நூல்கள்
Appearance
நூல்கள் அல்லது புத்தகம் (Books) என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா. -ஸிட்னி ஸ்மித்[1]
- மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை—ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனோ அறிவை—ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான். -மில்டன்[1]
- நல்ல புஸ்தகமே தலை சிறந்த நண்பன் இன்று போலவே என்றும். -மார்டின் டப்பர்[1]
- உண்மையிலேயே நல்ல நூல்கள் காட்டில் மலரும் பூக்களைப்போல இயற்கையானதும், எதிர்பாராத அழகானதும், காரணம் கூற முடியாத பூரணமானதுமான வஸ்துக்கள் ஆகும். -தோரோ[1]
- தன் பெயரை அச்சில் காண்பது சகலர்க்கும் சந்தோஷமே! புஸ்தகத்தில் விஷயம் ஒன்றுமில்லாவிடினும் புஸ்தகத்தைப் புஸ்தகமில்லை என்று யார் கூறுவர்! -பைரன்[1]
- மருந்தைப் போலவே நூல்களையும் விஷயமறிந்தோர் யோசனை கேட்டு உபயோகிக்க வேண்டுமேயன்றி விளம்பரத்தைப் பார்த்தன்று. -ஸ்கிரன்[1]
* எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவியாயும், எப்பொழுதும் இன்பம் தருவதாயும், இன்னல்களுக்கு ஒரு கேடயமாயும் உள்ள ஒரு சுவையை வேண்டிப் பிரார்த்திப்பதானால் “நூல் கற்கும் சுவை” யையே வேண்டுவேன். இந்தச் சுவையும் அதை அனுபவிப்பதற்கு வேண்டிய சாதனங்களும் பெற்றுவிட்டால் ஆனந்தத்திற்கு ஒரு நாளும் குறை வராது. -ஹெர்ஷல்[1]
- இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை. -கார்லைல்[1]
- என்னையா ஏழை என்று கூறுகிறாய்? என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ? -ஷேக்ஸ்பியர்[1]
- தான் படிக்கக்கூடிய அளவு நூல்களை வாங்க முடியாதவன் தரித்திரம் மிஞ்சியவனாகவே இருக்க வேண்டும். -ஆவ்பரி[1]
- தீமையோடு நம்மைப் பழக்கப்படுத்தும் நூல்கள் எல்லாம் தீயவைகளே. -ஆவ்பரி[1]
- ஒருமுறை படிக்கத் தகுந்த அநேக நூல்கள் இருமுறை படிக்கத் தகுந்தவைகளாகவும் இருக்கும். -மார்லி[1]
- சாத்தானுடைய நட்பைத் தரும் நூல்களைப் படிக்காதிருப்பது சாலவும் நன்று. -நீபூர்[1]
- நண்பரைப் போலவே நூல்களும் தேர்ந்தெடுத்த சிலவே தேவை. -ஜயினரியான[1]
- புஸ்தகங்கள் எவ்வளவு நல்லவையாயினும் எப்பொழுதுமே சந்தோஷம் தந்து கொண்டிரா. அறிவு எப்பொழுதும் ஆகாரத்தில் தேடக் கூடியதாக இருப்பதில்லை. -க்ராப்[1]
- சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை. -பேக்கன்[1]
- அறிஞனாகவும் சான்றோனாகவும் செய்வது பல நூல்களைப் படிப்பதன்று, சில நூல்களை முறையாகக் கற்பதே யாகும். -பாக்ஸ்டர்[1]
- அவன் சாமர்த்தியசாலியாக இருக்கலாம் ஆனால் நான் அறிந்தமட்டில் அவன் மூளை வேலை செய்ய முடியாத அளவு அநேக புஸ்தகங்களைத் தலையில் ஏற்றிவிட்டான். -ராபர்ட் ஹால்[1]
- என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன். -மாஜினி[1]
- சான்றோர்களுடைய நூல்களுடனேயே பழகு, சால்பின்றி சாமர்த்தியம் மட்டும் உடையவர்களுடைய நூல்களைக் கையால் தொடக்கூடச் செய்யாதே. -மெல்வில்[1]
- ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும். -லாம்[1]
- படிப்பில் பிரியமில்லாத அரசனா யிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன். -மக்காலே[1]
- எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயார். — நேரு[2]
- தெரிந்ததைச் சொல்லுவதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான். -புதுமைப்பித்தன்[3]
