1]
- உழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது. -ரஸ்கின்[1]
- ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது. -ஜெரிமி டெய்லர்[1]
- ஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை. -ஸதே[1]
- ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும்.-எமர்ஸன்[1]
- இந்த வாழ்க்கையுடன் நாம் தீர்ந்துவிடுவதில்லை; மரணத்திற்குப் பின் ஒவ்வொன்றும் தன் முந்திய முறைமையை அடைகின்றது. - ரூஸோ[2]
- ஷேக்ஸ்பியரின் கற்பனையும், பேக்கனின் கல்வியும் கலிலியோவின் கனவும் எங்கே இருக்கின்றன? இத்தகைய பொருள்கள் அழிந்து ஒழியக்கூடாது என்று நான் கருதுகிறேன். ஆனால், ஓர் உரோமம் பல நூற்றாண்டுகள் இருக்கின்றது. எகிப்து தேசத்துச் செங்கல் மூவாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது. மனிதனின் மனம் உடலாகிய களிமண்ணுக்குப் பின்னால், எஞ்சி வாழ்கின்றது என்று நம்புவதே எனக்குப் போதும் - பி. கார்ன்வால்[2]
- எது சிந்தனை செய்கின்றதோ, புரிந்துகொள்கின்றதோ, தீர்மானம் செய்கின்றதோ, செயல் புரிகின்றதோ, அது தெய்விகமானது. அக்காரணத்தால் அது அவசியம் நித்திய மானதாகும். - ஸீஸரோ[2]
- நாம் நித்தியமான ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது பெறாமலிருக்க வேண்டும். பெறாமலிருந்தால் நாம் விலங்குகள். ஆதலால், நம் உள்ளே ஆன்மாவைப் பெற்றிருப்பதுதான் நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேற்றுமை என்று நான் கருதுகிறேன். -காலெரிட்ஜ்[2]
குறிப்புகள்
[தொகு]
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 96-97. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.