- புத்தகங்கள் மனித சமூகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச் சென்றுள்ள பிதுரார்ஜிதமாகும். அதைத் தலைமுறை தலை முறையாக இனி வரப்போகும் சந்ததியார்களுக்கு அளித்துவர வேண்டும். - அடிஸன்[4]
- புத்தகங்கள் காலம் என்னும் கடலின் கரையில் நிறுத்தப் பெற்றுள்ள கலங்கரை விளக்கங்கள். - இ. பி. விப்பின்[4]
- மற்ற மனிதர்களின் உள்ளங்களுடன் கலந்து நான் என்னை இழந்துவிட விரும்புகிறேன். நான் நடமாடாத நேரங்களில், நான் படித்துக்கொண்டேயிருப்பேன். அமர்ந்துகொண்டே சிந்திப்பது என்னால் இயலாது. புத்தகங்கள் எனக்காகச் சிந்திக்கின்றன - சார்லஸ் லாம்ப்[4]
- உயிருள்ள ஒரு மனிதனைத் தவிர, புத்தகத்தைப்போல ஆச்சரியமானது வேறு எதுவுமில்லை! அது முன்னால் இறந்து போனவர்கள் நமக்களித்துள்ள செய்தி. அந்த ஆன்மாக்களை நாம் பார்த்ததேயில்லை ஒரு வேளை, அவர்கள் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும் எனினும், அந்தச் சிறு காகிதங்கள் நம்மிடம் பேசுகின்றன. பயமுறுத்துகின்றன. நமக்குக் கற்பிக்கின்றன. ஆறுதலளிக்கின்றன. சகோதரர்களைப் போல நமக்குத் தம் இதயங்களைத் திறந்து காட்டுகின்றன. - சார்லஸ் கிங்ஸ்லே[4]
- புத்தகங்கள் ஞானிகள் வீரர்களுடைய இதயங்களை நம் உள்ளத்திற்குப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன. - கிப்பன்[4]
- புத்தகங்களை நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்; சில நூல்களே போதும்.[4]
- என் புத்தகங்கள் என்னை மதுக்கடைகளுக்கும். விளையாட்டிடங்களுக்கும் செல்ல விடாது தடுத்துள்ளன.போப், அடிஸன் முதலியவர்களுடன் பழகியவன் ஷேக்ஸ்பியர், மில்டன் முதலியவர்களின் மௌனமான பேச்சுகளைக் கேட்டவன். அற்பர்களுடனும் தீயவர்களுடனும் கூடியிருக்க விரும்ப மாட்டேன். - தாமஸ் ஹூட்[4]
- ஐரோப்பாவிலுள்ள மணிமுடிகளையெல்லாம் என்னிடம் அளித்து என் புத்தகங்களையும் படிப்பையும் விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டால் நான் அந்த முடிகளை விட்டெறிந்துவிட்டு, என் புத்தகங்களையே போற்றுவேன். - ஃபெனிலன்[4]
- நாம் பெறும் கருத்துகளின் அறிவைச் செயலில் பயன்படுத்தாவிட்டால், நூல்கள் வெறும் பழைய தாள்களேயாம். - புல்வெர்[4]
- எகிப்திய மன்னர் ஒருவர் தமது நூல் நிலையத்தின் வாயிலில், 'ஆன்மாவின் மருந்துகள்' என்று எழுதியிருந்தார்; அப்படி மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.[4]
- எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால், நான் புத்தகங்கள் வாங்குகிறேன்; மேலும் பணம் மிச்சமிருந்தால், நான் உணவும் துணிகளும் வாங்குகிறேன். - எராஸ்மஸ்[4]
- புதிய நூல்கள், வெறியளிக்கும் மது வகைகளைப் போன்றவை. அவை உள்ளத்திற்கு உணவளிப்பதுமில்லை. மருந்தளிப்பது மில்லை. - டி. எட்வர்ஸ்[4]
- புத்தகங்கள் தெளிவாயும். சுருக்கமாயும் இருக்க வேண்டும். - பட்லர்[4]
- புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது - எச் மான்[4]
- உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்பவைகளே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை. - தியோடோர் பார்க்கர்[4]
- புதிய நூல் ஒன்று வெளிவந்தால், நான் பழைய நூல் ஒன்றைப் படிப்பது வழக்கம். - ரோஜர்ஸ்[4]
- முப்பது வயதுக்கு முன்னால் புத்தகங்களை விரும்பாதவன், பின்னால் அவைகளைப் படித்துப் புரிந்துகொள்வது கஷ்டம் - கிளாரண்டன்[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 49. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 274-276. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.